சர்க்கார் ...! இந்தியாவில் ஏழே... ஏழு கோடி பேருக்குத்தான் வேலை இல்லையா சர்க்கார்..?

சர்க்கார் ...! இந்தியாவில் ஏழே... ஏழு கோடி பேருக்குத்தான் வேலை இல்லையா சர்க்கார்..?

ஆனானப்பட்ட அமெரிக்காவிலேயே இரண்டு கோடி பேருக்கு வேலை இல்லை என்று சொல்கிறது ஒரு கருத்துக் கணிப்பு குரூப்பு, எனவே தான் அமெரிக்க அரசு இந்தியாவிலும் சீனாவிலும் பால் காவடியில் இருந்து பன்னீர் காவடி வரை தூக்குகிறது. அடுத்து பறவை காவடி எடுக்கிறார்களா இல்லையா என்று பாருங்கள். தம்மாத் துண்டு நாடுகளை அமெரிக்காவில் இருந்தபடியே, எங்க ஆளுகளுக்கு ஒழுங்கா வேலை கொடுப்பதற்கு ஏற்பாடு செய் என்று போன் போட்டு மிரட்டுகிறது.அந்த மிரட்டலின் சத்தம் தானோ ஆங் சாங் சூ கீ க்கு கிடைத்த அமெரிக்க முத்தம் என்று கருதலாமா..?

இந்நிலையில் தான் இந்தியாவில் ஏழு கோடி பேர் வேலையில்லாமல் உள்ளனர் அல்லது போதுமான வேலை இல்லாமல் உள்ளனர் என்றார். மத்திய அமைச்சர் மல்லிகா அர்ஜுனா கார்கே அவர்கள்.

புதிய வேலை வாய்ப்புகளை விரைவாக ஏற்படுத்த வேண்டும் என்பதில் மத்திய அரசு முனைப்பாக உள்ளது. பொது மக்களின் வருமானத்தை பெருக்கி, அவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த அரசு பல முயற்சிகள் மேற்கொள்கிறது என்றார் அமைச்சர். கூடவே, நாட்டின் மொத்த உற்பத்தி, உள்கட்டமைப்பு வளர்ச்சி,ஏற்றுமதி அதிகரிப்பு போன்றவற்றால் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகின்றன என்றார்.

நாட்டின் மக்கள் தொகை, 120 கோடி என கூறப்படுகிறது. இதில், ஏழு கோடி பேருக்கு வேலையில்லாத நிலை காணப்படுவது வளரும் நாடான இந்தியாவிற்கு மோசமான பொருளாதார விளைவுகளை ஏற்படுத்தும் என பொருளாதார வல்லுனர்கள் கூறுகின்றனர் - இது செய்தி..!

வேலையில்லாமல் அல்லது போதுமான வேலை இல்லாமல் இருக்கிறார்கள் இந்தியாவில் ஏழு கோடி பேர் என்றால் என்ன அர்த்தம் என்று யாராவது சொன்னால் நல்லது தான். வெறும் ஏழு கோடி பேருக்கு வேலை இல்லாத காரணத்தால் இந்தியாவின் வளர்ச்சி மிக மோசமாக பாதிக்கப்படும் என்று எந்த பொருளாதார அறிஞர் சொன்னார் என்று சொல்லியிருந்தால் அவரின் பேருகளை அறிந்து கொண்டிருக்கலாம். ஒருவேளை மாண்டேக் சிங் அலுவாலியா சொல்லி, அவர் பேருகளை நாம் எதற்கு பகிரங்கமாக சொல்ல என்று கூட இருக்குமோ..?

சிறு வணிகங்களில் அந்நிய முதலீடான வால்மார்ட், டெஸ்கோ மற்றும் கேரிபோர் இவர்கள் வந்தால் வேலை வாய்ப்பு உருவாகும் என்ற மட்டி அடித்து டிங்கர் பார்க்கும் வேலையாக இருக்குமோ..? இருக்கலாம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

சங்கிலிக்கருப்பு

எழுதியவர் : சங்கிலிக்கருப்பு (14-Dec-12, 4:46 pm)
சேர்த்தது : சங்கிலிக்கருப்பு
பார்வை : 186

மேலே