அப்பாவை தேடும் பிள்ளை.

தூங்காமல் கதை கேட்க
தூக்கத்திலே நீர் கதைக்க

தூளியிலே ஆடிக்கொண்டு
துஷ்டத்தனம் செய்ய ஆசை!

பக்கத்திலே நீர் இருந்து
பார்த்து ரசிக்க வேணுமப்பா!

அட்டகாசம் செய்துவிட்டு
அடி உதைக்கு பயந்துகொண்டு

அரக்கப்பரக்க ஓடி ஒளிய
அப்பா உம் முதுகு வேண்டும்!

பள்ளிக்கூடம் அழைத்துச்செல்ல
பாடங்களை சொல்லித்தர

வண்டியிலே ஊர்சுற்ற
வகைவகையாய் வாங்கி தின்ன

அப்பா நீர் இங்கு வேண்டும்
அன்பால் நான் நனைய வேண்டும்.

கையோடு கைகோர்த்து
காலாற நடைபோக

கண்டகதை பேசிவிட்டு
கடற்கரையில் கால் நனைக்க

எப்போதும் என் அருகில்
நீங்காது நீர் வேண்டும்!

நான் கண்ட கனவெல்லாம்
கனவாகிப்போகுதப்பா!

நீர் இங்கு இல்லாமல்
சிறகிருந்தும் பறக்காமல்
சிறைகைதி வாழ்க்கைப்பா!

ஆசையாய் அம்மாவின்
அன்பாலே வளர்ந்தாலும்

அப்பா உம் தோள்சுகம்
அது என்ன நான் அறியேன்!

கருவறையில் கொண்டுவிட்டு
காணாமல் போய்விட்டீர்.

கதறிக் கொண்டு வெளிவந்தேன்.
கண்டுவிடும் ஆசையிலே.

எல்லோரும் இருந்தனர்
என் அருகில் பரவசமாய்

என் தகப்பன் எங்கோயோ?
எவரிடத்தில் நான் கேட்பேன்?

நான் தேடாத பொருளெல்லாம்
என்னருகில் வீற்றிரிக்க

நான் தேடி வந்த தந்தையோ
தேசம் விட்டு தேசமாம்!

பணம் காசு பார்த்ததெல்லாம் போதுமப்பா!
உம் பரிசம் மட்டும் எனக்கு இப்ப வேண்டுமப்பா!

சீக்கிரமா வீட்டுப் பக்கம் வாங்க அப்பா!
சிரிப்பிழந்த அம்மா முகம் மலரட்டுமே!

-ஹுஜ்ஜா

எழுதியவர் : hujja (27-Nov-12, 7:44 pm)
சேர்த்தது : hujja (தேர்வு செய்தவர்கள்)
பார்வை : 196

மேலே