தீக்குச்சிகள்
தீபங்களின்
ஒளிர்தலுக்கான
தீயின் சிற்றுண்டி
சிகரெட்டுகளின்
இறுதிக் கிரியைகளில்
கொள்ளி வைக்கும்
தத்துப்பிள்ளை
சுடரின் அழகில்
மயங்கும் விட்டில்களுக்கு
அழகு நிலையற்றது
என உணர்த்தும்
முன்னுதாரணம்
பெட்டிப்பாம்பாய்
அடங்கிக் கிடக்கும் ஜடம்
ஒரு தீண்டலில்
பெட்டிக்குள்ளே
அடக்கி வைக்கும் காலன்
குத்து விளக்கேற்றி
குதூகலம் காணும்
கொண்டாட்டங்களின் போது
அக்னி குளித்து
அழிந்து போகும் தியாகிகள்
பதர்த்துப் போனால்
நீரும் ஏறி மிதிக்கும்
பதமாய் இருப்பின்
காடும் அஞ்சி நடுங்கும்
தீக்குச்சிகள்
தலைக்கணங்கள்
நிலைப்பதில்லை
என்பதற்கான இலக்கணம்
மெய்யன் நடராஜ்