தந்தையே எப்படிச் சாகும் உன் நினைவுகள் ------------------------------------------------------- தந்தையே...
தந்தையே எப்படிச் சாகும் உன் நினைவுகள்
-------------------------------------------------------
தந்தையே ...நீவீர்
இறந்துவிட்டதாய்
இன்றளவும்
நம்ப மறுக்கிறது மனம் ?
உம் வித்தாய் நானிங்கு
மிச்சமிருக்கையில்
நம் மரபணுக்கள்
நம் மூலம் மறுஉடல் புகுமெனில்
உம் மரணத்துடன் மடிந்திடுமா
மனதின் உணர்வுகள் ...
இருபது வருடங்கள்
சென்றாலென்ன ...
இருநூறு வருடங்கள்
வந்தாலென்ன ...
உம் இதயம்
உரைத்த மொழியே
என் தேசிய கீதம்
நம் பரம்பரைக்கும் பாடம் ..
நடை பயில
மரவண்டி தந்து
நான் அழுகையிலே
யானையாக குனிந்து
நான் விளையாட
நீர் மெத்தையாகி
என் கால் வலிக்குமென
உம் தோளில் சுமந்து
நான் சிரிக்கையிலே
நீர் சிறுவனாகி ...
என்னோடு நீர் வாழ்ந்த
நிகழ்வுகள் நிஜமென்றால்
எப்படிச் சாகும்
நம் மனதின் உணர்வுகள் ..
படிப்பிலே
நல் ஆசானாகி
பாசத்திலே
நல் இறையாகி
பக்குவமாய்
பல செயல்கள் செய்து
பல மனிதர்க்கும்
சில உதவிகள் செய்து
என் நெஞ்சினில்
நீங்காது நீர் புகுத்திய
மனிதங்களை
மறுபடியும்
எந்த பள்ளியில் போய்
நான் படிக்க ?
சிரிப்பினை
சிறகினை
உழைப்பினை
உதவியை
உம்மிடமிருந்து
பெற்றுவிட்டு
எதுவும் தராமல்
எப்படிச் சாவேன்
நானும் !
என் கண்கள் கண்ட
முதல் கடவுள் நீரே
என் மனதில் எழுந்த
முதல் தலைவன் நீரே
என் எல்லாச் செயல்களிலும்
மூலமாய் ஒளிர்வதும் நீரே ..
என் காதுகள்
உம் மொழிகள் கேட்டவாறு
என் கண்கள்
உம் கனவுகள் சுமந்தவாறு
என் எண்ணம்
உம் எண்ணமாய் மலர்ந்தவாறு
இப்படி நீவீர் .. என்
அசைவினில்
அங்கத்தில்
ஆன்மாவில்
அருவமாய்
அடி ஆழம்வரை
ஆளுகை செய்கையில்
நீர் இல்லாத பொழுதென்று
எதுவுமில்லை எனக்கு ?
ஆதலால்
எப்போதும்
எதிர்ப்புகள் பற்றியோ
எதிரிகள் பற்றியோ
எனக்கு பயமுமில்லை ...
நீவிர் விட்டுச் சென்ற
தளிர்களை
நான் காத்து நிற்கிறேன்
நான் விட்டுச் சென்றாலும்
காத்திட
நூறு கரம் எழும்மாறு ?
நீவீர் சொல்லித்தந்த
கலை அதுவெனில்
சுரம் கூடாமல்
எப்படிச் சாகும்
என் சுருதிகள் ?
என் நிழலுக்குள்
ஒளிந்துகொண்டு
என் கனவுக்குள்
வந்து நின்று
நீர் உரைத்த
உன்னதச் சொற்கள்
உயிரோடு வாழுமெனில் ..
தொடர் விளையாட்டில்
கைமாறும் - சிறு
தீப்பந்தம் போல்
தொடரும் பந்தத்தில்
உம் உணர்வுகள் - மறு
உயிர்கொள்ளும் ஓயாமல் ..
என்னோடு மடிந்திடாது
நம் தலைமுறையின்
நீட்சி ..நீள்கிறதெனில்
மரணம் எப்படி
வென்றிருக்ககூடும்
உம்மை ?
இன்னும் நீவீர்
இறந்ததாய் ஏன்
பொய்யுரைக்கிறார்கள்
மனம் மரித்துப்போன
மனிதர்கள் சிலர் ?
-----------------------------------------------------------
(இன்று என் தந்தையின் 22 வது நினைவு தினம் , தந்தையின் பிரிவினில் வாடும் நண்பர்கள், தோழிகள் அனைவரின் தந்தையின் பாதங்களுக்கும் இக்கவி சமர்ப்பணம்)
குமரேசன் கிருஷ்ணன்