கவிதை எழுத மறந்தேனே..!
நீள இரவு
நிலவொளியை
அள்ளிப் பருகிட....
நிசப்த கச்சேரி
காற்று மேடையில்
நடந்து கொண்டிருக்க....
முகில் கூட்டங்கள்
ஆகாயப் பந்தல்கள்
அமைத்திட.....
விண்மீன்கள்
கண்சிமிட்டி
மின்மினிக் கோலம் காட்டிட...
தூரத்து ஆந்தைகள்
அவ்வப்போது அலறிட...
குளத்துத் தவளைகள்
குறட்டைத் தாளம் போட்டிட...
காது குடையும் ஊசியாய்
கொசுக்கள் காதருகே கூசிட...
பகலில் தோய்ந்த
வெளிச்சத் தூரிகை
இருளை இன்னமும் பூசிட....
விடியலை அறிவிக்க
விழைந்திட்ட பறவைகள்
விசும்பிட....
சொல்லி மாளாத இரவின்
கொள்ளை அழகினை
கொஞ்சம் கொஞ்சமாய் ரசித்திட...
இப்படியாக ரசித்திட்ட பொழுதில்
கவிதை எழுத மறந்தேனே.!

