எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

உசிலை வட்டம் விவசாயிகள் விடுதலை முன்னணியின் அறிக்கை சாதிவெறியில்...

உசிலை வட்டம் விவசாயிகள் விடுதலை முன்னணியின் அறிக்கை

சாதிவெறியில் தர்மபுரி வன்னியர்களுக்கு சற்றும் இளைத்தவர்கள் இல்லை உசிலம்பட்டி கள்ளர் சாதிக்காரர்கள் என நிரூபித்துள்ளது விமலாதேவி கொலை. தர்மபுரி திவ்யாவை விட 100 மடங்கு தன் காதலுக்காக போராடியதால்தான் கொலை செய்யப்பட்டுள்ளார் விமலாதேவி.


விபரத்தை நேரில் விசாரிப்பதற்காக விமலாதேவியின் காதலன் திலீப்குமாரின் ஊரான மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தாலுக்காவில் உள்ள போலிபட்டி என்ற கிராமத்திற்கு சென்றோம். முற்றிலும் பள்ளர் சமூகத்தைச் சேர்ந்த 100 குடும்பங்கள் வாழும் கிராமம். ஆரம்பத்தில் பேசத் தயங்கினார்கள். நாம் விவசாயிகள் விடுதலை முன்னணி அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பதும் நம்மால் அவர்களுக்கு ஆபத்து இல்லை என்பதையும் உணர்ந்த பின்தான் மனம் விட்டுப் பேசினார்கள்.

இந்த ஊரைச் சுற்றிலும் உள்ள சுமார் 100 கிராமங்களிலும் கள்ளர் இனத்தைச் சேர்ந்தவர்கள் வாழ்ந்து வருகிறார்கள் என்பதால் தர்மபுரி போன்று ஒரு பாதிப்பு ஏற்பட்டு விடக் கூடாது என்று விரும்புகிறார்கள் என்பதுதான் அவர்களின் தயக்கத்துக்கான காரணம் என்று உணர முடிந்தது.

கொலை செய்யப்பட்ட விமலாதேவியின் பெற்றோர் சின்னச்சாமி என்ற வீரணன் – தேனம்மாள். சின்னச்சாமி என்ற வீரணன் பூதிப்புரத்தில் செங்கல் சூளை நடத்தி வருகிறார். இவர் தன்னுடைய செங்கல் சூளையில் லாரி டிரைவராகவும், மற்றும் தன் சொந்த வேலைகளை செய்வதற்கும் திலீப்குமாரை பணிக்கு அமர்த்தியுள்ளார். அதனால் சின்னச்சாமியின் வீட்டிற்கு திலீப்குமார் அடிக்கடி வந்து போக வேண்டிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அப்போதுதான் சின்னச்சாமியின் மகள் விமலாதேவிக்கும் திலீப்குமாருக்கும் இடையே காதல் ஏற்பட்டு சேர்ந்து வாழ முடிவு செய்து இருவரும் கடந்த ஜூலை 20-ம் தேதியன்று ரகசியமாக கேரளாவுக்குச் சென்று திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.

இந்நிலையில் விமலாதேவியின் தந்தை சின்னச்சாமி திலீப்குமார் என் மகளை கடத்தி சென்று விட்டார் என்று போலீசில் புகார் செய்திருக்கிறார். உடனே 25-ம் தேதி போலீஸ் திலீப்குமாரின் இருப்பிடத்தை அறிந்து அவர்கள் இருவரையும் உசிலை துணை கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு அழைத்து வந்துள்ளார்கள். உசிலம்பட்டி காவல்துறை துணை கண்காணிப்பாளர் சரவணகுமார் ஆதரவோடு விமலாதேவியின் கழுத்தில் உள்ள தாலியைக் கழற்ற பாரதிய பார்வர்ட் பிளாக் தலைவர் முருகன்ஜீ முயற்சி செய்துள்ளார். அதற்கு விமலாதேவி, “உன் மகள் காதலித்து ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டாளே, முதலில் அவள் தாலியை கழற்றி விட்டு வா, அப்புறம் நான் தாலியை கழற்றுகிறேன்” என்று முகத்தில் காரி உமிழாத குறையாகப் பேசி அனுப்பியுள்ளார்.

அதன்பிறகு உசிலை சட்டமன்ற உறுப்பினரும் பார்வர்ட் பிளாக் தலைவருமான கதிரவினிடம் வைத்து பேசி தாலியைக் கழற்ற முயற்சி செய்தபோது விமலாதேவி சட்டமன்ற உறுப்பினர் கதிரவனைப் பார்த்து, “உன்னுடைய எம்.எல்.ஏ வேலை இது இல்லை. என் விசயத்தில் தலையிட வேண்டாம், உன் வேலையை பார்த்து விட்டுப் போ” என்று விரட்டியுள்ளார்.

அடுத்து 20-க்கும் மேற்பட்ட கள்ளர் சமூகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் படை சென்று விமலாதேவியிடம், “உன் காதலன் திலீப்குமாரே நீ வேண்டாம், உன்னை மறந்து விடுகிறேன் என்று சொல்கிறான். நீ மட்டும் ஏன் தாலியை கழற்ற மறுக்கிறாய்” என்று கேட்டதற்கு அந்த வழக்கறிஞர் படையிடம், “நீங்க 500 பேர் சேர்ந்து போய் ஒருத்தரை மிரட்டினால் மறுத்துதான் பேசுவார், அவர் மறுத்தார் என்பதற்காக நான் மறுக்க முடியாது” என்று விமலா கூறியதால் பருப்பு வேகாமல் திரும்பி விட்டனர் வழக்கறிஞர்கள்.

இப்படி மிரட்டல் தந்திரம் பலிக்காமல் போனதால், சம்பவத்திற்கு மூன்று நாளுக்கு முன் விமலாதேவியின் தந்தை சின்னச்சாமி தற்கொலை செய்து கொள்ளப் போவதாகக் கூறி விசம் குடித்து மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். அந்த நிலையில் தந்தையின் முகத்தை பார்த்தாவது மனசு மாறும் என்று நினைத்து விமலாதேவியை அழைத்துச் செல்ல காவல்துறை துணை கண்காணிப்பாளர் அனுமதித்துள்ளார். தந்தையின் பரிதாப நிலையைப் பார்த்து விமலாதேவி அழுது கவலைப்பட்டுள்ளார்.

அன்று இரவு விமலாதேவியை நீதிபதியிடம் கூட்டிச் செல்ல விடாமல் அந்தப் பகுதி சாதிக் கட்சித் தலைவர்கள் உள்பட, சட்டமன்ற உறுப்பினர், வழக்கறிஞர்கள் என்று 500-க்கும் மேற்பட்டவர்கள் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் முற்றுகையிட்டுள்ளனர்.

நீதிபதியும் காலையில் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினால் போதும் என்று கூறியதால் மறுநாள் காலையில்தான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். நீதிபதி கேள்விக்கு, “என்னை யாரும் கடத்தவில்லை, நான் விரும்பித்தான் திலீப்குமாருடன் சென்று திருமணம் செய்து கொண்டு வாழ்ந்தேன்.” என்று கூறியிருக்கிறார் விமலாதேவி. இப்போது யாருடன் செல்ல விருப்பம் என்று கேட்ட போது திலீப்குமாருடன் செல்வதற்கு சூழ்நிலை இல்லாமல் இருந்ததாலும், நிலைமை கருதியும் என் பாட்டியுடன் செல்ல விருப்பம் என்று விமலாதேவி கூறியதால் அவருடன் அனுப்பி வைத்துள்ளனர்.

பின்பு செப்டம்பர் மாதம் விமலாதேவியை வருசநாட்டைச் சேர்ந்த சதீஸ்குமார் என்பவருக்கு அக்டோபர் 30-ம் தேதி திருமணம் செய்துவைக்க பேசி நிச்சயம் செய்கிறார்கள். இதற்கிடையில் விமலாதேவியின் மனதை மாற்றுவதற்காக இவர்களின் உறவினர் வீட்டுக்கு நிச்சயம் செய்யப்பட்ட சதீஸ்குமாருடன் அனுப்பி வைக்கிறார்கள் பெற்றோர்.

போகும் வழியில் விமலாதேவி நண்பருக்குப் பேசுவது போல் சதீஸ்குமாரிடம் செல்போனை வாங்கி வத்தலக்குண்டு பஸ் நிலையம் வரும்படி திலீப்குமாரிடம் பேசியுள்ளார். திலீப்குமாரும் வத்தலக் குண்டு பஸ் நிலையம் வந்து விட்டார். உடனே திலீப்குமாரை சதீஸ்குமார் அடித்துள்ளார். அதற்கு பதிலாக விமலாதேவியும் திலீப்குமாரும் சேர்ந்து சதீஸ்குமாரை அடித்து கலகம் செய்துள்ளனர்.

இந்நிலையில் அருகில் இருந்த காவல்துறை சார்பு ஆய்வாளர் ஆனந்தி இவர்களை கைது செய்து விமலாதேவியின் பெற்றோரை வரவழைத்து அவர்களோடு அனுப்ப ஏற்பாடு செய்துள்ளார். காவல்துறை சார்பு ஆய்வாளர் ஆனந்தி கள்ளர் இனத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், விமலாதேவி நான் திலீப்குமாருடன்தான் செல்வேன் எனறு கூறியுள்ளார். அதற்கு அவர்கள் விமலாதேவி அணிந்திருந்த நகைகளை கழற்றி வாங்கிக் கொண்டு ஒரு விடுதலைப் பத்திரமும் எழுதி வாங்கிய பின் அனுப்பியுள்ளனர்.

விமலாதேவி தான் அணிந்திருந்த மூக்குத்தியைக் கூட கழற்றிக் கொடுத்து விட்டு உங்க சொத்து எதுவும் எனக்கு வேண்டாம், ஆள விட்டால் போதும் என்று கூறிவிட்டு திலீப்குமாருடன் பேருந்து நிலையம் வந்தபோது மறுபடியும் விமலா தேவியின் பெற்றோர் திலீப்குமாருடன் தகராறு செய்துள்ளனர். மீண்டும், அவர்களை கைது செய்த சார்பு ஆய்வாளர் ஆனந்தி விமலாதேவியை தனியார் விடுதிக்கு அனுப்பி வைத்துவிட்டு திலீப்குமாரை விரட்டி விடுகிறார். மறுநாள் மீண்டு திலீப்குமார் சார்பு ஆய்வாளர் ஆனந்தியிடம் சென்று விமலாதேவியை என்னுடன் அனுப்பி வையுங்கள் என்று கெஞ்சியுள்ளார். அனுப்ப மறுத்த உதவி ஆய்வாளர் விமலாதேவியை சின்னச்சாமியிடம் ஒப்படைத்துள்ளார்.

26.09.2014-ல் விமலாதேவி வீட்டுக்கு வந்ததிலிருந்து திலீப்குமாருடன்தான் சேர்ந்து வாழ்வேன் என்று தொடர்ந்து உறுதியாக நின்று போராடியதால் 1.10.2014-ம் தேதி இரவு சுமார் 9 மணிக்கு கொலை செய்திருக்க வேண்டும் என்ற தகவல் கூறுகிறார்கள். இரவோடு இரவாக எரித்து விட்டு தூக்கு போட்டு இறந்து விட்டதாக காலையில் உறவினர்களுக்கு தகவல் தருகிறார்கள் பெற்றோர். சின்னச்சாமியின் வீடு பூதிப்புரம் ஊருக்குள் இல்லாமல் தனியாக தோட்டத்து வீடாக இருந்ததால் நடந்த சம்பவம் யாருக்கும் தெரிய வாய்ப்பில்லாமல் போனது.

விபரம் அறிந்த திலீப்குமார் காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் தருகிறார். விமலாதேவியின் இறப்பில் சந்தேகம் உள்ளது என்று வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். சமூக நெருக்கடிக்குப் பின் தற்கொலைக்கு தூண்டுதல் என்று பெற்றோரையும் உறவினரையும் சேர்த்து வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள்.

விமலாதேவியை கொலை செய்து சிறு எலும்பு மிஞ்சாமல் எரித்து சாம்பலாக்கிய சுடுகாடு




[
தமிழகத்தில் நடக்கும் எந்த ஒரு சாதி கலவரத்திற்கும் ஆதிக்கசாதி தலைவர்களும் காவல்துறையும் எப்படி உதவியாக இருக்கிறார்களோ, அதேபோல் இந்த கொலைக்கும் உடந்தையாக இருந்துள்ளார்கள். இதுபோன்ற சாதிவெறி கொலைகள் நடப்பதை தடுக்க உண்மையில் நாம் செய்ய வேண்டியது, கொலைக்கு நேரடியாக உடந்தையாக இருந்த உறவினர்களை மட்டுமல்லாமல் துணைநின்றவர்கள் மீதும் வழக்கு பதிய வேண்டும்.

அதன்படி ஆரம்பத்திலிருந்து இவர்களை பிரிப்பதற்கு உடந்தையாக இருந்த உசிலம்பட்டி துணை கண்காணிப்பாளர், வத்தலக்குண்டு உதவி ஆய்வாளர், உசிலைபகுதி கள்ளர் சாதி தலைவர்கள், உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் கலந்து கொண்ட வழக்கறிஞர்கள் ஆகியோரின் மீதும் கொலை வழக்கு பதிந்து கைது செய்ய வேண்டும்.

ஆதிக்கசாதி வெறியை குழிதோண்டி புதைத்தால்தான் அந்த புதை மேட்டிலிருந்து சாதிமறுப்பு திருமணம் அதிகரித்து ஆரோக்கியமான புதிய சமூகத் துளிர்விடும்.

தகவல்
விவசாயிகள் விடுதலை முன்னணி,
உசிலை வட்டம்.

மதுரை மனித உரிமை பாதுகாப்பு மையம் அனுப்பிய அறிக்கை

உசிலம்பட்டி அருகே பெண் கவுரவக்கொலை ! மூடி மறைக்க ஆதிக்க சாதியினர் – போலீசு – அரசு அதிகாரிகள் கூட்டு சதி !

மனித உரிமை பாதுகாப்புமையம் உசிலை உட்கிளையைச் சேர்ந்த தோழர்கள் இது தொடர்பாக அந்த ஊருக்கு உண்மையறிந்து வரச் சென்றனர். விமலாதேவி குடும்பத்தைச் சேர்ந்த யாரும் வீட்டில் இல்லை. ஊர்மக்களிடம் இதுபற்றி விசாரித்த போது ஒருவரும் முறையாகப் பதில் சொல்லவில்லை. ஆனால் அந்தப் பெண்ணும் பையனும் செய்தது தவறு என்று சொல்லியிருக்கின்றனர். மேலும் விசாரித்த போது கடந்த 2 ஆண்டுகளாக விமலாதேவியும், திலீப்குமாரும் நெருங்கிப் பழகிவந்தது அவருடைய குடும்பத்தாருக்குத் தெரிந்தே உள்ளது. ஆனால் அவர்கள் அதை பெரிது படுத்தவில்லை என்று சொல்கிறார்கள். ஊர்க்காரர்கள் இழித்துப் பழித்துப் பேசியதைத் தாங்காமல் தான் வீரணன் விசம் குடித்துள்ளார். அதன் பிறகுதான் இது வெளியே தெரிந்துள்ளது.

மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டப் பொறுப்பில் உள்ள செல்லக்கண்ணு மற்றும் தமிழ்நாடு பார்வர்டு பிளாக் கட்சியைச் சேர்ந்த பி.வி.கதிரவன் எம்.எல்.ஏ. ஆகியோர் வீரணனுக்கு உறவினர்கள். இவர்கள் இந்தப் பிரச்னையில் வீரணனுக்கு ஆதரவாக இருந்து வருகின்றனர். பி.வி.கதிரவன் ஆதிக்க சாதி அடிப்படையில் ஓட்டு வாங்கி ‘அம்மா’வின் ஆசியில் எம்.எல்.ஏ. ஆனவர். சி.பி.எம். செல்லக்கண்ணு இது போன்ற பிரச்னைகளில் கட்டப்பஞ்சாயத்து செய்து காவல்துறைக்குத் தரகுவேலை செய்வதையே தொழிலாகக் கொண்டுள்ளவர் என்று பலரும் தெரிவிக்கின்றனர்.

ஆக இந்தக் கவுரவக் கொலை தருமபுரிமாவட்டம் நத்தம் காலனி இளவரசன் – திவ்யா காதல் பிரச்னையில் வன்னிய ஆதிக்க சாதிவெறியர்கள் எப்படி திவ்யாவின் தந்தை நாகராஜின் சாவுக்கும், இளவரசனின் சாவுக்கும், மூன்று கிராமங்களின் பலகோடி சொத்துக்கள் கொள்ளைக்கும் அழிவுக்கும் காரணமாக இருந்தார்களோ அதுபோலவே இதுவும் நடந்துள்ளது. உசிலம்பட்டி பகுதியில் இது ஒரு மோசமான தொடக்கமாக உணரப்படுகிறது. இது எபோலா போல பரவ வாய்ப்புள்ளது. எனவே இந்தக் கொலையை வெளியே தெரியவிடாமல் அமுக்கிவிடுவதற்கு மாவட்ட காவல் துறை கடும் முயற்சி எடுத்து வருகிறது. கொலையைத் தற்கொலையாக மாற்றிவிடத் துடிக்கிறது. அதற்கு ஆதிக்க சாதியினரின் ஆதரவையும் தாழ்த்தப்பட்ட மக்களின் மீது மிரட்டலையும் கடைப்பிடித்து வருகிறது.

விமலாதேவி கொலை செய்யப்பட்டதற்கான ஆதரங்கள்:

•தற்கொலை என்றால் ஏன் கிராம நிர்வாக அதிகாரி மற்றும் காவல்துறைக்குத் தெரிவிக்கவில்லை?
•சுடுகாட்டில் மயான சீட்டு இல்லாமல் பிணம் வெட்டியானால் எப்படி எரிக்கட்டது?
•8 பேர் மீது தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் விமலாதேவியின் அப்பா, சித்தப்பா, அம்மா, சித்தி இரண்டாம் திருமணத்திற்கு தயாராக இருந்த சதீஷ்குமார் அவரது அப்பா குருசாமி வெட்டியான் ஆகியோர் அடங்குவார்கள். இவர்கள் எல்லோரும் (வெட்டியான் தவிர) வீட்டில் இருக்கும் போது விமலாதேவி எப்படி தற்கொலை (தூக்கு) செய்துகெள்வார்? அவர் திட்டமிட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார் என்பதே உண்மை.
ஆனால் செல்லக்கண்ணு, பி.வி.கதிரவன் எம்.எல்.ஏ., ஆதிக்க சாதி கனவான்கள் மற்றும் காவல்துறையின் ஆசியோடு இது மறைக்கப்பட்டுள்ளது. பூதிப்புரத்தில் உள்ள சாதிக்காரர்கள் செத்த பெண்மீது பழி போடுகின்றனர். கொலையை நியாயப்படுத்துகின்றனர். சாதிமாறி காதலிப்பதை மன்னிக்க முடியாத குற்றமாகக் கருதுகின்றனர்.

கொல்லப்பட்ட விமலாதேவியின் கணவர் திலீப்குமார் இப்போது எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை. அவர் மதுரை மகபூப்பாளையத்தில் உள்ள சி.பி.எம். அலுவலகத்தில் சி.பி.எம். கட்சியினரின் பாதுகாப்பில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

ஆனால் தீண்டாமை ஒழிப்பு முன்னணி (சாதி ஒழிப்பு அல்ல) மற்றும் இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர், பிரிவு 302-ன் கீழ் கொலை வழக்குப்பதிவு செய்யக்கோரி சுவரொட்டி ஒட்டியுள்ளனர். ஜனநாயக மாதர் சங்கத்தில் உசிலை வட்டப் பொறுப்பில் இருப்பவர் செல்லக்கண்ணுவின் மனைவி முத்துராணி.

“வறட்டு கவுரவத்துக்காக ஒரு கொலை நடந்துள்ளது. தப்பவிடதே. தமிழக அரசே! நடவடிக்கை எடு.” என்று கோரி வி.சி.கட்சியினர் சுவரொட்டி இயக்கம் நடத்தியுள்ளனர். திருமாவளவன் படத்தைப்போட்டு விசிகட்சியினர் ஒட்டிய அனைத்து சுவரொட்டிகளையும் காவல்துறையும், பார்வர்டுபிளாக் கட்சியைச் சேர்ந்த சில வக்கீல்களும் தேடித் தேடிச் சென்று ஒன்றுவிடாமல் கிழித்துவிட்டனர். அதோடு மட்டுமல்லாமல் தலித்துகளை கெட்ட வார்த்தைகளால் நடுரோட்டில் அர்ச்சித்தனர். மேலும் உசிலை நகரில் உள்ள மாட்டிறைச்சிக் கடையில் போய் முன்னாள் ஊராட்சித் தலைவர் தகராறு செய்துள்ளார். விசி கட்சியைச் சேர்ந்த தென்னரசு என்பவரைத் தொலைபேசியில் அழைத்து மிகக் கேவலமாகத் திட்டி கொலை மிரட்டல் விட்டுள்ளனர்.

ஆனால், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஒட்டிய சுவரொட்டிகள் ஒன்று கூட கிழிக்கப்படவில்லை. சாதிக்கு சாதி சகித்துப் போய்க்கொள்ளும் நடைமுறை உள்ளதாகச் சொல்லிக் கொள்கின்றனர். இது என்ன உள்குத்தோ தெரியவில்லை.

இவற்றையெல்லாம் வைத்துக் கொண்டுதான் ஆர்.எஸ்.எஸ். பிஜேபி கும்பல் தமிழக அரசியலில் காய் நகர்த்துகிறது. சமூக நீதி, இட ஒதுக்கீடு, பெரியாரின் பெயரைச் சொல்லிக் கொண்டு பிழைப்பு நடத்தும் கட்சிகள் தான் இந்த மதவெறியர்களுக்குக் களம் அமைத்துக் கொடுக்கின்றனர்.

எமது தோழர்கள் விசாரித்ததில் தெரிந்த ஒரு விவரம் கடும் அதிர்ச்சியைத் தருகிறது. விமலா தேவியின் அப்பா வீரணன் காவல்துறை விசாரணையின் போது “என் மீதும் என் குடும்பத்தினர் மீதும் கொலைக் கேசு போட்டுக்கோங்க. ஆனால் என் மகளைக் கொன்னதாத் தான் கேசு இருக்கணும் – அவன் (திலீப்குமார்) பொண்டாட்டின்னு இருக்கக் கூடாது.” என்று சொன்னாராம்.

விமலாதேவியும் – திலீப்குமாரும் கேரளாவில் பதிவுத்திருமணம் செய்து கொண்டதற்கான அத்தாட்சி இருக்கிறது. அவர்கள் திருமணம் ரத்து செய்யப் படவுமில்லை. ஆனால் இதைத் தெரிந்தே வேறு ஒருவன் கட்டிக் கொள்ள சம்மதிக்கிறான் என்றால் சாதி வெறிபிடித்த இந்த சமூகம் எங்கே போய்க் கொண்டிருக்கிறது. இதை வீழ்த்த நாம் போராடவேண்டாமா?

தகவல்
மனித உரிமை பாதுகாப்புமையம்
உசிலம்பட்டி உட்கிளை மதுரை மாவட்டம்.

பதிவு : selvaravi87
நாள் : 12-Dec-14, 7:10 pm

மேலே