இது ஏழாம் திணை..! பொள்ளாச்சி அபி
சிகை..
குழம்பித் தவிக்கும்
மனிதனுக்கு கருவி..!
நெற்றி..
நமக்கு நாமம் போடக்
காத்திருக்கும்
அரசியல்வாதியின்
நல்ல மைதானம்..!
புருவம்
அடித்த கொள்ளையை
நினைக்க உயருவது..!
கண்..
அவன் சொத்துக்களை
அளக்கும்போதெல்லாம்
சிவப்பது..!
காது..
வாக்குறுதிகளை
கேட்பதற்காகவே
படைக்கப்பட்டது..!
மூக்கு..
நுகர்வோர்
அடிக்கடி
உடைபட்டுக்கொள்வது.
உதடு..
அசடு வழிவதை
அடிக்கடிக் காட்டுவது.
பல்..
ஆதாயம் வேண்டியே
அடிக்கடி காட்டுவது..!
கழுத்து..
கடன்காரனின்
துண்டுகளுக்கு
அடைக்கலமாவது..!
விரல்..
ஐந்து வருடங்களுக்கு
ஒரு முறை
அழுக்குப் படுவது..!
இடை..
தேர்தலாய்
அவ்வப்போது
பதவியிலிருப்பவனைப்
பயப்படுத்துவது.!
பாதம்..
அயல்நாட்டில்
காலடி பதிக்க
அரசியல்வாதிக்குதவுவது..
மொத்தத்தில்..
அவனும்-அவன்
சார்ந்த இடமும்
ஜனநாயகம்..!
இது ஏழாம் திணை..!
-------------------
தோழர் வினோத் கண்ணன் அவர்களுக்கு நன்றி.அவர் வரைந்த "ஆறாம் திணை" கவிதை,எனக்குள் ஓட்டிய குறுக்குசால் இது.!