[377 ] உடன்பிறப்புக்கு ஒன்றுசொல்வேன்!
அன்பாய்க் கூடுங்கள்
அணைத்து வாழுங்கள்!
அவரவரின் திறமைக்கு
அனுமதித்துக் கைகொடுங்கள்!
வலது இடதெனவே
வழிபிரித்து நடவாதீர்!
எல்லோரும் உடன்பிறப்பாய்
என்றென்றும் இருந்துழைப்பீர்!
வேறுபாடு கண்டு
வெகுண்டெழுதல் விட்டிடுவீர்!
கூறுகளைப் பார்க்காமல்
கூர்த்தமதி கண்டமைவீர்!
தாறுமாறாய்ப் பேசுவதைத்
தவிர்த்திடுவீர்! உடன்பிறப்பே
ஏறுகிறான் என்றெண்ணி
இதயத்தில் தாங்கிடுவீர்!
தேகங்கள் உள்ளமட்டும்
தேவைகளும் தீராது!
மோகங்கள் குறைத்து
மோதுவதைத் தவிருங்கள்!
தாகங்கள் விடுத்துத்
தள்ளிநின்று வழிவிடுங்கள்!
ரத்தத்தின் ரத்தத்தால்
சித்தத்தை இழக்காதீர்!
மொத்தத்தில் உடன்பிறப்பில்
முன்னில்லை!பின்னில்லை!
நிலவும் சூரியனும்
நிலமுள்ள வரையுண்டு!
இலவு காத்தகிளி
என்றிருக்க மாட்டீர்கள்!
செலவு நாட்டுக்கு!
சேர்வதுநம் வீட்டுக்கு!
புலரும் நாளெல்லாம்
புதுக்கவிதை பாடிடுவீர்!
பலமும் ஒற்றுமையில்!
பகிர்வும் ஒற்றுமையில்!
====