தொட்டாச்சிணுங்கி!!

பள்ளிப் பருவமதில் பாழ்காடுதனிலே - நான்
தேடித்தொலைந்ததெல்லாம்
தொட்டாச்சிணுங்கி செடியொன்றே..

முட்புதர் நடுவில் அழகாய் ஒரு சிறுசெடி
தினமும் எனக்காய் காத்திருக்க,
மாலைவேளைமட்டும் எனக்கு நேரமிருக்கும்
அதனை தரிசிக்க...

என்வரவில் அதன் பூரிப்பு
என்கருவிழிக்குள் மட்டும்
அடங்கிப்போகும்…

ஆசைவார்த்தைகள் பேசுமுன்
தொட்டுக்கொள்ளும் ஆசை
தினமும் முந்திக்கொள்ள,
தொடத்தொட ஏனோ அது வெட்கித்து
சுருங்கிப்போகும்...

பேசும் ஆசைகள் எல்லாம்
என்னோடே அடங்கிப்போக
அதன் முதல்நிலை காணுமாசை
மறுபடியும் மேலோங்கி நிற்கும்…

நிமிடங்கள் மணிகளாகி
சூரியனை விரட்டிவிட
ஆசைகள் மட்டும் பரிதாபமாய்
என்னோடே வீடு திரும்பும்...

ஆகாரமும், படிப்பும்
தொண்டையோடு தங்கிவிட,
நாளைய தொடுதலில் ஆசைகள் மட்டும்
தினமும் மனதோடு கலந்து நிற்கும்...

கோடை மூடுபனியிலும்,
மார்கழி அடைமழையிலும்,
சிலிர்த்து நிற்கும் அதன் அழகு
என் சிந்தனையில் செய்த மாற்றத்தை
என் உணர்வுகள் அடிக்கடி பறைசாற்றும்...

காலவித்தியாசத்தில் அது பருவமடைந்ததை,
வெண்மையோடு ஊதா சார்ந்த,
வர்ணப்பூ ஒன்றின் மூலம் எனக்கான அழைப்பாய்
நானும் ஏற்றுக்கொண்டேன்...

அன்றைய தொடுதலின்
அதன் சிணுங்கல்கள்
அதுவரை,
அதன்மீது நான் காணாத புதுவகை...

வேலைப்பளுவோடு இரண்டு நாட்கள்
நேரம் போதவில்லை,
மூன்றாம்நாள் என் உயிர் சிலிர்க்கும் நொடி
உறைந்து நின்றது...

நிலத்தின் உரிமையாளன்
வீடுகட்டும் நோக்கத்தோடு ,
புற்செடியெல்லாம் சிதைத்து
நெருப்பிலே இட்டுவிட்டான்...

தொட்டசினுங்கியுடனான
என் முதல் காதல்,
ஆடம்பர வீடொன்றின் அடித்தளத்தினுள்
தோல்வியாய் முடிந்தது.......

தொடத்தொட சிணுங்கி மடிந்த அந்த
இழைகளிலே நான் தேடித்தேடி
தொலைந்தது என்னவோ
இதுவரை கேள்விக்குறிகளே..

இருப்பினும் அந்த நொடி இனிமை
இன்னும் என்மனதில் அப்படியே இருக்கிறது...

நான் உனை இழக்க…
(I MISS U)

எழுதியவர் : முஸ்தாக் அஹமட் (27-Dec-12, 4:53 pm)
பார்வை : 279

மேலே