அன்புள்ள வன்னியச் சாதியை சார்ந்த அப்பாவி பொது மக்களே…....
அன்புள்ள வன்னியச் சாதியை சார்ந்த அப்பாவி பொது மக்களே….
உங்களிடம் பேச இப்படி ஒரு வாய்ப்பும் சந்தர்ப்பமும் இனி ஒரு முறை வாய்க்க கூடாது என்பதே எங்கள் விருப்பம். ஆனால் பேசுவதற்கான காரணமும் இருக்கிறது. வட மாவட்டங்களில் பாமகவினர் வன்னிய மக்களை வாக்கு வங்கி அரசியலுக்காக திரட்டியது போல வேறு சாதித் தலைவர்கள் தங்கள் சமூக மக்களை திரட்டியதில்லை. அதில் அவர்கள் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார்கள் என்பதற்கு அன்புமணியின் வெற்றி ஒரு சான்று.
இத்தகைய சூழ்நிலையில் வன்னிய சாதி வெறி என்பதும் வெறும் தலித் மக்களுக்கு எதிரானது மட்டுமல்ல அது ஏழை வன்னியர்களையும் எப்படி நாசமாக்கி நடு வீதியில் கொண்டு வந்து நிறுத்துகிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இதை எழுதுகிறோம்.
இந்த வார ஆனந்த விகடனில் வந்திருக்கிறது ஏழை வன்னிய சாதிப் பெண் பூங்கொடி சிதைக்கப்பட்ட கதை. சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள சென்றாயன் பாளையம் கிராமம் பெரும்பாலும் வன்னிய மக்கள் வாழும் ஊர். அதே ஊரில்தான் 50 ஆண்டுகளுக்கு முன்னர் சேலம் ஆத்தூர் பகுதியில் வறுமை காரணமாக தொழில் இல்லாமல்போனதால் சென்றாயன் பாளையத்திற்கு வந்து குடியேறியது பரமசிவம் குடும்பம். பரம்பரை பரம்பரையாக தறி நெய்யும் தொழில் செய்யும் பரமசிவத்தின் அப்பா. அந்த ஊருக்கு தன் பிள்ளைகளோடு வந்தார். பரமசிவம் அதே ஊரில் உள்ள வன்னியப் பெண்ணை திருமணம் செய்து மூன்று பிள்ளைகளுக்கு தகப்பனும் ஆனார்.
இதோ விகடனுக்கு பரமசிவமே வழங்கியிருக்கும் வாக்குமூலம்-
“பரம்பரையா தறி நெய்யிற வேலைதான் எனக்கு. சொந்தமா தறி போடுற அளவுக்கு வசதி இல்லை. கூலிக்குத்தான் தறி போட்டுட்டு இருந்தேன். மூத்தவன் ஒரு பையன், அடுத்து ரெண்டு பெண் குழந்தைங்க. அதுல பூங்கொடி மூத்தவ. பெண் குழந்தைகளைக் கரை சேர்க்கணுமேனு, மூணு பைசா வட்டிக்குக் கடன் வாங்கி சொந்தமாத் தறி போட்டேன். அஞ்சு வருஷமாச்சு… கடனை அடைக்க முடியலை. விடிய விடியத் தறி அடிச்சாலும் வாய்க்கும் வயிறுக்கும் மட்டும்தான் சரியா இருக்கும். மூணு குழந்தைகளையும் இங்கிலீஷ் மீடியத்துல படிக்கவைக்க ஆசை. ஆனா… எங்கே போறது..? எங்க குடிசைக்கு கதவே கிடையாது. ஒரு கம்பளிப் படுதாவைப் போட்டுத்தான் மூடி வைச்சிருப்போம். ஒருவேளை கதவு இருந்திருந்தா, என் மக உயிரோடகூட இருந்திருக்கலாம். கதவு இல்லாத வீட்டுக்குள்ள நடு ராத்திரி புகுந்து என் பொண்ணைத் தூக்கிட்டுப் போயிட்டானுங்க அந்தப் பாவிங்க!”
என்பவர் அதற்கு மேல் பேச முடியாமல் கேவிக் கேவி அழுகிறார்.
கதவே இல்லாத ஏழை வன்னியர் பரமசிவத்தின் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பத்து வயதுக் குழந்தை பூங்கொடியை தூக்கிச் சென்று பாலியல் வன்முறை செய்தது பூபதி கும்பல் . 5 பேர் கொண்ட பூபதி கும்பல் பாலியல் வன்முறை செய்யும் போதே குழந்தைபூங்கொடி செத்துப் போக பிறப்புறுப்பில் இருந்து கசிந்த ரத்தத்தை மறைக்க மஞ்சளையும், பவுடரையும் அள்ளிப் பூசியிருக்கிறார்கள். அப்படியும் ரத்தம் நிற்காமல் கொட்ட பக்கத்து விட்டில் திருடிச் சென்ற சேலையில் பூங்கொடியை கட்டித் தூக்கி ஒரு மரத்தில் தொங்க விட்டுச் சென்று விட்டது பூபதி கும்பல். மறு நாள் குழந்தையை க் காணாமல் தேடிய போது குற்றவாளி பூபதி தானும் சேர்ந்து தேடுவது போல நடித்திருக்கிறான். ஆனால் பூங்கொடியை அடக்கம் பண்றதுக்கு முன்னாடியே பூபதியும்அவனோட கூட்டாளி களும்தான் இந்தக் காரியத்தைப் பண்ணியிருக்கானுங்கனு தெரிந்து விட்டது. அஞ்சு பேரையும் போலீஸ் கைது செய்திருக்கிறது.
பூங்கொடி சிதைக்கப்பட்ட சம்பம் நடந்தது இந்த வருடம் பிப்ரவரி 14 -ம் தேதி தூக்கில் தொங்கவிடப்பட்ட பூங்கொடியின் உடல் கண்டெடுக்கப்பட்டது மறு நாள் 15 -ம் தேதி. செய்தியை அறிந்து சேலம் மக்கள் கொந்தளித்தனர். சென்றாயன் பாளையம் மக்களும் கொதித்துப் போனார்கள். கைது செய்யப்பட்ட குற்றவாளிகளை சேலம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வந்த போது பெருவாரியான பெண்கள் அவர்களை தாக்க திரண்டதால் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தாமல் நீதிபதியின் வீட்டில் ஆஜர் படுத்தி சிறைக்கு அனுப்பி குற்றவாளிகளை காப்பாற்றியது போலீஸ்.
சம்பவம் நடந்து நான்கு மாதங்கள் கூட ஆகவில்லை. கடந்த 31- ம் தேதி பூபதிக்கும், மறு நாள் ஜூன் 1- ம் தேதி ஏனைய நால்வருக்கும் சென்னை உயர்நீதிமன்றம் ஒரு லட்ச ரூபாய் உத்திரவாதத்துடன் கூடிய ஜாமீனை வழங்கி விட்டது. மறு உத்தரவு வரும் வரை காலை 10 மணிக்கு வாழப்பாடி காவல்நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்பது குற்றவாளிகளுக்கான நிபந்தனை. எந்த விதமான எதிர்ப்பும் இல்லாமல் இவர்களுக்கு ஜாமீன் கிடைத்திருக்கிறது.
பூங்கொடியை சீரழித்துக் கொன்ற கொலைகார வன்னியர்கள் சென்றாயன் பாளையத்திற்குள் வந்து குடியேறி விட்டார்கள். பூங்கொடியின் அப்பா பரமசிவமோ அந்த ஊருக்குள் வாழ முடியாமல் தனது பூர்வீக கிராமமான சேலம் ஆத்தூருக்கே திரும்பிச் சென்று விட்டார். காரணம் ஒரே சாதியாகவே இருந்தாலும் சென்றாயன் பாளையத்தில் எவரும் பரமசிவம் குடும்பத்தோடு பேசுவதில்லை. பேசுவதில்லை என்பது மட்டும் அல்ல. குற்றவாளிகளுக்கு எதிராக எவரும் சாட்சியம் சொல்லத் தயாராக இல்லை. விளைவு – போலீசாரால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய இயலவில்லை.
பரமசிவமே சொல்கிறார் வாசியுங்கள்.
“என் பொண்ணு இறந்தது தெரிஞ்சு பல ஊர்ல இருந்து வந்து எங்களுக்கு ஆறுதல் சொன்னாங்க. டெல்லி, சென்னையில இருந்து முக்கியமான ஆளுங்கள்லாம் வந்தாங்க. அதனால என் பொண்ணு கொலைக்கு நியாயம் கிடைக்கும்னு நினைச்சேன். ஆனா, இப்போ சென்றாயன்பாளையத்தில் என் சொந்த சாதி சனம்கூட அந்தச் கொலைகாரங்களுக்கு எதிரா சாட்சியம் சொல்லத் தயாரா இல்லை. காரணம், பயம்!
நேத்து என் குழந்தைக்கு நடந்தது, நாளைக்கு இந்த ஊர்ல யாருக்கு வேணும்னாலும் நடக்கலாமேனு யாரும் யோசிக்கவே மாட்டேங்கிறாங்க. ‘நேர்ல பாக்காம நாம எப்படி ஒரு ஆள் மேல பழி சொல்றது?’னு கேக்கிறாங்க. குழந்தையைத் தூக்கிட்டுப் போய் கொல்றவன், ஊர்ல தாக்கல் சொல்லிட்டா போவான்? மனச்சாட்சி உள்ள ஒருத்தராவது எனக்காகப் பேசுவாங்கனு பாக்குறேன், ம்ஹூம்… கொஞ்ச நாளா ஊர்ல யாரும் எங்ககிட்ட சாதாரணமாக்கூட பேசுறது இல்லை. என் மூத்த பையன் எட்டாவதும், கடைசி பொண்ணு இரண்டாவதும் படிக்கிறாங்க. பூங்கொடிக்கு இப்படி ஆனதும் பசங்க பள்ளிக்கூடத்துக்குப் போகப் பயந்தாங்க. ‘அப்பா எனக்கு வெளில போகவே பயமா இருக்குப்பா’னு பொண்ணு அழுவுறா. சொந்தக்காரங்க, சுத்துபத்தா இருக்கிறவங்க நம்பிக்கை குடுத்தாத்தானுங்க நாங்க அந்த ஊர்ல வாழ முடியும்.”
ஆக மொத்தம் ஒரு ஒரு ஏழை வன்னியனுக்கு ஆதரவாக வரவோ, பூங்கொடியை சிதைத்த கொலை பாதகர்களுக்கு எதிராக பேசவோ யாரும் தயாராக இல்லை. தன் சாதிக்காரன் என்கிற அளவில் கூட பரமசிவத்தோடு சென்றாயன் பாளையம் மக்கள் நிற்க தயாராக இல்லாமல் போக எது காரணம்? அச்சமா? அச்சம்தான் என்றால் அந்த அச்சம் எங்கிருந்து வருகிறது என்பதையும் நாம் பார்க்க வேண்டும்.
பூபதியின் உறவினர்கள் இன்னும் பாமகவில் தொடரும் நிலையில் அவர்களை பகைத்துக் கொள்ள முடியாது என்ற அச்சம் சென்றாயன்பாளையம் வன்னிய மக்களை பம்மி பதுங்க வைக்கிறது. கந்துவட்டி, கட்டப்பஞ்சாயத்து, நில பேரங்கள் என வன்னியர் சாதிசங்கம், பாமக அடையாளத்தோடு ஈடுபடும் இந்த கும்பலை பகைத்துக் கொண்டால் ஊருக்குள் வாழ முடியாது என்ற அச்சம் மக்களிடம் நிலவுவதால் அவர்கள் பரமசிவத்திற்காக வாய் திறக்க அஞ்சுகிறார்கள். ஆக, வன்னிய மக்களை அச்சுறுத்துவது வேறு சாதியல்ல, வன்னியர் சங்கம்.
ஆரம்பத்தில் மக்கள் சிலர் பூங்கொடி கொலை பற்றி பேசிய போது “நீ உன் கண்ணால பார்த்தியா?” என்று கேட்டு அவர்களை அமைதியாக்கியிருக்கிறது இந்த கும்பல். இதுதான் ராமதாஸ் உருவாக்கியிருக்கும் வன்னிய பாசம். இந்த சாதிப்பாசம்தான் தருமபுரியில் திவ்யா, இளவரசன் என்ற இளம் காதலர்களைப் பிரித்தது. இளவரசனை காவு வாங்கியது. தற்போது அன்புமணியை ஜெயிக்க வைத்திருக்கிறது.
இயல்பான ஒரு காதலுக்கு தண்டனையாக தலித் மக்களின் வீடுகளைக் கொளுத்தி, இளவரசனின் உயிரையும் பறித்த ராமதாசின் சாதிவெறி அரசியல், பூங்கொடிக்கும் அவள் தந்தை பரமசிவத்துக்கும் வழங்கியிருக்கும் நீதி என்ன?
நத்தம் காலனியையே கொளுத்திய வன்னிய சாதிவெறி, குறைந்த பட்சம் பூபதியின் கடை மீது ஒரு கல்லையாவது எறிந்ததா? அல்லது அவனை ஊர் விலக்கம் செய்ததா? குற்றவாளி வன்னியன் கம்பீரமாக உலா வர, பாதிக்கப்பட்ட வன்னியர் பரமசிவமும் அவரது குடும்பமும் அல்லவா ஊரை விட்டே ஓடும் நிலை ஏற்பட்டிருக்கிறது!
ராமதாஸ் ஊட்டிய சாதி வெறி என்ன மனநிலையை மக்களிடம் உருவாக்கியிருக்கிறது? பூங்கொடிக்கு நீதி வழங்குவதன்மூலம் சாதி மானத்தை காப்பாற்ற அவர்கள் நினைக்க வில்லை. மாறாக, பூபதி உள்ளிட்ட 5 கிரிமினல்களைக் காப்பாற்றுவதன் மூலம், தங்கள் சாதி மானத்தை காப்பாற்றிக் கொள்ள அவர்கள் முயற்சிக்கிறார்கள்.
“நம்ம சாதிப் பசங்களுக்கு எதிராக போலீசுக்குப் போக கூடாது. சாட்சி சொல்லக்கூடாது”. இதுதான் பரமசிவத்திடம் ஊரார் எதிர்பார்த்த உன்னதமான சாதி அறம். அதாவது பெத்தவன் பறி கொடுத்த பிள்ளையைப் பற்றிய கவலைப்படக் கூடாதாம். வன்னிய சாதி மானம் கப்பல் ஏறி விடக் கூடாதாம். இந்த சாதிப் பாசம்தான் பாதிக்கப்பட்ட பரமசிவத்தின் குடும்பத்தை சென்றாயன் பாளையத்தில் வாழவிடாமல் துரத்தியிருக்கிறது.
சாதி அரசியலால் எந்த சாதியைச் சேர்ந்த உழைக்கும் வர்க்கமும் என்றைக்கும் பயன் பெற்றதில்லை. மாறாக, சுயநிதிக் கல்விக்கொள்ளையர்கள், மணல் திருடர்கள், கிரானைட் திருடர்கள், அரசியல் தரகர்களும் பூபதியைப் போன்ற கிரிமினல்களும்தான் சாதி அரசியலால் ஆதாயம் அடைந்திருக்கிறார்கள்.
வன்னிய சாதிப்பாசமானாலும் சரி, வேறு எந்த சாதிப்பாசமானாலும் சரி அது நீதிக்கும் நடுநிலைக்கும் எதிராக சிந்திப்பதற்கு மட்டுமே மக்களைப் பயிற்றுவிக்கும். தருமபுரியில் இளவரசனின் ரத்தத்தை ருசி பார்த்த சாதி அரசியல் என்ற கத்திதான், இங்கே சொந்த சாதிச் சிறுமியின் ரத்தத்தை ருசி பார்த்திருக்கிறது.
“இளவரசனின் மரணத்தை கொலை என்று நிரூபிக்க முடியுமா?” என்று கேட்ட சாதிவெறியர்களின் அதே வாதத்திறமைதான், “பூபதி உள்ளிட்ட 5 பேர்தான் பூங்கொடி என்ற இளம் தளிரை வல்லுறவுக்கு ஆளாக்கி கொன்றதை நிரூபிக்க முடியுமா?” என்று கேட்கிறது.
இளவரசனுடைய பெற்றோருடைய கண்ணீருக்கும், பரமசிவத்தின் கண்ணீருக்கும் என்ன வேறுபாடு? இளவரசனுடைய பெற்றோரின் கண்ணீரைத் துடைக்கவாவது ஆயிரக்கணக்கான மக்களின் கரங்கள் நீண்டன. தீண்டாமைக்கும் சாதிவெறிக்கும் எதிரான அமைப்புகளும் மக்களும் தமிழகம் முழுவதும் குரல் கொடுத்தார்கள்.
ஆனால் பரமசிவத்தின் கதி? சொந்த சாதிக்காரர்கள் யாரும் அவருடைய கண்ணீரைத் துடைக்க கை நீட்டவில்லை. மாறாக சொந்த சாதிதான் அவரைப் பழி வாங்கிவிட்டது. குற்றவாளிகள் கம்பீரமாக உலா வர, பாதிக்கப்பட்ட அந்த தொழிலாளியை கூனிக்குறுகி ஊரை விட்டே ஓட வைத்து விட்டது.
தன்னையும் தனது குடும்பத்தின் சொத்துக்ளையும் பெருக்கிக் கொள்வதற்கு பதவியையும் அதிகாரத்தையும் பயன்படுத்திக் கொண்ட ராமதாசுக்கு ஆதரவாக அன்புமணிக்கு வாக்களித்த சாதி உணர்வு, பரமசிவம் என்ற நெசவாளிக்கு அனுதாபம் கூடக் காட்டவில்லையே, வன்னிய சாதி மக்களை இத்தகைய இழி நிலைக்கு ஆளாக்கியவர்கள் யார்?
பரமசிவத்துக்கு ஏற்பட்டுள்ள இந்த நிலைக்கு காரணம் ராமதாசும் அன்புமணியும் காடுவெட்டி குருவும் தூண்டிய சாதிவெறிதான். வட மாவட்டங்களில் வாழும் பெரும்பான்மை வன்னிய மக்களிடம் நிலம் கிடையாது. உழைத்து வாழக்கூடிய கூலித் தொழிலாளர்கள் என்பதால் இயல்பாகவே தலித் மக்களுடன் இணக்கத்தோடு வாழ்கிறவர்கள் வன்னிய மக்கள்.
‘நக்சலைட்டுகள் வேட்டை’ என்னும் பெயரில் எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் வால்டர் தேவாரத்தால் வேட்டையாடப்பட்ட இளைஞர்களுள் பெரும்பான்மை இளைஞர்கள் வட மாவட்டங்களைச் சார்ந்த வன்னியர்கள்தான். அப்புவும் பாலனும் மார்க்சிய லெனினிய இயக்கமும் ஊட்டி வளர்த்த ஜனநாயகப் பண்பாடு காரணமாகத்தான் பெருமளவு சாதி மறுப்பு திருமணங்கள் மிகவும் இயல்பாக அங்கே நடந்து வந்தன.
சித்திரை விழாவில் பேசிய காடு வெட்டி குரு, “நாங்கள் வன்னியர் சங்கத்தை துவங்கியதன் மூலம் இளைஞர்கள் நக்சலைட் தீவிரவாதிகளாக மாறாமல் வன்னிய சமூகத்தை நாங்கள் காப்பாற்றினோம்” என்றார். உண்மையில் வன்னியர் சங்கம் போன்ற எல்லா சாதிச் சங்கங்களாலும் காப்பாற்றப்படுபவர்கள் பூபதியைப் போன்ற கிரிமினல்கள்தான்.
சாதி அரசியல், திவ்யாவைப் போன்ற பெண்களின் காதலை முறிக்கிறது. பூங்கொடி போன்ற சிறுமிகளைத் தூக்கில் தொங்க விடுகிறது. இளவரசனை மட்டுமல்ல திவ்யாவின் தந்தையையும் மரணத்துக்கு தள்ளுகிறது. ஏழைத்தொழிலாளி பரமசிவத்தை தனிமைப்படுத்தி விரட்டுகிறது.
சாதிச் சங்கம் குற்றவாளிகளைக் காப்பாற்றுவது மட்டுமல்ல, தத்தம் சாதியைச் சேர்ந்த மக்களை குற்றத்தில் உடந்தையாக்குகிறது. சாதியின் பெயரால் அவர்களுடைய சிந்தனையை ஊழல் படுத்துகிறது. அவர்களை மனச்சாட்சியற்றவர்களாக்குகிறது.
இதை நாங்கள் சொல்லவில்லை. தனது சொந்த அனுபவத்திலிருந்து பரமசிவம் சொல்லியிருக்கிறார். சிந்தித்துப் பாருங்கள்.
_______________________________________
படங்கள் : நன்றி விகடன்