பெண்மையின் சுதந்திரம்

(இது பெண் விடுதலை அல்ல--போராட்டம் நடத்துவதற்கு..
அனைவரும் அவரவராக முன்வந்து பெண்பாதுக்காப்பை அவளின் உரிமையாக்க தத்தமது பங்களிப்பை கட்டாயம் தரவேண்டும் )


தில்லி மருத்துவ மாணவிக்கும் நேர்ந்த வன்புணர்வுக் கொடுமையால் என் மனதில் எழுச்சி பெற்ற சிந்தனை ஓட்டத்தின் விளைவே இந்த படைப்பு.

சமுதாய ஏற்றத்தாழ்வுகளுக்கு முழுக்க முழுக்க ஆண்வர்க்க சிந்தனையும் ஆணாதிக்க சிந்தனையுமே காரணம் எனும் வாதம் சிந்தனையில் எழுகிறது.

படைப்பில், இயல்பிலேயே பெண் கருவை சுமப்பதால், அவளால் வேட்டையாட (பொருள் ஈட்ட) முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே ஆண் மட்டுமே, அவள் கருவை சுமக்கும் அந்த குறுகிய காலத்திற்கு இருவருக்குமாக வேட்டையாட (பொருள் ஈட்ட) வேண்டிய கட்டாய சூழல் ஏற்படுகிறது. அந்த குறுகிய காலக்கட்டத்தின் தற்காலிக தன்மையை புரிந்து கொள்ளும் மனப்பக்குவம் ஆணுக்கு இல்லாததால், அவன் அவளை

தனக்கு பாரமாகவோ,
இளக்காரமாகவோ,
தன்னை விட வலிமை குறைந்தவளாகவோ,
அவளை தனக்கு அடங்கியவளாக இருக்கவேண்டும் என்றோ,
அவளுக்கு சுகம் / வசதி தரும் வலுக்கட்டாயத்திற்கு தாம் ஆட்படுத்தப்பட்டு இருப்பதாகவோ,
அந்த குறுகிய காலத்திலும் அவள்தன் சுய சிரமம் பாராது தன்னுடன் வேட்டையாட (பொருள் ஈட்ட) வேண்டும் என்றோ,
.தனக்கு ஏற்படும் உழைப்பின் இழப்புக்கு, (குறைவான வேட்டையை சரிகட்ட (பொருள் ஈட்டலை ஈடு கட்ட) வேறொரு துணையை (பூத உடலின் உந்து விருப்ப சக்தி காரணமாக குறிப்பாக பெண் துணையை) ஏற்கலாம் என்ற எண்ணத்திலோ


பெண்ணை இரண்டாம் பட்சமாக நோக்கத் தொடங்கினான். அதன் காரணமாகவே அவள் முதற்கண் பொருளாதாரத்தில், பின்பு சமுதாயத்தில் அதன் பின் மதங்கள் சம்பந்தப்பட்ட சங்கதிகளில், அரசியலில், விஞ்ஞானத்தில், மற்றும் இன்னும் பிற துறைகளில் பின்தங்க வைக்கப்பட்டாள்.


அதனாலேயே, அவன் தனது வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கும் போது தனக்கு சேவை-செய்யும் சிந்தனை-உள்ள பெண்ணாக விரும்பத் தொடங்கினான். அதை நியாயப்படுத்த, தனது பொருள் ஈட்டும் திறனை முதன்மைபடுத்தினான். அதில் அவளை பின்தங்க வைத்தான். அதற்கு பக்க பல தர்க்கமாக பொருளாதார பாதுகாப்பு எனும் போர்வையை போர்த்தத் தொடங்கினான்.
அவன் செய்த இந்த தத்ரூப மாயையை ஏற்றுக்கொண்ட பெண்ணும் அவ்வாறே தனது துணையை தேர்ந்தெடுக்க அவனின் ஆதிக்க உணர்வுக்கு சம்மதம் தெரிவித்து அதே வழியில் செல்ல தொடங்கினாள்.


அதன் அடுத்த கட்டமாக பாதுகாப்பு உணர்வு எனும் போர்வையில் அவளை வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் ஏதோ ஒரு ஆணை சார்ந்து இருக்கும் கட்டாய சூழலுக்கு அவளை தள்ளினான். அதிலும் முதன்மையான பக்கபல தர்க்கமாக பொருள்முதல் வாதத்தையே வைத்தான்.


அவளை அடைவதற்கு இந்த தர்க்கமே தடையாக இருந்த போது அவளை அடைய, பொருளை அவளுக்கு அர்ப்பணம் செய்து அவளை தனதாக்கிக் கொண்டான்.
பின்பு அதிலும் பொருளுக்கு முதலிடம் கொடுக்கும் இவன் அதே பொருளுக்கு அவள் முதலிடம் கொடுக்கத்தொடங்கிய போது, அவள் பார்வையில் அதை தவறெனவும், தன் பார்வையில் அது சரி எனவும் வாதிட்டான்.
இவன் பொருள் அர்ப்பணித்து அவளை உரிமையாக்கி கொண்டால் அதை காதல் என்றான். அதுவே அவள் பொருள் வாங்கி கொண்டு இவனை சேர்ந்தால் அதை அற்பத்தனம் என்று கீழ்தரம் காட்டி, அவளை வேசி எனவும் இழிவுபடுத்தினான்.


அதில் எதிர்வாதம் செய்யவிடாது கற்பு எனும் ஒழுக்க நெறியை கண்டுபிடித்து அதையும் அவளுக்கு மட்டுமே போர்த்தி விட்டான். எனவே பொருள் பெற்று இவனை சேரும் பெண்ணுக்கு பரிந்து பேசி வாதம் செய்பவர்களையும் இழிநிலை காட்டி அவர்களையும் மரியாதை, மதிப்பு கௌரவம் காரணம் காட்டி விலக செய்தான்.



இந்த சிந்தனை பெண்மனதில் ஆழமாக பதிந்து விட்ட்தால், பொருள் வாங்கி ஆண்மகணை சேரும் எண்ணம் தவறு என்பதையே அவள் தன்வழி கொண்டாள்.


ஆண் இதையே தனக்குச் சாதகாமாகப் பயன்படுத்த வரதட்சணை எனும் மாயச்சொல்லை கண்டுபிடித்து, தன்னை அடைய அவள் பொருள் தரும் ஒரு சூழ்ச்சியை கண்டுபிடித்தான்.. இந்த சூழ்ச்சியில் அவளை சிக்க வைத்து பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய நிலைக்கு தள்ளி, அவளை பிறப்பின் பாரமாகவே படம்போட்டு காட்டினான்.
அதனால், பிறப்பில் இருந்தே அவளின் மீது பொருள் ஏக்கம் ஏற்றி, அதை சுமையாக்கி, அவளையே அவளின் பிறப்பை சுமையென உணரவைத்து, வாழ்வில் அவளை கண்ணீரில் மூழ்கடித்தான். அவளின் பிறப்பையும், உறுப்பையும் அவளையே வெறுக்க வைத்தான். அவன் மட்டும் அதை மகிழ்வுடம் ரசித்து சுவைத்தான்.


காமத்தைப்பற்றி இவன் பேசுவது இயல்பு எனவும், அவள் பேசினால் வெட்கங்கெட்டத்தனம் எனவும் விதி வகுத்தான்.
அவளை அச்சம், மடம், நாணம், பண்பு எனும் கற்பனை வாதங்களால் வதைத்தான். புணர்வு உணர்வு இவனுக்கு வரும்போது அவள் மறுத்தால் வேறு துணை தேடுவது இயல்பு எனவும், நியாயம் எனவும் வாதாடினான்.


அதே உரிமையை அவளுக்கு மறுத்து, அவள் அதை செய்ய துணியும்போது அதை கற்புக்கு புறம்பானது எனவும் கூக்குரலிட்டான். பலதுணைகள் தேடுவது இவனின் பிறப்புரிமை எனவும் ஆர்ப்பரித்தான்.


இவன் புதிதாக செய்யும் எந்த ஒரு சட்டமும் இவனைக் கட்டுப்படுத்தாமல் அவளை மட்டுமே கட்டுப்படுத்துமாறு மிகவும் கவனமுடன் பார்த்துக் கொண்டான். புதிதாக பிறக்கும் எதற்கும் தனது அடையாளத்தை முதன்மையான சின்னமாக்கி, அதில் குறையேன்றால் அதை இழிவு என்றான். அதை அப்பன் பெயர் தெரியாத அநாதை என்றான்.


அந்த பிறப்பை அநாதையாக்கிய இதே ஆண்மகனை சாடமறுத்து அந்த தவற்றையும் பெண்மேல் சுமத்தி, அவள்தான் அவ்வாறு நிகழா வண்ணம் கவனமாக இருக்க வேண்டும் புதிய பொறுப்பு விதியை வகுத்தான். வந்து பிறந்த பிறப்பின் இழிநிலைக்கு அவளே காரணம் எனவும், அவளின் நடத்தையைப் பற்றிய அவதூறுகளையும் பரப்பத் தொடங்கினான். அதே ஒழுக்கத்தை தனக்கு போதிப்பதில் இருந்து தீவிர விதி விலக்கு பெற்றான்.


ஆணை நெருக்கமாக சார்ந்திராத எந்த ஒரு பெண்ணையும் இழ்நிலை உணர்வுக்கு ஆளாக்கி அவள் வாழ்வதையே நரகமாக்கினான். அதற்கு சமுதாயம் எனும் கற்பனையான பயத்தை உருவாக்கி அவளை எல்லா இடத்தில் இருந்தும் ஓடஓட விரட்டத் தொடங்கினான். அவனை எப்போதும் சார்ந்திருக்கும் ஒரு சூழலை பயத்தின் மூலமும் ஏற்படுத்தத் தொடங்கினான். அவள் சார்ந்திருக்கும் ஆணைத்தவிர அனைவரும் காட்டுமிராண்டிகள் என்பதை நடைமுறையாக்கினான்.


அந்நிய ஆடவரின் தயவு தேடுதலையும் சாடி, தூற்றி நின்றான். அதிலும் பெண்ணின் நடத்தையை மட்டுமே எச்சரிக்கையாக இழிநிலைப் படுத்தினான். அவனது நடத்தை விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதாக வைத்தான்.
வாழ்க்கைத்துணை இறந்தால் மறுமணம் இவனுக்கு மட்டும் கௌரவம் என்றும், அதை பிறருக்கு வாழ்வு கொடுக்கும் பெருந்தன்மை செயலாகவும் சித்தரித்தான். பெண்ணுக்கு கைம்பெண், விதவை என்று பெயர் வைத்து புனித குடும்ப வாழ்வுக்குத் தகுதியில்லாதளாகக் காட்டி அவளை தீண்டத்தகாதவள் ஆக்கினான். மறுமணம் விரும்பும் பெண்ணை காமப்பிண்டம் எனப் பழித்தான். அவளை அவளின் எண்ணத்திலேயே கூச்ச்செய்தான்.


அவளின் இயற்கை படைத்த காலத்தால் சீரான (மாதவிடாய்) உடல்கழிவையும் இழிவென கற்பித்து குடும்பத்தில் தீண்டாமையை பழக்கினான். அதற்கு கடவுளையே சாட்சி வைத்தான். கடவுள் சம்பந்தப்பட்ட சங்கதிகளில் இருந்து, கோயில் பூசை, திருவிழா, சடங்கு, இவற்றில் இருந்து அவளை தள்ளி வைக்க, மங்கலம், அமங்கலம் எனும் பதம் பிரிக்கும் வஞ்சகத்தை கண்டுபிடித்தான். அதை சரிவர கடைப்பிடிக்காத பெண்ணை ஒழுக்கமற்றவளாக சித்தரித்தான்.



அவளை அசிங்கம் என அருவருக்க வைத்தான். நவீன காலத்தில் அதை சுகாதாரம் எனும் போர்வையில் ஒளித்தான். ஆனால் அதற்கான அடிப்படை வசதிகளை பகிரங்கமாக மறுத்தான். அடிப்படை சுகாதரம் வேண்டுவதே வெட்கக் கேடென அவளை ஒடுக்கினான். அதன் மூலம் அவளது சுதந்திர இயக்கத்தை கட்டுப்படுத்தும் ஆதிக்க உணர்வு கொண்டான். அவளின் ஆடையில் கரை கண்டால் இழிவென களங்கப்படுத்தினான். அவளை கூனிக் குறுக வைக்கும் எல்லா நடவடிக்கைகளிலும் ஈடுபட்டான்.



அவளை உடலால் நலிந்தவள் என்றான். தன்னை வலுவுள்ளவன் என்றான். அதனால் பொது வாழ்வில் அவள் ஈடுபடுவதை தவிர்த்தே வந்தான். அவளிடம் இருப்பிடம் வீடென்றான். அவளின் பணியிடம் அடுப்படி என்றான். அதற்கு துணைசேர்க்க குழந்தை வளர்ப்பெனும் பொறுப்பு என்றும், உணவளித்தல் தலையனும் இலக்கணம் சேர்த்தான். அதே குழந்தை வளர்ப்பிலும் மராமரிப்பிலும் தன் பங்கை உறுதி செய்வதை மறுத்தான். இதில் அவனை சேர்த்தால் இழிவென பழித்தான். இதில் அவன் பங்களிப்பை கேட்டால் அதை அழிவென ஒழித்தான். ஆனால் அவனது பொருள் ஈட்டலில் அவளின் பங்களிப்பை தனது கௌரவம் என ஊரறிய பறை சாற்றினான்.


வாழ்வில் எல்லா தருணத்திலும் அவளின் பங்களிப்பு கடமை எனவும், எப்பொழுதும் மறுத்தல் இவனின் பிறப்புரிமை எனவும் வாதிட்டான். அவளின் உரிமை எதுவும் இல்லை எனவும் இவனின் கடமை என்பதே அபத்தம் என்றும் நிலை நிறுத்த முயற்சித்தான்.


சமீபத்தில் பொருள் ஈட்டலும் அவனின் பெருந்தன்மையாக சாதிக்க முற்படுகிறான். அவனின் திறமைக்கேற்ப மட்டுமே பொருள் ஈட்ட முடியும் எனவும், அதற்குள் குடும்பத்தின் கட்டமைப்பை பெறுவது அவளின் தலையாயக் கடமை என்பதை கட்டாயமாக்கவும் முயல்கிறான். அதையும் மீறி அவள் பொருள் ஈட்ட எத்தனித்தால் அவளை ஒதுக்கிவிட சித்தமாய் இருப்பதாய் மிரட்டுகிறான். அதற்கு சமுதாயம் எனும் மாயை ஒன்றை துணைக்கு அழைத்து வழக்காட விடுகிறான்.


இதுவரையில் கண்டவற்றில் உண்மை இல்லையென புரிதல் இருப்பின் கீழ்காணப்போகும் கேள்விகளுக்கு விடை கிடைக்குமா?


ஒரு பெண்ணுக்கும் சுய உரிமையை நிலை நாட்டும் சில விடைகள் தேவை.

1. அவளுக்கு சொத்து உரிமையை நிர்ணயிக்கும் சுதந்திரம் கிடைக்குமா? (சொத்துரிமை கிடைக்குமா என்பதல்ல கேள்வி)

2. அவளுக்கு சுயமாக பொருள் ஈட்டுவதை நிர்ணயம செய்யும் உரிமை கிடைக்குமா?

3. அவளின் சுகாதாரத்திற்கு (மாதவிடாய்) பொது இடங்களில் வசதி கோரும் உரிமை அடிப்படையாக்கப்படுமா? (வசதி கோருவதே பெரும்ம்பாடாக இருக்கும்போது, அதை கோரும் உரிமைதானே கேட்க முடியும்! வசதியா கேட்கமுடியும்? ஆடைகளில் கறை படிந்தால் வெட்கக்கேடெனக் கருதும் இழிநிலை மாறுமா?)

4. அவளின் சுகாதார நாட்களில் அவளுக்கு இழைக்கப்படும் தீண்டாமை கொடுமை மாறுமா? இயற்கை படைத்த சுகாதாரத்தில் மதச்சடங்குகள் பெயரால் தீண்டாமை ஏன்? அந்த நாட்களில் கடவுளை தொழுவதிலும், குடும்பத்தில் விளக்கேற்றுவதிலும் உரிமை மறுக்கப்படுவது ஏன்?

5. அவளின் வயிற்றில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஆண் சார்பு கட்டாயமாக்கப் படுவதில் இருந்து விடுதலை கிடைக்குமா? (தகப்பன் பெயர் தெரியாவிடில் இழிநிலைக்கு தள்ளப்படும் வற்புறுத்தல் ஏன்)

6. பொருள் சார்ந்த இணைதலில் (வரதட்சணை கொடுத்து வரன் தேடுதல்) இரு சாரார்க்கு பொது என வகுக்கப்படுமா? (இருவரும் பொருள் ஈட்டும் போது, சமுதாயம் எனும் பெயரிலோ, உருக்கமான உணர்வு, தாயன்பு எனும்பெயரிலோ பொருளோடு அவளை ஒட்டியே இருக்க செய்யும் முயற்சிகள் கைவிடப்படுமா? நகை, வீட்டு சாமான்கள் என்பவை தன் பிறந்த வீட்டில் இருந்து கொண்டுவந்தால்தான் கௌரவம் எனும் நிலை மாறுமா?)

7. அவள் சார்பு ஆண்கள் தவிர, அந்நிய ஆடவர்கள் காட்டுமிராண்டிகள், அவர்களுடன் பழகுவதில் எச்சரிக்கை தேவை எனும் இழிநிலை மாறுமா? தற்காப்புக்காக சித்தப்பா, சகோதரன், மகன், பேரன் போன்ற சார்பு நிலை உறவாக அந்நிய ஆடவரை விளிக்கவேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்படும் பைத்தியக்காரத்தனம் மாறுமா? (அவ்வாறு எச்சரிக்கை நிலை பெண்ணுக்கு மட்டும் சுமத்தப்படுவது ஏன்? தவறு செய்யத் துணிகின்றன ஆணுக்குக் களங்கமோ, அசிங்க உணர்வோ ஏற்படுத்தப் படுவது இல்லை ஏன்?)

8. ஒழுக்கம் என்பது இவளுக்கு மட்டுமே, தவறினால் கேள்வி கேட்கப்படுவது இவள் நடத்தையில் மட்டுமே எனும் அல்லல் நிலை மாறுமா?

9. பொருள் கொடுத்து உறவாடலில், விபச்சாரி எனும் அவப்பெயர் மாறுமா? பொருள் கொடுத்து உறவாடும் ஆணை விபச்சாரன் என்று அழைக்காத போது பெண்ணுக்கு மட்டும் இந்த இழிநிலை பெயர் ஏன்? அல்லது பொருள் பெற்று உறவாடும் பெண்கள் சமூகத்தில் இழிநிலைக் கண்ணோட்டத்தோடு பார்க்கபடுவது மாற்றப்படுமா?

10. எவரையும் வசைச் சொல் பேசும்போது பெண்ணின் பிறப்புறுப்பு மற்றும் சார்நிலை பெண்களின் இழிநிலை புணர்தல் சொல்லி வசை பாடுதல் மாறுமா? (வசை பாடும்போதும் ஆண்களை வசை பாடுவது போன்ற சாயலில் உண்மையில் அந்த ஆடவனின் சார்பு பெண்களே வசைபாடலுக்கு ஆளாகின்றனர்) ஆணை வசைபாடும்போது “உன் மனைவியையே கூட்டிக் கொடுப்பாயோ? என்பதிலும், ஆனால் அதே இடத்தில் ஒரு பெண்ணை வசைப்பாடும்போது “ஆளை மயக்கி செயல் சாதித்தாயோ? என்பதிலும் இறுதியாக பெண்மையே சாடப்படுகிறது. ஆண்மை இதில் இருந்து தப்பிக்க வைக்கப்படுகிறது)

கர்ப்பப் பை சுமப்பதற்கு இத்தனை பெரிய தண்டனையா பெண் குலத்திற்கு? அது என்ன சாபமா மனித குலப் படைப்பிற்கு—பெண் ஒவ்வொரு சூழலிலும் பாதுகாப்பு பெற முடியாத நிலைக்கு தள்ளப்படுவதற்கு?


மேற்கண்டற்றிற்கு நேர்மையான விடை கிடைக்கும் நாளில் மட்டுமே பெண்ணுக்கு உண்மையான சுதந்திரம் கிட்டியதாக கருதப்பட முடியும். அதுவரை இந்த மனித சமூகத்தில் செய்யப்படுபவை எல்லாம் பெண் விடுதலை எனும்போர்வையில் செய்யப்படும் கபட நாடகமே.

பெண் சிந்தனை என்றுமே தெளிவாகவே இருக்கிறது. ஆண் கற்பனையாக உருவாக்கிய மாய உலகத்தில் அவனது சட்டதிட்டங்களை அப்படியே ஏற்று கொண்டு வழிநடக்கிறாள். எப்போதும் பெருந்தன்மை மனப் பான்மையோடு தான் இருக்கிறாள். தன்னை விட எல்லாவித்த்திலும் தகுதி குறைந்த ஆணை ஏற்றுக் கொள்ள என்றுமே அவள் தயங்கியதிலை. தன்னை விட குறைந்த படிப்பு, குறைந்த சம்பளம், குறைந்த உயரம், குறைந்த வயது குறைந்த பொருளாதாரம், குறைந்த சமூக அந்தஸ்து இவற்றில் எதன் அடிப்படையிலும் அவள் எந்த ஒரு ஆணையும் ஒதுக்குவதேயில்லை. ஆணுக்கு வரும் ஆணாதிக்க வீர்ய உணர்வுகளால்தான் சச்சரவுகள் உருவாகின்றன.


இவற்றை விளக்கி சொல்லவும் அமல்படுத்தவும், அரசியலில், ஆளுமையில் பெண்கள் காலடி எடுத்து வைத்து அதிகாரம் அவர்களின் கையில் இருக்கும் சூழலில் கூட,
ஒரு பாரதியும், ஒரு பெரியாரும் ஒவ்வொரு காலக் கட்டத்திலும் பிறக்கவேண்டும் என்பது கட்டாயமானால் அது வருந்த வேண்டிய நிலையே.


அகில இந்திய மாதர் சங்கம், மாநில அளவிலான மாநில மாதர் சங்கங்கள் கொஞ்சம் சிந்திக்கட்டுமே. காட்டுமிராண்டித் தனம் நிகழும்போது மட்டும் குரல் கொடுக்கத்தானா இந்த அமைப்புகள்?

நீங்கள் உங்கள் கால்களை முன்னெடுத்து வையுங்களேன், ஆண் சமுதாயம் இயல்பாகவே வற்புறுத்தப்படும் அதை நிறைவேற்ற!

எழுதியவர் : மங்காத்தா (26-Dec-12, 1:30 am)
சேர்த்தது : மங்காத்தா
பார்வை : 470

மேலே