எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தேடல்கள் -------------------------- ஒரு சிற்றெறும்பு பயணமாய் என் தேடல்கள்...

தேடல்கள்
--------------------------

ஒரு சிற்றெறும்பு
பயணமாய் என் தேடல்கள்

நல்வாழ்வில்
இருள் கூடாதென்று
பொருள் தேடியே
வெறுமையில் வீழ்ந்து
கொடுமையில் எரிந்து
துரோகங்களை சகித்து
இத்தனை
எத்தனையோ
“த்து”களின் பாதையில்
இத்துப்போகாத தன்னம்பிக்கையில்
ஒரு எறும்பின் முயற்சியில்
பாதங்களை தொலைத்து
பாதைகளை தேடி அலைகிறேன்.

அண்டிவந்த நட்புக்கள்
கூடவந்த நட்புக்கள்-நெஞ்சில்
குத்த வந்த நட்புக்கள்
இப்படிப்பட்ட
“கள்” எல்லாம்
எனையே களையெடுக்கவே
என் இதயத்தை தோண்டின.

சிலரதுகள்
பணம் வாங்கி
பந்தம் புரிந்தன.
பலரதுகள்
அன்புகொடுத்து
பணம் திருடின.

வாழ்க்கையினை
அதன் போக்கில்
விட்டேன்....!
நதியின் ஓட்டத்தில்
இலை மிதவையில்
பயணிக்கும்
கட்டெறும்பை போல..!

சென்றுக்கொண்டே
இருக்கிறது
என் தேடல்கள்..!
ஒரு எறும்பின்
பின்னங்கால் பிடித்து அதன்
பின்னால் செல்வதை போல..!


என் தேடல்கள்
எதற்கு .........?
தேடலில் பயணித்து
தேற்றிக்கொள்ளுவது
எதுவாக இருக்கும்.
எதை தேடினாலும்
இது போதாது
சொல்லும் மனதை
வெல்லும் வரை அல்லது
கொல்லும் வரை..!

என் தேடலுக்கான
அர்த்தம் புரியாது
என் தேடலுக்கான
தேடல்கள் தெளியாது.

புரிதல்கள்
மனத்தெளிவுகள் நிகழ்வது
கல்லறையிலாவது இருக்கலாம்.
என் பிணத்தை
இழக்க பாடுப்படும்
எறும்புகள்,
என் தேடல்களை
என் ஆன்மாவிலிருந்து
மீண்டும் ஆரம்பிக்கலாம்.


---------------------இரா.சந்தோஷ் குமார்

நாள் : 4-Sep-14, 10:04 pm

மேலே