மார்கழி கோலங்கள்.... மலரும் நினைவுகள்...!!

ஆதவன் கரம் நீட்டி
அமைதியான நிலத்தினை
அன்புடன் தீண்டும் முன்னே

ஆவலுடன் விழித்தெழுந்து
அதிகாலை நீராடி
அழகான கோலமிட

கூடிடுவோம் மார்கழியில்
என் இரு அக்காவும் நானும் 

தினம் தினம் ஒருக் கோலம் 
தீவிரமாய் பயிற்சி செய்து
அடுத்த வீட்டில் போட்ட கோலம்
அதை தவிர்த்த புதுக் கோலம்
தேர்ந்தெடுத்து வைத்திடுவோம்

அக்காவுக்கு பெரிய வாசல்
மற்ற இருவருக்கும் எதிரில் உள்ள
பழைய வீட்டின் இரண்டு வாசல்
என்ற போதும்
சுழற்சியில் மாற்றிக் கொள்வோம்

அழுத்தமான புள்ளிகள்
அளந்தெடுத்த இடைவெளி என
பாட்டி வந்து மூவருக்கும்
பாங்காய் வைத்து தருவாள்

தீர்க்கமான கோடுகள்
நேர்த்தியான வளைவுகள் என
தெளிவான கோலங்கள்
தரையிலே  வரைந்திடுவோம்

பாகற்காய் கோலம் இலை கோலம்
கிளி கோலம் ரோஜாப்பூ கோலம்
கம்பி கோலம் விளக்கு கோலம்
அத்தனை அத்தனை ஆசையாய்
எத்தனை எத்தனை கோலங்கள் ...!!!

ஊதா பச்சை மஞ்சள் சிவப்பு
இன்னும் பல நிறங்கள் கொண்டு
வாசல் கோலமதற்கு  உயிரூட்டி
நிமிர்ந்தெழுந்து பார்க்கும் போது
பொங்கி வரும் பெருமிதம்.... 

ஆடியிலே பாட்டியோடு
கூடிச் சென்று தோட்டத்திலே 
வதைத்திட்ட பூசணி விதை
முளை விட்டு இலை விட்டு
பூத்து குலுங்கியிருக்கும்

அந்த பூவெடுத்து எங்களுக்குள்
பிரித்தெடுத்துக் கொண்டு

மேலும்

மாட்டு கொட்டைகைக்கு சென்றங்கே
சாணமதை எடுத்துருட்டி

வாசலிலே பூசணிப்பூ
வைத்து விட்டு வந்திடுவோம்

பள்ளி செல்லும் முன்னே
பல முறை வாசலுக்கு
ஓடி ஓடி வந்து வண்ண
கோலமதை கண்டு செல்வோம்

இன்றும் அந்த நிகழ்வுகளை
எண்ணி எண்ணி பார்க்கையிலே
எல்லையில்லா ஆனந்தம்
கொள்ளை கொள்ளை பூரிப்பு
ஒட்டிக் கொண்டு விடுகிறதே....!!

கோடி கோடி கொடுத்தாலும்
கிடைக்காத பொற்காலம் மீண்டும் கூடி
கோலமிடும் கோலமது
நடப்பது தான் எக்காலம்....??!!!

என் மனதிலுள்ள நினைவுகளை அப்படியே பதிவு செய்து விட்டேன்.
சற்று நீளமான வர்ணனையாகித் தான் போனது. பொறுமையுடன் படித்தோர்க்கு என் நன்றிகள்....!

எழுதியவர் : (14-Dec-12, 12:41 am)
பார்வை : 1116

மேலே