கேட்டேன்! கேட்டேன்!!

இது சில ஆண்டுகளுக்கு முன்நடந்த சம்பவம் ஒன்றைக் குறித்து!

(முழுநிலவு வானெழுந்த நேரம்- மரத்தின்
கிளையிருந்து பாடும் ஒரு குருவி)

மின்னும் வானப் பேரொலி கேட்டேன்
வீழும் எரிகல் சீறல் கேட்டேன்
அன்னை மண்ணில் அதிர்வும் கேட்டேன்
அண்டம் ஆளூம் ஓம் ஒலி கேட்டேன்
இன்பச்சோலை சலனம் கேட்டேன்
இனிதாம் இருளில் வண்டொலி கேட்டேன்
அன்னம் நீந்திட அலைகள் சத்தம்
அசையும் காற்றின் அரவம் கேட்டேன்

தென்னம் ஒலை பின்னால் சத்தம்
திசையில் பெரிதாய் வெடியும் கேட்டேன்
என்னை தாங்கும் தருவின் மண்ணில்
எங்குங் கதறல் அழுகை கேட்டேன்
தன்னை அழிக்கும் தருணம் முன்னால்
தமிழில் கோடி கூக்குரல் கேட்டேன்
தின்னும் தீயில்நாக்கின் வெம்மை
தேகம் கொல்ல தேய்குரல்கேட்டேன்

முன்னும் பின்னும் படபட சத்தம்
மூளும் மரணம் முனகொலி கேட்டேன்
பின்னிக் கால்கள் வீழொலி கேட்டேன்
பேதைகள் கூவிக் கதறக் கேட்டேன்
மின்னல் புகையாய் வானில் ஓடும்
மேகத் தூர்தி தூரக் கேட்டேன்
சின்னா பின்னம் சிதறும் மரங்கள்
செல்லும் வழியில் வீழக் கேட்டேன்

தன்னந்தனியே தவழும் குழநதை
தாயின் உடலைத்தட்டி யெழுப்பி
என்ன நிகழக் கொண்டது அறியா
எழுநீ யம்மா என்றிடக் கேட்டேன்
தென்னை முறியும் சத்தம் கேட்டேன்
தெருவில் பிணங்கள் அனுங்கல் கேட்டேன்
பின்னே ஓலைக் குடிசைகள் எரியும்
பெரிதாய் தீயின் பரவல் கேட்டேன்

கொஞ்சும் தமிழைப் பேசக் கேட்டேன்
குற்றம் கொல்லெனும் கூக்குரல் கேட்டேன்
கெஞ்சும் அலறும் தமிழைக் கேட்டேன்
கேவி அழுவது யாரோ கேட்டேன்
பிஞ்சும் பழுத்த கனிகளை வேழம்
பெருங்கால் நசுக்கும் பிளிறல் கேட்டேன்
நெஞ்சின் அதிரும் துடிப்பும் கேட்டேன்
நேர்வது நிசமா இறைவனைக் கேட்டேன்

அஞ்சும் கெட்டே அறிவும் சோர
அழுதேன் அழுதே அறிவும் கெட்டேன்
வெட்டிக் கொல்வோர் சட்டைகிழித்து
வீழத் துடிக்க ஆழ ரசித்து
கட்டி சுட்டவர் கண்களைக்குத்தி
கத்திப் போடும் கூச்சலும் கேட்டேன்
தட்டிக் கேட்போர் யாரும் இல்லை
தர்மம் எங்கே இறைவா கேட்டேன்

கேட்டேன் கேட்டேன் அழுதே கேட்டேன்
கிளையில் நின்றே கூவிக் கேட்டேன்
வாட்டம் கொண்டு மண்ணில் வீழ்ந்து
வாராய் தெய்வம்என்றும் கேட்டேன்
நாட்டில் எங்கும் இல்லாக் கோரம்
நடக்கும் வகையேன் நவிலாய் என்றேன்
கேட்கும்கேள்வி குழந்தைக் குரலாய்
காற்றில் கரையக் கண்ணீர் விட்டேன்
......

எழுதியவர் : கிரிகாசன் (21-Nov-12, 3:04 am)
சேர்த்தது : கிரிகாசன்
பார்வை : 208

மேலே