இலவசக் காலம்

இலவசக் காலம்
(கவிதை)

இது கற்காலமோ..பொற்காலமோ அல்ல
கலி காலத்தின் கடைசி அத்தியாயமான
இலவசக் காலம்!
ஆம்!
எங்கும் இலவசம்...எதிலும் இலவசம்!

எதிர்காலத்தில் வரப் போகும்
அதிசய இலவசங்களை
அட்டவணையிடுகிறேன்...
ஆச்சரியப்படுங்கள்...அன்பர்களே
அழுது விடாதீர்கள்....!

புதிதாய் புறப்பட்டுள்ள
புண்ணியகோடி கல்லூரியில்
ஒரு டிகிரி வாங்கினால்
ஒரு டிப்ளமோ இலவசமாம்!

ஒரே குடும்பத்தில் இருவர் வாங்கினால்
அம்மாவுக்கும் அப்பாவுக்கும்
ஆளுக்கொரு டிகிரியாம்!

ஒரே குடும்பத்தில் மூவர் வாங்கினால்
தாத்தாவுக்கும் பாட்டிக்கும்
ஆளுக்கொரு டிப்ளமோவாம்!

பெரும் முதலீட்டில் துவக்கப்பட்ட
பெரியசாமி மருத்துவ மனையிலும்
பெருமை சொல்லும் இலவசங்கள்!
கண் ஆபரேஷன் செய்தால்
தொண்டை ஆபரேஷன் இலவசம்!

ஒரு இருதய ஆபரேஷன் செய்தால்
இரண்டு பிரசவங்கள் இலவசம்!

நாய்க்கடிக்கு ஊசி போட்டால்
பாம்புக் கடிக்கு இலவசம்!

தனியார் தொடங்கிய
மின் மயானத்திலும்
தாறுமாறாய் இலவசங்கள்!

வயோதிக சவமொன்றை
தகனம் செய்தால்
குழந்தை சவமொன்றுக்கு இலவசமாம்!

குழந்தை சவமொன்றை
தகனம் செய்தால்
அதன் தாய் தந்தையர்க்கு
எதிர்காலத்தில்
சலுகைக் கட்டணமாம்!

இலவசக் கவர்ச்சிக்கு
இலவம் பஞ்சாய் பறக்கும்
இளிச்சவாய்த் தமிழனே..
இலவசங்களெனும்
செயற்கை சுவாசத்தை நாடி
இயற்கை சுவாசத்தை இழந்து விடாதே!


முகில் தினகரன்
கோவை.

எழுதியவர் : முகில் thinakaran (31-Dec-12, 10:42 am)
பார்வை : 86

மேலே