தொடருமா..? காத்திருப்பேன்...!

கற்பனைக்கும் வறுமைக்கும்
காளை என்னிடம் பஞ்சமில்லை
வயிற்றுப்பசி தவிர
நானறிந்ததேதுமில்லை..!

தாலாட்டு மொழியேதும் -என்
தாயவளிடம் கேட்டதில்லை
தந்தை முகம் பார்த்து -இந்தத்
தனயனுமிங்கே வளரவில்லை..!

கானகச்செடிக்கங்கே
விதைபோட்டதாரு..?
விருட்சமாய் அது வளர
நீரிறைத்தததாரு....?

காட்டு மரம் நானானேன்
கண்ட படி நானலைந்தேன்
கை நீட்டி உணவறிந்தேன்
கைவைத்து பணமறிந்தேன்..!

ஈரைந்து வயதிற்குள்ளே
இருள்கண்டதென் வாழ்வு
ஈனம் நான் என்று
இழித்துரைத்தது ஊர் நாவு..!

ஊரெல்லாம் என் சொந்தம்
உரிமையில் பணமெடுத்தேன்
எடுத்த பின் யாரோ சொல்ல
அது களவென்று நானறிந்தேன்..!

ஏதேதோ நான் செய்ய
அது குற்றமென்று ஊர்சொல்ல
கம்பியறை பின் சென்றேன்
அங்கே கல்வி தனை நானறிந்தேன்..!

சட்டத்தின் அணைப்பெனக்கு
இறுக்கமாய் வலித்தபோதும்
வாழ்வென்றால் என்னவென்று
கற்றுத்தந்ததந்த இரும்புக்கரம் ..!

தவக்காலம் முடிந்ததுமே
திறந்தது என் குகைக்கதவு
மகிழ்வோடு வெளிவந்தேன்
இளங்காளையாய் உருக்கொண்டேன்..!

ஞாதி அற்ற ஞாலத்திலே
நியாயமாய் வாழ எண்ணி
பசிகொண்ட வயிற்றோடு
பலநாட்கள் நானலைந்தேன் ..!

என் வாழ்வோடு போராட
எனைச்சேர்ந்ததொரு வேலை
அரைவயிறேனும் நிரம்ப
அதுதந்ததொரு கூலி ..!

இதுவே என் வாழ்வென்று
முடங்கும் மடைமை எனக்கில்லை
எழுத்தாணி நான் பிடித்து
எனக்கென்றொரு விதி செய்தேன் ..!

வெற்றுத்தாளோடு என்
பேனையது மோகம் கொள்ள
பிறந்தன கவிதைகள் -நான்
தாலாட்டும் தாயானேன் ..!

பஞ்ச பூதங்களும்
பார்க்கின்ற காட்சிகளும்
என் சிந்தையிலே சிறைப்பட
செதுக்கினேன் கவியாக ..!

எத்தனென்றும்
பித்தனென்றும்
ஏசினின்ற சுற்றம் என்னை
புலவனென்று புகழ்ந்த போது
புதுமையாய் நானுணர்ந்தேன்
அன்று புதிதாய் நான் பிறந்தேன்..!

என் பாதை எதுவென்று
சிந்தையது தெளிந்துகொள்ள
சினிமாவில் பாட்டெழுத
துணிவோடு புறப்பட்டேன் ..!

ரயிலோடு என் பயணம்
இன்றுவரை முடியவில்லை
கவியோடு என்பயணம்
தொடருமா..? காத்திருப்பேன்...!

எழுதியவர் : ஹேயேந்தினி ப்ரியா (1-Jan-13, 12:31 pm)
பார்வை : 106

மேலே