உரிகின்ற உண்மைகள்..!
வானமாய் விரிந்திருக்கும்
பச்சை வயல்வெளி..
கதிர்களை முத்தமிட்டு
கவிந்திருக்கும் காலைப்பனி..
தூரத்தே ஒரு புள்ளியாய் தெரியும்
பேச்சியம்மா கோயில் கோபுரம்..
குடிமனைகளையும் கோபுர வாசலையுமிணைக்கும்
வயலோர ஒற்றையடிப் பாதை...
சிலுசிலுத்து ரகசியம் பேசும்
வளைந்த தென்னைகள்..
கலகலத்து சின்னக் கைகள் தட்டும்
வல்லைவெளி அலைகள்..
இன்னும் அப்படியே தான் இருக்கிறது
பழைய நினைவுகள் அழிந்துபோகாமல்..
ஆனால்
அழிந்து போகின்றது என்
அன்னைமண்ணின் தனித்துவம்.
ஆறு முழத்தில் என் அன்னை கட்டியிருந்த
ஆடை உருவப்பட்டு அரை நிர்வாணமாய்...
யாருடைய கைகள் தனை நோக்கி நீளும் என ஏங்கி
தவித்திருக்கிறாள் என் தாய்.
கண்களில் ரத்தம் சிந்த
அவளிடம் நான் பயணப்படும் அதேநேரம்
அடுத்த வீட்டு அன்ரிக்கு நீ
அன்பளிப்பு கொடுத்துக்கொண்டிருக்கிறாய்.
தவறில்லையாயினும்
தாய்க்குத்தான் முதலிடம்.
தயவுசெய்து என்னுடன் புறப்படு.
நான் மட்டுமல்ல நீயும் அவள் பிள்ளைதான்..!