எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

புதுகவிதைகளின் முன்னோடிகளில் ஒருவர், ஈழத்தில் பிறந்து தமிழகத்தில் வசித்து,...

புதுகவிதைகளின் முன்னோடிகளில் ஒருவர், ஈழத்தில் பிறந்து தமிழகத்தில் வசித்து, பல புனைப்பெயர்களை அடிக்கடி மாற்றி மாற்றி எழுதி புதுப்பித்துக்கொண்டிருப்பதில் ஆர்வமானவர்.. மறைந்த ஈழத்து எழுத்தாளர். பிரமிள் என்கிற தருமு சிவராம் அவர்களின் ஒரு கவிதை... இதோ....
--------------------------------------------------------------------------------------------------

முதல் முகத்தின் தங்கைக்கு
**********************************************

துடித்து
அன்று விழுந்த பகலை மீண்டும்
மிதித்து நடப்பவளே
கொலுசு சூழாத நிசப்தத்தில் நின்
வெண்பாதச் சதைகள் மெத்திட்ட
புல்தரையைக் கவனி

உன்முன் சென்றவள் என்னை
உதறிச் சிந்திய சுவடுகள்
அழுதழுது வரளும் என்
மன வெறுமையிலே
ஏழுவண்ணப் புதிர்கள்
அவிழ எனவா நின்
ஒருதுளிப் பார்வை?
அல்ல
தோற்றழியும் என் தவிப்பை
என் உடலின் இலைநரம்புகள்
உள்ளுரப் பரிகசித்துச்
சிரிக்க என் முகம்தேடி
பார்க்க நிமிர்ந்தனையோ?

உயர்ந்து வளர்ந்த சின்னவளே
அண்ணாந்து
என் மாடியைப் பார்ப்பதேன்?

அழியத் துணிந்தும்
அழியாது தடுமாறி
எரிந்தெழுந்து
சாம்பல் புழுதியில்
உயிர் உடலாகத் திரண்டு
மீண்டும் நிலைத்த நிழல் நான்.
உன் முன்னவளின்
ஜால மருந்து தொடுத்த
பார்வைமழை நுனிகளை
எதிர்பார்த்து மறுப்பின்
குரூர நுனிகள் தைக்க
துடித்திறக்கும் எனது நாட்களை
மீண்டும் நிகழ்விக்கவா
என் வாசலில் நின்று
முகம் திரும்பினை?
கவனி-
என் மாடி உப்பரிகையல்ல
உச்சியில் ஒருகுடில்
என்னுள் கவிதையின்
காலதீதச் சழலெனினும்
நாசியில்-
உன் நாசியிலும் தான்-
நம்மிருவர் தெருவின்
எல்லையில் குடிகொண்டு
வாழ்வின் மறுப்புக்கணை பாய
இறந்து வீழ்ந்த
இதயங்களைச் சூழ்ந்து
பிழம்பு வளர்க்கும்
சுடலையின் வீச்சம்.
எனவே,
விளையாடாதே!
என் இதயத்தை வளைக்கும்
இருள் முடிச்சு
உன் புன்னகை விரல்களில்
அவிழ்ந்து
கருநிற மெத்தைகளாய்
சிதறிச் சிரிக்க
மன நடு இரவு
பூ முகம் கொள்ளுமெனில்
சொல்,
சொல்லை இதயத்தின்
சொல்லற்ற சுனைதர
பேசு.
அது இன்றி
விளையாடினாயெனில்
ஹோம குண்டங்கள் கூட
வெற்றுப் புகைமுடிச்சாய் மண்ட
வேதனை மீண்டும்
அக்னியை உரிமைகொள்ளும்.
-------------------------------------------------------------------------------------------------

பசுந்தரை
******************
கருகாத தவிப்புகள் கூடி
நாவின் திரி பிளந்து
அணையாது எரியும் ஒருபெயர்
நீ!
புதுநெருப்பில் இடைபுதைத்து
வெளியில் எரியும் வகிடெடுத்து
திரண்டு சிவந்தவள்
நீ!


என்நரம்பு வலைதொறும் விரியும்
உன்தீத் தளிர் வடிவுகளை
என் தழுவல்கள் கவ்வி
மின் நதியைப் புணரும்
சர்ப்பச் சுருணைகளாய்
எரிந்து சிந்த
மீண்டும் என்
பஸ்மத்திலிருந்தே
படம்புடைத்தெழுகிறேன்
உன்மீது சரிகிறேன்.


எரிவின் பாலையிலிருந்து மீண்டு
உன்தசைப் பசுந்தரையில்
என்வாய் பாதம் பதிக்கிறது.
பற்கள் பதிந்தகல
இதோ உன்மீதென்
முதிராத யுவ நடையில்
தத்தளித்த முத்தங்கள்.
நீ தரும் பதில் முத்தங்களின்
மதுர வெளியில் மீண்டும் என்
உதிரம் அலைகிறது.


பாலையில் படர்கிறது
பசுந்தரை.
-------------------------------------------------------------------------------------------------
படித்து பிரமித்து.........மலைத்து .. ரசனையில் செத்துத்தான் போனேன்.. ..!

கல்லூரி காலத்தில் இவரின் கவிதையை ஆவலுடன் படித்திருக்கிறேன். அவரை மீண்டும் நினைவூட்டிய தோழர் கவிஜிக்கு நன்றிகள்.

பிரமிள் என்று கூகுள் தேடலில் தேடிபார்த்தால் பிரமிள் கவிதைகள் ,சிறுகதைகள், கட்டுரைகள் ஏராளம் கிடைக்கும்.

பிரமிள் கவிதைகளை.. தளத்தில் பிரபல கவிஞர்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்றும் இதன் மூலம் எழுத்து நிர்வாகத்திற்கு கோரிக்கை வைக்கிறேன்.


நன்றி..!


--இரா.சந்தோஷ் குமார்

நாள் : 13-Feb-15, 8:15 am

மேலே