ஊடு கண்டிலன் என்னின்.................... தமிழ் ஆசான் செல்லத்துரை என்றால்...
ஊடு கண்டிலன் என்னின்....................
தமிழ் ஆசான் செல்லத்துரை என்றால் எங்கள் பாடசாலையில் ஒரு தனி மதிப்பு.பலரும் மதிக்கும் ஒரு தமிழ் அறிஞர். அதிகம் பேசமாட்டார் வயது 50 இருக்கும்.ஆறடி உயரம் வெள்ளை வேட்டி சேர்ட் நெற்றியில் விபூதிப் பட்டை. வகுப்பறையுள் நுழைந்தால் குண்டூசி விழும் சத்தமும் கேட்காது. ஒரு நாள் காலை நேரம்...பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கம்ப ராமாயணம் சுந்தர காண்டம்கற்பித்துக் கொண்டிருந்தார். குரலைச் சரி செய்த வாறு "மாடு நின்ற அம் மணி மலர்ச் சோலையை மருவி" என தொடங்கினார். அடுத்த வகுப்பில் பள்ளிக்குப் புதிதாய் சேர்ந்த இளம் ஆசிரியர் விஞ்ஞானம் கற்பித்துக் கொண்டிருந்தார். இரு வகுப்பறைகளுக்கும் இடையில் ஆளுயர சுவர். விஞ்ஞான ஆசிரியர் சுவரில் இடது கையைப் போட்டவாறு கரும்பலகையில் படம் ஏதோ கீறிக் கொண்டிருந்தார். அவருடைய வகுப்பில் கூச்சலும் சத்தமும் இந்தப் பக்கம் தமிழ் ஆசிரியருக்கு வகுப்பு எடுக்க முடியவில்லை கோபம் மூக்கு நுனி வரை வந்து விட்டது திரும்பிப் பார்த்தார் அடுத்த வகுப்பில் இருந்து கை ஒன்று சுவரின் மேலால் தொங்கிக் கொண்டிருந்தது.கூச்சல் வேறு அடங்கிய பாடில்லை.விறு விறு என்று சென்று வகுப்பறை மூலையில் கிடந்த உடைந்த சிறிய நாற்காலிக் கால் ஒன்றை எடுத்து சுவரோடு சேர்த்து அந்தக் கையில் ஒரு போடு போட்டு விட்டார். கையை உதறிக் கொண்டு பதறி அடித்தபடி விஞ்ஞான ஆசிரியர் ஓடி வந்தார். யார் என் கையில் அடித்தது என்று கேட்க... அடநீங்க இவ்வளவு நேரமும் பாடம் எடுத்துக் கொண்டுதான் இருந்தீர்களா....நான் யாரோ அந்த வகுப்பில் உள்ள மாணவர்கள் வேண்டுமென்றே வம்புக்கு கையை வைத்திருப்பதாக எண்ணி அடித்து விட்டேன். மன்னித்துக் கொள்ளுங்கள் என சாதாரணமாக சொல்லி விட்டுத் தன் வகுப்பறையுள் நுழைய அவர் வகுப்பில்உள்ள மாணவர்களுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.. அதையும் கவனிக்காதது போல் தேடி, இவ் வழிக் காண்பெனேல், தீரும் என் சிறுமை ஊடு கண்டிலென்என்னின், பின், உரியது ஒன்று இல்லை;வீடுவேன், மற்று இவ் விலங்கல்மேல் இலங்கையை வீட்டி.'என்று வீராவேசத்துடன் ஆரம்பிக்க மாணவர்கள் அனைவரும் இயல்பு நிலைக்குத் திரும்பினர் சுந்தரகாண்டம் இனிதே தொடர்ந்தது.