கையாலாகாத கடவுள்களும்...வெத்து வேட்டு விஞ்ஞானமும்

கையாலாகாத கடவுள்களும்…வெத்து வேட்டு விஞ்ஞானமும்…
(26.12.2012 : சுனாமி நினைவு நாளுக்காக)

அடுத்தடுத்து ஆலயங்கள் அமைத்தாய்…..
அனுதினமும் பூசைகள் புரிந்தாய்…..
அருட்பெருஞ் சோதியென்றாய்…..
தனிப்பெருங் கருணையென்றாய்…
அனாதைப் பிணமாய் மணலில் புதைந்தாயே..
ஆழிப் பேரலையில் … சோழிச் சிதறலாய்!

கடலின் சக்தி முன்
கந்தன் சக்தி கந்தலாகுமென்றால்
கந்த சஷ்டிக் கவசமென்ன
கடைவாய்ப் பற்களுக்கான கடும் பயிற்சியா?

வேக அலை முன்
விக்னேஷ்வரன் பலம் வீணேயென்றால்
விநாயக தோத்திரமென்ன
வெறும் வாய்க்கான
அப்பமோடு அவல் பொரியா?

கோவர்த்தன கிரியைக்
குடையாக்கிய கோபாலன்
கொத்துக் கொத்தாய் மனிதன்
செத்து மடிகையில்
கோபியருடன் கொஞ்சிக்
கொண்டிருந்தானா?…இல்லை
பாஞ்சாலிக்குப் பட்டுச் சேலை
நெய்து கொண்டிருந்தானா?

வரிசை வரிசையாய் சவங்களை
வார்த்திருந்த வேளையில்
வடிவேலன் போயிருந்ததெங்கே?
வள்ளியுடன் அந்தப்புரத்திற்கா?….
தெய்வானையுடன் தேனிலவிற்கா?

வெறி கொண்ட அலைகள்
வேதாளமாகிப்
பலி கொண்ட நேரத்தில்
பரமசிவனென்ன பார்வதிக்குப்
பேன் பார்த்துக் கொண்டிருந்தானா?…
இல்லை
தருமிக்குத் தர தப்புத்தப்பாய்
பாட்டெழுதிக் கொண்டிருந்தானா?

அட..மெய்ஞ்ஞானம்தான் ஏமாற்றியது...
விஞ்ஞானமாவது காபபாற்றியதா?

வரும்..வராமலும் போகுமென
வாய் ஜாலம் பேசும் வானிலை ஆராய்ச்சி
அந்தக்
கருப்பு நிமிடத்தில் காணாமல் போனதா?…இல்லை
இண்டர்நெட்டில் த்ரிஷாவைத்
தரிசித்துக் கொண்டிருந்ததா?

அழிவிலும் மனிதநேய வெளிப்பாடு..ஆம்..
நிவாரண வேள்விக்கு
நாலப்புறமிருந்தும் நைவேத்தியம்

பள்ளிக் குழந்தை தொட்டு
பாரந்தூக்குவோர் வரை நீட்டிய நேசக்கரம்….
பித்த ஆன்மீகத்தை விட..
வெத்து அறிவியலை விட…அற்புதமானது…

இனி
ஆலயங்களில் தூங்கும்
அதுகளைத் தூக்கி விட்டு
நேயங்காட்டும் சக மனிதனை
நிரந்தரமாய் அமர வைப்போம்
நெஞ்சார பூஜிப்போம்

-----------------------------------------------;

முகில் தினகரன்
கோவை

எழுதியவர் : முகில் thinakaran (27-Dec-12, 4:48 pm)
பார்வை : 165

மேலே