இன்னமும் இருக்கிறது..சீலைப்பேன் வாழ்க்கைகள்.

சின்னத் துளசி நானே;
சிறு மஞ்சள் துண்டும் நானே;
செம்பருத்திப் பூவைப் போல...
சிந்தூரச் சிரிப்பும் நானே.

வாழை வளர்ந்தது போல்
வளையாமல் நான் வளர்ந்தேன்.
நாற்றுச் சிரிப்போடு
நடை பழகி நான் வளர்ந்தேன்.
வீசும் காற்றோடு...
வீதியெல்லாம் நான் திரிந்தேன்;
பேசும் கிளியாய் நான்...
பெரும் வரமாய் அலைந்தேனே.

குட்டிக் கருப்பெறும்பாய்...
சுறுசுறுப்பாய் சுற்றினேனே..
கறுப்புச் சிறு ஆடாய்..
கழனியெல்லாம் துள்ளினேனே.
காராம்பசு கன்றாய்...
பேரழகாய் வளர்ந்தேனே.
வடித்த சிலை போல
வாலிபத்தை சுமந்து நின்றேன்.

அலைந்த காற்றையெல்லாம்...
அடைத்துவைத்த பெட்டி போல...
பேசும் கிளியோட...
நாக்கறுத்த கத்தி போல...
வண்ணத்துப் பூச்சி மேல...
வளர்ந்து நின்ற நத்தைக் கூடாய்...
வயசுக்கு வந்து நின்னேன்....
என் வருத்தத்தை என்ன சொல்வேன்?

விளைஞ்சு நின்ன கதிரையெல்லாம்
சொந்த வீடு தேடிச் சேர்ப்பான் அப்பன்.
விளைஞ்சு நின்ன பொண்ணு என்னை...
வேற வீடு தேடி அனுப்பி வைச்சான்.
வண்டு தீண்டாப் பூவாத்தான்
வயசாகிக் கன்னி நின்னா..
வால் முளைச்ச சாதிசனம்...
வழக்காடும்னு...வாங்கல் வைச்சான்.

நாளும்...கோளும்...பார்த்து...
நொட்டாங்கு தினம் பேசும்...
சுற்றம் சேர்த்து...
சேவலுக்குக் கொண்டை போல
சொத்திருக்கா....
கணக்குப் பார்த்து...
நேரான ஆளான்னு...
நேர் செலுத்திப் பார்க்காம..
கோணலாய் ஒரு ஆள் பார்த்து....

ஆடு பலியான
அய்யனார் சாமி முன்னே...
பூனை குறுக்க போன
புண்ணிய நேரம் பார்த்து...
குடியா...குடி குடிச்சு...
போதையில தாலி கட்டி...
என்னைப்...
பலியாடா அனுப்பி வைச்சான்
என்னைப் பெத்த பெரும் சாமி.

கடமை முடிஞ்சதுன்னு....
கருத்தொன்னை சொல்லிப்புட்டு..
தீராத நோவு தீர்ந்த
வலிக்காரன் சிரிப்பாட்டம்...
சோறு தின்னுக் கைகழுவி
கலைஞ்சு போகும் ஜனம் போல
கலைஞ்சு போயிக் களிப்பாச்சு
நான் பொறந்த திருக் கோயில்.

கருப்பு மனசுக்குள்ளும்..
கரும்பாக் கனவிருக்கும்னு...
"வேலிமுட்டி" குடிச்சு ஆடும்
என் அப்பன் "வெறுமை"க்குத் தெரியாது.
பூவாய் நான் இருந்த
"பொன் வயித்து"க்கும் புரியாது.
அண்ணிமார் கதை போல
இப்ப ஆயிப் போச்சு என்கதையும்.
அம்மாக் கதை கேட்டு
அதுவாச்சு என் வாழ்க்கை.
இடியாப்ப நுனி போல
இடுங்கிப் போச்சு என் வாழ்க்கை.
சீலைப் பேன் சேர்ந்த...
சிடுக்காச்சு...என் வாழ்க்கை.
சிந்தும் மூக்கோட...
சீர்வரிசை மூணு பிள்ளை.
நொந்து வெந்தாலும்...
நோக்காடு என் வாழ்க்கை.

பெண்ணாய்ப் பிறந்த விதி..
ஏழேழு பிறப்பிற்கும்..
கள்ளிப் பால் கனவு காணும்...

இன்னமும் தூங்கி விழும்
பெரும் சாமி வாழும் ஊரில்.

*******************************************************
நண்பர் கலை கேட்டுக் கொண்டதற்காக இந்தப் பாணிக் கவிதையை முயற்சி செய்திருக்கிறேன்.
கிராமத்து வாழ்க்கையோடு எனக்குப் பரிச்சயம் கிடையாது. நாட்டார் வழக்குக் கவிதைகள் படித்து
இந்த முயற்சியைச் செய்திருக்கிறேன். இதிலுள்ள
பிழைகளைச் சுட்டிக் காட்டினால் திருத்திக் கொள்வேன்.

அன்புடன்...ரமேஷ்.

எழுதியவர் : rameshalam (21-Nov-12, 11:16 am)
பார்வை : 212

மேலே