பத்து மாசம் காத்திருந்தேன்...........
தன் அத்தை வயிற்றில் இருக்கும் பொண்ணை நினைத்து, நாலு வயசு மாமன்காரன் எழுதும் காதல் கவிதை.... ஹ ஹ ஹா
______________________________________
இளமஞ்சளு வெயிலுல,
கரு இருட்டுல அடஞ்சவளே,
மாமன்காரன் நானிருக்க,
மையிருட்டக் கண்டு உனக்கு பயமேனோ..
எனக்குத் தெரிஞ்ச தமிழ வச்சு,
எழுத்துக் கூட்டி எழுத்துக் கூட்டி,
ஏக்கத்தோட காதல் கவிதையொன்னு,
எழுதி வச்சு காத்திருக்கேன்..
மாசம் ஒன்னு காத்திருந்தேன்,
பாசம் கலந்த நேசத்தோட..
மாசம் ரெண்டு காத்திருந்தேன்,
மாற்றம் ஏதும் வாய்க்கவில்ல..
மாசம் மூணு காத்திருந்தேன்,
முழுசா நீ இன்னு வளருலனாங்க..
மாசம் நாலு காத்திருந்தேன்,
என் காலு கீழ வேறு மொழைக்க..
மாசம் அஞ்சு காத்திருந்தேன்,
என் பிஞ்சுக் காதல் பழுத்துப் போக..
மாசம் ஆறு காத்திருந்தேன்,
யாருமில்ல உன் வருகையச் சொல்ல..
மாசம் ஏழு காத்திருந்தேன்,
மல்லாக்கப் படுத்து நான் புரண்டழுதேன்..
மாசம் எட்டு காத்திருந்தேன்,
என் இளமை வீணாகப் பாத்திருந்தேன்..
மாசம் ஒன்பது காத்திருந்தேன்,
மனம் வெம்பி வெம்பி வேர்த்திருந்தேன்..
மாசம் பத்து நடக்குதிப்போ,
மாமனப் பாக்க வந்திடு முத்தே..
எனக்கு வயசு நாலு ஆச்சு இப்போ,
வருஷம் பத்து இன்னும் ஆகட்டும்..
வயத்துல உன்ன அடச்ச அத்தைய,
வஞ்சம் வச்சு பழி தீத்துடுவேன்..