என் ஆசை நாயகனின் வடிவம் கேளடி என் தோழி!!!

நிறத்திடம் எனக்கு காதல் இல்லையடி
உயரத்திடமும் நாசுக்கான நாட்டம் எதற்கடி.

மதி மயக்கும் ஆணழகன் வேண்டாம்
ரௌத்திரம் பழகிய ஆண்மகன் வேண்டும்

இயந்திரத்திலே முத்தெடுக்கும் மீனவன் வேண்டாம்
இதயத்தை ஆட்கொள்ளும் தூயவன் வேண்டும் .

தலைவணங்கா வீர திருமகனின் நாவில்
தமிழ் மட்டுமே உலாவர வேண்டும்.

வெற்றிக் கனியை ருசி காண
தோல்வி விதைகளை விதைத்தவன் வேண்டும் .

மாற்றாள் பாரா தூய கண்ணிலே
கனவிலும் என்னையே பார்த்திட வேண்டும்.

மனதின் எண்ணங்களை வரி பிறழாமல்
விழி வழியே படித்திட வேண்டும்.

என் ஆசை மூட்டைகளை அவிழ்த்து
கண்முன்னே படையல் போட்டிட வேண்டும்.

தன்மானத்தை உயிராய் கருதுபவன் வேண்டும்.
என்மானங்காக்க உயிரை எடுப்பவன் வேண்டும்.

அன்பு உள்ளங்களை அரவணைத்திட வேண்டும்.
பண்பறியா அறிவீனத்தை விரட்ட வேண்டும்.

இயற்கையை காதலிக்கும் காதலன் வேண்டும்.
அச்சத்தை அச்சுறுத்தும் அஞ்சாநெஞ்சன் வேண்டும்.

மொத்தத்தில் செல்லம்மாளாய் நானிருப்பேன்.
என் பாரதியாய் அவன் வாழ்ந்திட வேண்டும்.

எழுதியவர் : சுமி (7-Dec-12, 10:07 pm)
பார்வை : 287

சிறந்த கவிதைகள்

மேலே