காதலை சொல்லிவிடு
குளத்தில் விழுந்த நிலவாய்
அழகாகத்தானிருக்கிறது
உன் மௌனம் .
பனித்துளிகளால்
மூடிமறைக்கப்பட்ட
மல்லிகை இதழ்களாய்
உள்ளுக்குள்ளே ஜொலிக்கிறது
நீ உதிர்க்காத புன்னகை
மழையும் வெய்யிலும்
சந்தித்துக்கொண்ட வேளையில்
சேலை மாற்றிக் கொண்ட
வானச்சோலைப்போல
வண்ண வண்ணமாய்
எனது கனவுகள்
உனக்கான
காவியங்களுக்காக
புதிய வார்த்தைகளின்
படையெடுப்புகளோடு
புறப்பட்டுக்கொண்டிருக்கும்
எனது கற்பனை
என்றாலும்
ஸ்பரிசங்களை மறந்த தென்றலாய்
பூக்களை மறந்துவிட்டு
பூனைகுட்டியுடன் விளையாடும்
நந்தவனம் உனது பார்வைகளில்
எனது மூங்கில்கள்
துளையிட்டுக்கொண்டபோதும்
இசைத்தலுக்கான உன் இதழ்
அசைவுகளுக்காக காத்திருப்புகளில்
நாற்காலிப்போட்டு
அமர்ந்திருக்கிறது நாகரீகம் .
அலைகளின் சிரிப்புக்கும்
கரைகளின் சிலிர்ப்புக்கும்
இடையிலான தூரத்தில்
இதயத்தை வைத்துவிட்டு
ஒரு ஓரமாய் நின்று கொள்கிறேன்
உனது விழிகளிலும்
உறவாடிக்கொண்டிருக்கும்
கனவுகளில் நானும்
எனது நாகரீகமும் இசைத்துக்கொண்டிருக்கும்
பாடல்களை கேட்டுக்கொண்டே
உறங்கிக்கொண்டிருக்கும் நீ
விழிப்புக்கும் உறக்கத்தும்
நடுவில் வருகின்ற இடைவேளையில்
கனவுகள் காயப்படாமல் உன்
காதலை சொல்லிவிட்டுப்போய்விடு
வாழ்க்கையை நான் வாழ்ந்து கொள்கிறேன் .