அந்நியப் பொருள் மோகம்

அந்நியப் பொருள் மோகம்
(கவிதை)

அந்நியத் துணி மீது
அக்கினி உமிழ்ந்த
அஹிம்சை தேசத்தில்
சந்துகள் தோறும்
சைனாப் பொருட் கடை!
அங்கே
சாரை சாரையாய்
இந்திய மகன்கள்
சவலைப் பிள்ளையாய்!

ஊசிப் போன
வெளி நாட்டு வடை மேல்
உள்ளூர் காக்கைகள்
உவகை கொண்டதால்
கான மயில் வேடமிட்டு
வான் கோழிகளும்
விலை போகின்றன!

மஞ்சள் விளையும்
முகக் கழனியில்
மானாவாரியாய்
முகப் பரு மகசூல்!
எல்லாம் அந்த
மலிவு விலை
முகப் பவுடர் தந்த
மாய வியாதிகள்!

உத்திரவாதமில்லா
ஓட்டைப் படகில்
உன்னை ஏற்றி விட்டு
சத்தமில்லாமல் நழுவும்
சந்தர்ப்ப வியாபாரிகளுக்கு
சாமரம் வீசியது போதும்
சுய புத்தியைச் சீராக்கு..
சுதேசியை சுத்தமாக்கு!
புரிந்து கொள்..
அரை விலைக்கு வந்த
அமுதங்கள்..ஆயுளைச் சுருக்கும்
அமிலங்கள்!

முகில் தினகரன்
கோவை.

எழுதியவர் : முகில் தினகரன் (5-Jan-13, 9:24 am)
பார்வை : 113

மேலே