எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தலைவணகுகிறேன் சென்னை: தேங்கி கிடந்த மழை நீரில் மின்கசிவு...



தலைவணகுகிறேன்


சென்னை: தேங்கி கிடந்த மழை நீரில் மின்கசிவு இருப்பதை கண்டுபிடித்து, பயணிகளை கால் வைக்க விடாமல் குரைத்து தடுத்தது ஒரு நாய். ஒரு கட்டத்தில் தான் குரைத்ததை பொருட்படுத்தாமல் மழைநீரில் கால் வைக்க துணிந்த இளைஞரை காப்பாற்ற, அதே நீரில் பாய்ந்து உயிரைவிட்டது. சென்னையில் நேற்று முன்தினம் மாலை மற்றும் இரவு நேரத்தில் பலத்த மழை பெய்தது. அதனால் பல இடங்களில் மழைநீர் தேங்கியிருந்தது. சென்ட்ரல் புறநகர் ரயில்நிலையத்தில் இருந்து அல்லிகுளம் வளாகம் வழியாகச் செல்லும் நுழைவாயில் அருகிலும் தண்ணீர் தேங்கியிருந்தது. அதன் அருகே இருந்த தெரு விளக்கு கம்பத்தில் இருந்து ஏற்பட்ட மின்கசிவு காரணமாக மழைநீரில் மின்சாரம் பாய்ந்திருந்தது. யாருக்கும் இது தெரியவில்லை. அப்போது இரவு 10 மணி ஆகி விட்டதாலும், மழை நேரம் என்பதாலும் சென்ட்ரலுக்குள் நடந்து வரும் கூட்டம் குறைவாகவே இருந்தது. இந்நிலையில் தேங்கியிருந்த மழைநீரில் மின்சாரம் பாய்ந்தபடி இருந்தது. இது தெரியாமல் ரயிலை பிடிக்கும் அவசரத்தில், மழைநீரில் கால் வைக்க வந்த பயணிகளை அங்கிருந்த நாய் ஒன்று விரட்டியது. நாயின் சீற்றத்தை பார்த்த பயணிகள் பயந்துபோய், மழைநீர் இருந்த பக்கம் வராமல் சுற்றியபடி சென்றனர். சில பயணிகள், இந்த நாய்க்கு வெறிபிடித்துள்ளது. அது, சும்மா செல்லும் நம்மை பார்த்து குரைக்கிறது என்று பேசியபடியே சென்றனர். தனியாகவும், கூட்டமாகவும் வந்த 10க்கும் மேற்பட்ட ரயில் பயணிகளை அந்த நாய் விரட்டியபடியே இருந்தது. பயணிகளில் சிலர் பயத்தில் நாய் மீது கல் எறிந்தனர். அந்த நாய் எப்போதும் அருகில் உள்ள ரயில்வே பாதுகாப்பு படை நிலைய வளாகத்தில்தான் தங்கியிருக்கும். அது 2 நாட்களுக்கு முன்பு 7 குட்டிகளை போட்டிருந்தது. குட்டிகள் இன்னும் நடமாட ஆரம்பிக்கவில்லை.

இந்நிலையில், அந்த வழியாக சென்ற இளைஞர் ஒருவர், நாய் குரைப்பதையும், தன்னை விரட்ட முயல்வதையும் கண்டு கொள்ளவில்லை. அவர் மழைநீர் தேங்கிய பகுதிக்கு அருகே சென்று கொண்டே இருந்தார். அந்த இளைஞரை நோக்கி தொடர்ந்து நாய் குரைத்துக்கொண்டே இருந்தது. இதனால் அவர், தன் வேகத்தை குறைத்து நின்று, நாயை விரட்ட கல் தேடினார். கல் கிடைக்காததால், மீண்டும் நடக்கத் தொடங்கினார். இந்நிலையில் யாருமே எதிர்பார்க்காத வகையில் அந்த நாய் குரைப்பதை நிறுத்திவிட்டு, வேகமாக ஓடிவர ஆரம்பித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த இளைஞர், ஒரு அடி பின்வாங்கினார். பின்னர், தன்னை நோக்கி ஓடிவந்த நாயை பார்த்துக் கொண்டே இருந்தார். அதற்குள் அந்த நாய், வேகமாக பாய்ந்து வந்து, மின்கசிவு ஏற்பட்டிருந்த மழைநீரில் பாய்ந்தது. அதில் இருந்த மின்சாரம் பாய்ந்து, நாய் துடிதுடித்து தன் உயிரை விட்டது. இந்தக் காட்சியைப் பார்த்த இளைஞர் அதிர்ச்சியில் உறைந்தார். மேலும், அந்த வழியாக வந்த பொதுமக்களும் அப்படியே சிலையாக நின்றனர். காரணம், அந்த மழைநீரில் மின்சாரம் பாய்ந்த விஷயமே, அந்த நாய் இறந்தது மூலம்தான் தெரிந்தது.

உடனடியாக மாநகராட்சிக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து மின்சாரத்தை துண்டித்து அந்த இடத்தை சரி செய்தனர். பின்னர் மழைநீரில் இறந்து கிடந்த நாயை மீட்டு, நடைமேடையில் கிடத்தினர். பயணிகளையும், நடை பாதையில் கடை வைத்திருப்பவர்களையும் காப்பாற்றிய நாய்க்கு மாலை வாங்கிப்போட்டு மரியாதை செலுத்தினர். பின்னர் குப்பை வண்டிக்காரர்கள் அந்த நல்ல மனம் கொண்ட நாயை அள்ளிச்சென்றனர். இந்த தகவல் அறிந்த ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் அழகர்சாமி உடனடியாக, தாயை இழந்து தவித்த நாய்க்குட்டிகளை மீட்டு புளுகிராஸ் அமைப்பிடம் ஒப்படைத்தார். இந்த சம்பவத்தை நேரில் பார்த்த ரயில் பயணிகள் கூறியதாவது: அந்த நாய்க்கு தண்ணீரில் மின்சாரம் பாய்ந்திருப்பது எப்படியோ தெரிந்துள்ளது.

எனவே, வேறு யாரும் பாதிக்கப்படக் கூடாது என்று நினைத்து, குரைத்துள்ளது. அந்த இளைஞர் தான் குரைப்பதை பொருட்படுத்தவில்லை என்று தெரிந்து கொண்டது. அதனால் தண்ணீரில் பாய்ந்து இறந்துள்ளது. தன் இறப்பின் மூலம் தண்ணீரில் மின்சாரம் பாய்ந்திருப்பதை அந்த நாய் உணர்த்தியுள்ளது. நாய்களின் அபார அறிவுத் திறன் மற்றும் செயல்பாடு பிரமிக்கத்தக்கது என்றனர்.

பதிவு : lathaponnarivu
நாள் : 5-Sep-14, 9:49 am

மேலே