தாய் மனசு

பச்சிளம் பாலகனாய்
உன்னிடம் பால்குடித்த
ஞாபகம் இன்றில்லை!
உயிர் கொடுத்த நாளிலிருந்து
உணவு கொடுத்தாய்!
தும்மலோ இருமலோ
வந்து விட்டால்
உன் உறக்கம் கெடுத்தாய்!
எனக்கு
முன்னும் பின்னுமாய்
மூன்றுமுறைகள்
நிறைமாத கர்ப்பினியானாய்!
எல்லா பிள்ளைகளிடமும்
பாகுபாடின்றி தொடர்ந்தது
உன் நற்பணி!
பாலூட்டினாய்......
தொட்டிலாட்டினாய்.....
சோறூட்டினாய்.......
நீராட்டினாய்..........
தலை கோதினாய்....
கைகள் அமுக்கினாய்......
கால்கள் தடவினாய்.....
ஒவ்வொன்றாய்
பார்த்து பார்த்து தந்தாய்!
எனக்கேற்ற துணையை
கரங்களில் ஈந்தாய்!
என்னை நினைக்கும் போதே
உன்னை மறந்தாய்......
எல்லாமாய் இருந்தாய்
என் மனம் நிறைந்தாய்!
அம்மாவுக்கு
ஏதாவது செய்ய வேண்டும்!
ஒருநாளாவது
தலைமுடி வாரிவிட வேண்டும் .....
கால் அமுக்கிவிட வேண்டும்......
உச்சி முகர வேண்டும்......
ஊர்வரும் போதெல்லாம்
உள்மனசு சொல்லும்..........
அம்மா நீயோ
எதுவும் நினைப்பதேயில்லை!
எல்லாவற்றையும்
இன்றுவரை குறைவின்றி
தந்து கொண்டேயிருக்கிறாய் !!!!