உல்லாசமாய் ஒரு பயணம்
உல்லாசமாய் ஒரு பயணம்
(கவிதை)
இங்கிதமாய் இங்கோர்; யதார்த்தத்தைச் சொல்கிறேன்!;
வாழ்க்கையே ஒரு நெடிய பயணம்…..
அதன் வாசல் தோறும் எத்துனை பயணம்!
அதர்ம வேசியையும் அக்கிரமத் தாசியையும்
ஊழித் தாண்டவம் ஆடவிட்டு
ஆலயப் பொந்திற்குள் அலங்காரமாய் ஒளிந்திருப்பது
ஆண்டவனின் ஊமைப் பயணம்!
சிசுக்களின் திசுக்களில் நச்சு நீர் பாய்ச்சி
ஜனன வாசலில் மரணசாசனம் வரைவது
அசுர மனிதர்களின் தீமைப் பயணம்!
காவிக் கூடாரத்தில் காம ஒலிம்பிக் நடத்தி
வக்கிரக் கோப்பைகளை வரிசையாய் அடுக்குவது
போலிச் சாமியார்களின் பொல்லாங்குப் பயணம்!
கல்வி தரும் ஆசிரியைக்குக்
கத்திக் குத்து தருவது
மாணவனின் கொலைவெறிப் பயணம்!
ஆற்றுப் படைகளை சேற்றுப் படைகளாக்கி
அந்தாதிகளைப் பந்தாடி..
ஏலாதிகளை ஏலம் விட்டு
கலம்பகங்களைக் காயப்படுத்தி…
நிகண்டுகளை நிர்வாணமாக்குவது
வித்தைத் தமிழர்களின்
சுயம் மறந்த இலக்கியப் பயணம்!
அன்னியத் துணி மீது
அக்கினி உமிழ்ந்த அஹிம்சை தேசத்தில்
சந்துகள் தோறும் சந்தை விரிப்பது
சைனாப் பொருட்களின் மலிவுப் பயணம்!
ஜலதோஷமெனில் ஜப்பானுக்கும்…
தலைவலியெனில் தாய்லாந்திற்கும்
மருத்துவப் பயணம் போகும் மந்திரிகளிடம்
கும்பிப் பசிக்கு மனு நீட்டுவது
குடிசைக்காரனின் நம்பிக்கைப் பயணம்!
நமீதாவின் கால் வெடிப்பிற்கு
நாலு பக்க கவலைக் கட்டுரை எழுதுவது
நரகல் பத்திரிக்கையின் நச்சுப் பயணம்!
மின்சாரம் தொலைத்த தமிழனுக்கு
இனி என்றுமே இருட்டுப் பயணம்!
இலவசங்களின் நிழலில்
இளைப்பாறி மகிழ்வது
இளிச்சவாய்ப் பயணம்!
பற்றாக்குறை பட்ஜெட்டுகளின்
பரிதாபப் பயணம்!
ஊழல்களின் உற்சவப் பயணம்!
லஞ்சங்களின் லாகிரிப் பயணம்!
வாழ்க்கையே ஒரு நெடிய பயணம்…..
அதன் வாசல் தோறும் எத்துனை பயணம்!