"மாண்டு போன மானுடர்க்கு மீண்டும் இங்கே மரணமாம் "

"மாண்டு போன மானுடர்க்கு
மீண்டும் இங்கே மரணமாம் "

பெருங்கதை யாரோ சொல்ல
பீதி கொண்டு பேய்கள் கதற
மீண்டுமோர் நாடகம்
மேடை இன்றி நடக்கிறதே !

பூவுலகோ சுடுகாடு
இங்கிருப்பதெல்லாம் வெறும் கூடு
புரியாத நெஞ்சத்தார்க்கு
பூவுடலோ பெரும் பேறு !

மாயன் என்பார்
மாயை பால் மயக்கம் கொள்வார்
மண்ணுலகைத் தாம் கொள்ள
மதி மயங்கித் துடித்திடுவார் !

மனிதம் மரித்துப் போனபின்னே
மனிதன் இருந்து என்ன பயன் ..??
தெளிந்து கொள்ளா நரனுக்கு
சிந்தை இருந்தும் ஏதுபயன் ..??

வாழ்ந்து பார்க்க நாம் வந்தோம்
வந்தஇடம் திரும்பிச் செல்வோம்
வாழ்வையும் சாவையும்
வரமென்றே ஏற்றுக்கொள்வோம் !

பிறப்பிற்கும் இறப்பிற்கும் நடுவில்
பெரும் தூர பயணமுண்டு
பிறப்பொக்க வாழுதலால்
பேரான சிறப்புண்டு !

ஒரு முறை ஜனனம்
ஒரு முறை மரணம்
ஒளியற்ற உள்ளத்தார்க்கு
ஒவ்வோர் நொடியும் மரணம் !

அகல் தீப சிந்தை கொள்
ஆசை மேல் நிந்தை கொள்
அவனியோ அற்பம் என்று
அகத்தினிலே நிறுத்திக்கொள் !

மாண்டு போன மானுடர்க்கு
மீண்டுமோர் மரணமில்லை
மானிடமே புரிந்து கொள்
மாண்புற வாழ்ந்து கொள் !

எழுதியவர் : ஹேயேந்தினி ப்ரியா (1-Jan-13, 12:55 pm)
பார்வை : 146

மேலே