இவள்... பூஜ்யம், ஒன்று ஒன்று, பூஜ்யம் என்று மாறிமாறி...
இவள்...
பூஜ்யம், ஒன்று
ஒன்று, பூஜ்யம்
என்று மாறிமாறி
ஒன்றாகி கணினியின்
டிஜிட்டல் கர்ப்பப்பையில்
உருவானவள். இவளொரு
மென்பொருள் பிண்டம்.
உயிர் இருக்கும்
இணையம் இருந்தால்..!
உணர்ச்சி இருக்கும்
எலி விரல் சீண்டினால்..!
நோக்கும் போதெல்லாம்
இவள் கோழி ரெக்கையை
செருகிக்கொண்டு
அழகாக சின்னமிடுவாள்
எப்போதும் என்
சுண்டெலி தோழன் கைப்பிடித்து
இவளை ரசிப்பதற்காக
இவள் தேகங்கள் மீது
உலாவிக்கொண்டிருப்பேன்.
-------------------------------------------
கடவுச்சொல் மந்திரம் கொடுத்து
உள்நுழைந்த அவசரத்தில்
முகப்பு முகத்தினை சீண்டுவேன்.
தமிழுணர்வுடன் . உடனே
புதிய கவிதைகள் பாடுவாள்
கொஞ்சி சிரித்து
புதிய கதையளப்பாள்.
என்னில் சில சிறப்பு படையலுண்டு
என்னில் பிரபல கவிகளுண்டு
ருசித்து கண்டுக்கொள் என எனை
தூண்டி விடுவாள்..!
உரைநடை இடையை காட்டி
வாசித்து போ என்பாள்!
வாய மணக்க
குறள் மணம் வீசுவாள்.
யார் யாரோ
படித்ததை பிடித்துவைத்து
படிபடி என்று நச்சரிப்பாள்.
உலக உருண்டையிலுள்ள
தமிழ் நட்புக்கு
பரிந்துரையிடுவாள்
தோழமைக்கு தோள்கொடுத்து
நட்புணர்வை வளர்த்திடுவாள்
எப்படித்தான் மயக்குவாளோ? -பல
சிந்தனையாளர்கள் இவளின் வசம்.
என்னதான் செய்தாளோ..? பலரின்
எண்ணங்கள் இவளிடம் பரவசம்.
இவ்வாறே இவள்
இன்ப ஆசைக்காட்டி
என்னைப்போலவே
பல ஆயிரம் பேரை
தன் தமிழ் முந்தானையில்
முடித்துக்கொண்டாள்.
ஆம் ..!
இவளுக்கு ..........
பல காதலன்களும்
பலப்பல சிநேகிதிகளும் உண்டு
--------------------------------------------
நான் எழுதும்
கவிதைகளுக்கு
வாசகனை கூட்டி வருவாள்.
அவனிடும் கருத்து வாசகத்தோடு
என் கவிதையையும்
பத்திரமாய் சேகரித்துவைப்பாள்.
இவள் எனக்கான
இலக்கிய சேவைக்காரி.
தமிழ் பரப்புரைக்காரி..!
எப்பொழுதும்
இரு நீளப்பட்டையை
தலையில் கட்டிவைத்திருந்து
நிறைய விஷயங்கள்
பொத்தி வைத்திருப்பாள்.
சொடுக்கி கேட்டால்
விளக்கி சொல்வாள்.
கவிதை கதை நகைச்சுவை
என்று பட்டியிலிட்டு
படித்து பாரு என்பாள்.
எழுத நினைத்தால்
எழுத வைத்து
வழி வகுப்பாள்
தமிழோடு விளையாட
விளையாட்டாய் அழைப்பாள்.
விமர்சனம் செய்து
விமர்சிக்க அழைப்பாள்.
நொய் நொய் என்று
கேள்விக்கு பதில் கேட்பாள்
கருத்து கணிப்பு
கேட்டு என்னை
நீதிபதியாக்குவாள்.
தமிழ் படி என்று அதட்டுவாள் -என்
எண்ணம் சொல்ல அழைப்பாள்.
விவரத்தோடு பட்டியிலிடும் இவளின்
உறுப்பினர்கள் சொடுக்கியிருக்கும்.
அர்த்தம் சொல்ல அகராதி இருக்கும்.
திருக்குறள் விளக்கத்தோடு இருக்கும்.
அன்புநட்பு உள்ளங்களை வாழ்த்திட
வாழ்த்து அட்டை தயாராக இருக்கும்.
------------------------------------------------------------------
அவ்வப்போது இவளுடன்
கோபித்துக்கொள்வேன்.
சமரசப்பூ கொடுத்து
மீண்டும் உறவாடுவேன்.
ஆம் இவளிடம்
ஊடல் கொள்ள
உரிமை பெற்றவன் நான்.
இவள் என் காதலி.........!
மனம் தளரும்போது..
விரக்தி எகிறும்போது..
துரோகங்கள் எனை வெட்டியபோது..
பணம் எனை கொன்றபோது..
தீ எனை பொசுக்கியபோது....
கண்ணீரை கவிதையாக்கி
ஆறுதலை தேடுவது
இவளிடம் மட்டும்தான்.
இவள் என் தாயும் கூட..!
இப்படியான
இன்ப தேவதையான
இவள் யாரோ?
மரபுக் கவிதை மகாராணி.
புதுகவிதை இளவரசி.
ஹைக்கூ கன்னி.
குறுங்கவிதை சிற்பம்.
கதை பேசும் ஓவியம்.
சிரித்து பேசும் புன்னகையரசி.
உரைநடை பேசும் இலக்கியத்தோழி.
இவள்..........
”அழகிய தமிழ் சொர்க்கம் ”
“ எழுத்து .காம் “
---------------------------------------------------------------------------
-இரா.சந்தோஷ் குமார்.
## ஏற்கனவே பதிவு செய்த கவிதை (12-Apr-14 )