பெருசு..! – பொள்ளாச்சி அபி.

அன்றைக்கு ஏனோ வெக்கை மிக அதிகமாக இருந்தது.மாலையில் மழை வருமோ..? வந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தபடியே நடந்துகொண்டிருந்தபோது, செருப்புகளை மீறியும் தரையின் வெப்பம் பாதங்களில் தகித்தது. சற்று நேரம் ஏதேனும் நிழலில் ஒதுங்கினால் என்ன.? அப்போதுதான் அருகிலிருந்த அந்தப் பூங்காவின் நினைப்பு வர கால்களை எட்டிப்போட்டேன்.

அதிக ‘நாகரீகமில்லாத’ அந்த ‘நகரத்தின்’ ஒரு ஓரத்தில் இருந்த அந்தப் ‘பூங்கா’,கடந்த சில மாதங்களுக்கு முன்புவரை கரடு முரடாய்த் தான் இருந்தது. கட்டு விரியன் உட்பட கடிய விஷமுள்ள பாம்புகளும்,பல்லிகளும்,வழக்கம் போல ஒரே மாதிரியாக கத்திக் கொண்டிருக்கும் தவளைகளும்,அதற்குப் பின்பாட்டே போல கரையும் சில காக்கைகளும் தான் அதிகமாக அங்கு வசித்துவந்தன.

இதைவிடக் கொடுமை காக்கைகளுக்கு உறவுகளாய் சில கழுகுகளும் அங்குள்ள மரங்களின் தாழ்வான கிளைகளில் அமர்ந்து கொண்டு,ஏதோ எவரெஸ்ட் மலையின் உச்சியைத் தான் மட்டுமே முதன் முதலாய் தொட்டு விட்ட ஜம்பங்களுடன்,சதா காலமும் தன் கண்ணில் பட்ட சிறு பறவைகளை மிரட்டிக் கொண்டே இருந்தன.

பாவம்,கொஞ்சும் கிளிகளும்,பாடும் குயில்களும், அழகுப்புறாக்களும்,சிட்டுக்குருவிகளும் அந்தக் கழுகுகளின் பார்வையில் பட்டபாடுகள்.. துன்பங்கள்.. சொல்லி மாளாது.!

இதெல்லாம், வழிப்போக்கனாய் வந்த பெருசு,அந்தப் பூங்காவிற்குள் நுழையும்வரை நீடித்தே இருந்த நிலை.. என்ன வேண்டுதலோ தெரியவில்லை. அங்கேயே தங்கிவிட்டது அந்தப் பெருசு.

பெருசு வந்தபின் செய்த முதல்காரியம், பூங்காவிலிருந்த ஆள் நுழைய முடியாத அளவில் அடர்ந்திருந்த,புதர்களையும்,தவளைகள் நீந்திக் கொண்டிருந்த சகதிக்குட்டைகளையும் நீக்கியதுதான்.இதனால் தவளை கள் காணாமல் போக,பின்னாலேயே பாம்புகளும் ஒருவழியாக மறைந்து தொலைந்தன.

தரையில் இருந்தவற்றை சீர்படுத்திவிட்ட பெருசுக்கு,தலைக்குமேல் உட்கார்ந்து கொண்டு,மிரட்டிக் கொண்டிருந்த கழுகுகளை எப்படி விரட்டுவதென்று யோசித்துக் கொண்டிருந்தபோதுதான்,பெருசுக்கு திடுமென்று ஒரு யோசனை தோன்றியது.

சிறு பறவைகள் வசித்துக் கொண்டிருந்த கூடுகள் இருந்த மரங்களின் மீது சிரமப்பட்டு ஏறி,அவற்றைச் சுற்றிலும் பாதுகாப்பான முறையில் மரத்தடுப்புகளை அமைத்தார். முதலில் சந்தேகப்பட்ட சிறு பறவைகள் அந்தத் தடுப்புகள் தங்களுக்கு பாதுகாப்பானவையே என்று உணர்ந்த பின்,மிகச்சுதந்திரமாய் அதில் உலாவின.

சிறு பறவைகளையே விரட்டி,விரட்டி தனக்கு இரையாக்குவதும்,தனது வக்கிரமான எண்ணங்களுக்கு வடிகாலாய் அவற்றைச் சீண்டி விளையாடுவதுமாய் இருந்த கழுகுகளுக்கு இப்போது தாங்க முடியாத கோபம்.!. தடுப்புகளை உடைக்கமுடியாத இயலாமை,கையாலாகாத்தனம் எல்லாம் சேர்ந்து தாங்கள் அவமதிக்கப்பட்டதாய் உணர்ந்தன.

இதனால் வெறிகொண்டலைந்த கழுகுகள்,ரகசியமாய் பேசிக் கொண்டு வந்த முடிவின் படி,பெருசு என்ற மரியாதையோ,அபிமானமோ இன்றி, அவரைத் துரத்தித் துரத்திக் கொத்தத் துவங்கின.அந்த அஃறிணை ஜீவன்களிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்.?

கழுகுகளின் இந்தத் தாக்குதலை எதிர்பார்க்காத பெருசு,சற்று நிலை குலைந்தாலும், கழுகுகள் தின்பதற்காக,இறந்தவற்றைத் தேடிப் போகாமல் உயிர்ப்புடன் இருக்கும் சிறு பறவைகளுக்கு தொல்லை செய்யவேண்டாம் என பலமுறை எச்சரிக்கை நடவடிக்கை எடுத்த பெருசின் செயல்களை கழுகுகள் புரிந்து கொள்ளவில்லை. அவை அதன் போக்கிலேயே தொடர..பெருசு, பின்னர் சுதாரித்துக் கொண்டார்.

பெருசு தனது வாழ்க்கையில் எத்தனை பேரை பார்த்திருப்பார். போயும் போயும் இந்தப் பன்னாடைகளுக்காகவா அவர் பயந்து கொள்வார். அவர் சலசலப்புக்கு அஞ்சாத பனங்காட்டு நரிபோல.., இப்போதெல்லாம் தனக்கு அருகாமையில் வரும் கழுகுகளை,நன்றாக அவதானித்து,தாக்கத்தான் வருகிறது எனில்,கையில் இருக்கும் குச்சியைக் கொண்டு,சொடேர் என ஒரு விளாசல்..,சில கழுகுகள் இந்தத் தாக்குதலில் மரணித்தும் போயிருக்கின்றன.

அதனை அப்படியே தூக்கிக் கொண்டுபோய்,அதற்கு மிகவும் ஏற்ற இடமான சாக்கடையில் வீசிவிடுவார் பெருசு. அதையும் மற்ற சில கழுகுகளும்,காக்கைகளும் சென்று பார்ப்பதும்,ஒப்பாரி வைப்பதுமாக நாட்கள் போய்க் கொண்டிருந்தது.

இப்போது பரவாயில்லை.பொதுமக்கள் அந்தப்பூங்காவிற்கு வருவதும், குழந்தைகளோடு நடைபோடுவதும் சுலபமாகியிருந்தது.இன்னும் சில கழுகுகள் மட்டும்தான் போகவர பெருசை முறைத்துக் கொண்டு,தனது பிணந்தின்னும் கூரியஅலகை அங்கும் இங்கும் தேய்த்து பதமாக்கிக் கொண்டு,எப்போதடா கொத்திக் கிழிக்கலாம்..? என காத்துக் கொண்டிருக்கின்றன.

மாறும்..தனது செய்கையால்,சிந்தனையால் கிழடு தட்டிப்போன இன்னும் சில கழுகுகள் மட்டுமே இந்தப்பூங்காவில் மீதமுண்டு.அவையும் ஒரு நாள் சாக்கடைக்குப் போகும்.!

பெருசு,இது எதைப்பற்றியும் கவலை கொள்ளாமல்,புதிய பறவைகளுக்கு,நல்ல கூடு அமைத்துத் தருவதில் முனைப்பாக இருக்கிறார்.இயற்கையை நேசிக்கும் அந்தப் பெருசுக்கு,அது உவப்பான வேலைதான்.! சிறு பறவைகளும் பெருசை நினைக்கும்போதெல்லாம், ஒரு முறை குரலெழுப்பி தங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்ள மறப்பதில்லை.

இப்போது வெயிலின் உக்கிரம் சற்று குறைந்திருந்தது.மெதுவாய் என் வழியே நடக்கத் தொடங்குகிறேன்.

எழுதியவர் : பொள்ளாச்சி அபி -B +ve (6-Dec-12, 9:11 pm)
பார்வை : 192

மேலே