மாறாதிந்த மருதக் காதல்...!
சலசலத்து ஓடும் பொய்கை கரையிலே
நாரைகளும் அன்றில்களும்
தத்தம் பெடைகள் நிமித்தம்
அளவளாவிக் கொண்டிருந்தன…!
துள்ளிக்குதிக்கும் மீன்கள் பிடிக்க
அங்கே தாவிக் குதித்தது நீர்நாயொன்று…
எருமை கிடாக்கள் ஆற்றுநீர் பருக
அடைக்கலமாக ஒதுங்கியது தாரா கூட்டம்…!
இப்படியான...
முன்பனி காலத்தின் வைகறை பொழுதினிலே,
வயல் சூழ் மருதமொன்றின் நிலாவொளியில்
தன்னிலை மறந்து களித்திருந்தனர்
நெல்லரித்த தலைவியும்,
கிடாவிட்ட தலைவனும்…!
தலைவியின் பால் மாறா
மையல் கொண்ட தலைவன்
அவள் முகம் தாங்கி இங்ஙனம் வினவுகிறான்...!
தாமரை முகத்தாளே…!
தாவும் மரையின் மிரட்சியை கண்களில் கொண்டவளே…
கட்டுக்கடங்கா காளையென தறிகெட்டு திரிந்திருந்தேன்…
பாவை உன்னை கண்ட நொடி அடைந்து விட மோகம் கொண்டேன்…
மையல் விழி தையலே உன்னை சூழ்ச்சியால் கொய்ய விழைந்தேன்…
இட்டுகதைகள் பலபேசி உன்னை என்மடியில் வீழ வைத்தேன்…
மன்னிப்பாயா அஞ்சுகமே,
எத்தருணம் உன்னை என்னில் தருவித்ததென
தகுந்த காரணங்கள் உரைப்பாயோ?
மையிட்ட கண்ணுக்கு சொந்தக்காரி
காரிருள் கொண்டைக்காரி
கலகம் விளைவிக்கா தாபத்தோடு
தன் தலைவன் மடி சாய்ந்து கொட்டுகிறாள் வார்த்தைகளை…!
நீ ஐராவதமேறிய இந்திரனும் இல்லை,
கிரகங்கள் பீடிக்கும் சந்திரனும் இல்லை…
கற்பில் சிறந்த இராமனுமில்லை,
அழகில் சிறந்த மன்மதனுமில்லை…
வீரம் சொரிந்த அபிமன்யூ இல்லை,
விவேகம் நிறைந்த தருமனுமில்லை…
கலகம் புரியும் நாரதனுமில்லை,
காரணங்கள் வேண்டா கடவுளுமில்லை…
நீ ஊரனாய் இருந்திருந்தால் உன்பால்
எனதன்பு சாய்ந்து விடுமென சிந்தையில் சிந்தித்தாயா?
இல்லவே இல்லை கண்ணாளா…!
நீ வேந்தனே ஆயினும்
என்விழி வீச்சு உன் பக்கம் சாய்ந்திடாது...
பின் வேறென கவர்ந்ததென வினவுகிறாயோ?
சொல்கிறேன் கேள்...
ஆநிரை சூழ் நின் உலகிலே
நின் தனித்தன்மை ஒன்று கண்டேன்
யாதெனில் உனக்கு நிகர் நீயாய் நின்றாய்
கயல்விழியாள் எனக்கு எல்லாமுமாய் நிறைந்து நின்றாய்
நெஞ்சத்து பாசறையில் நீயே முழுதுமாய் என்னைக் கொண்டாய்
காரணங்கள் இனி கேட்டிடாதே,
காமுறுவோம் காலமெல்லாம்…!
கயமொன்றில் மலர்ந்திருந்த ஆம்பலும் வெட்கியது,
கழநியின் மேல் செந்நெல்லும் தலை தாழ்ந்தது,
இவர்களின் மாறா காதல் கண்டு...!