பெங்களூரில் திருவள்ளுவர் மாநாடு..... கடந்த 14-02-2015 மற்றும் 15-02-2015...
பெங்களூரில் திருவள்ளுவர் மாநாடு.....
கடந்த 14-02-2015 மற்றும் 15-02-2015 ஆகிய இரண்டு தினங்களில் பெங்களூரில் திருவள்ளுவர் மாநாடு நடைபெற்றது. இதனை நடத்தியவர்கள் பெங்களூர் தமிழ் சங்கத்தினர். இந்த மாநாட்டிற்கு வருகிறீர்களா என்று எனக்கு அழைப்பு வந்தபோது எனக்கு உடனே பதில் கூற இயலவில்லை. பின்பு கணவரிடம், என் பிள்ளைகள் மற்றும் என் தம்பி ஆகிய அனைவரிடமும் இதற்கான அனுமதியை நான் பெற்றபோது அளவில்லா மகிழ்ச்சி அடைந்தேன்.
பெங்களூர் செல்ல இருக்கும் செய்தியை நான் இங்கு பதிவிட்டபோது பெங்களூரில் வசித்துக் கொண்டிருக்கும் தளத்தின் தோழர் திரு ஜின்னா அவர்கள் தாமும் அதில் கலந்து கொள்கிறேன் என்றும் அங்கு நடைபெற இருக்கும் நிகழ்ச்சிகளையும் கேட்டு அறிந்து கொண்டார். 13-02-2015 அன்று சுமார் 15 பேர் சென்னையில் இருந்து லால் பக் விரைவு இரயில் வண்டியில் புறப்பட்டு இரவு பெங்களூர் தமிழ் சங்கம் சென்றடைந்தோம். அந்த சங்கத்திலேயே எங்களுக்கு தங்குவதற்கான வசதிகளும் செய்யப் பட்டிருந்தது.
14-02-2015 அன்று காலை 9.30 மணி அளவில் "திருக்குறள் முற்றோதல்" நிகழ்ச்சி ஆரம்பமானது. அங்கு கூடி இருந்த ஒவ்வொருவரும் திருக்குறளில் இருந்து தலா ஒரு அதிகாரத்தை மேடை ஏறி வாசித்தோம். வாசித்து முடித்து நான் ஜின்னா அவர்களின் வருகைக்காக எதிர் பார்த்துக் கொண்டிருந்தேன். ஜின்னா அந்த இடத்தினை வந்து அடைந்தபொழுது பிற்பகல் 12.00 மணியைக் கடந்து விட்டிருந்தது. ஜின்னா அவர்களை அந்த நிகழ்ச்சியில் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். தளத்தில் உள்ள படைப்பாளிகளை இப்படி எங்கு காண நேர்ந்தாலும் ஒரு மகிழ்ச்சிதான்.
திருக்குறள் முற்றோதல் முடிவிற்கு பின்பு பிற்பகல் 2.00 மணி அளவில் கவி அரங்கம் நடை பெற இருந்ததால் கவிதை வாசிப்பவர்களின் பெயர்களும் அவர்கள் வாசிக்க இருக்கும் தலைப்பையும் கேட்டு பெற்றுக் கொண்டார்கள். மொத்தம் 10 தலைப்புகள் கொடுக்கப் பட்டிருந்தது. அவை பின் வருமாறு. தோழமைகளும் இந்த தலைப்பினில் எழுத முயற்சி செய்யுங்கள்:
1. அறத்தாறு
2. தவம்
3. உரைப்பார் உரைப்பவை
4. அருளும் பொருளும்
5. உழுவாரும். எழுவாரும்
6. குறிப்பறிதல்
7. உள்ளம் கொளல்
8. ஆற்றுவார் ஆற்றல்
9. நிறை உடையேன்
10.பற்றர்கரியது
ஜின்னா வருவதற்கு முன்பாகவே, கவிதை வாசிப்பவர் பட்டியலில் ஜின்னாவின் பெயரை எழுதிவிட்டேன். தலைப்பு மட்டும் தெரியாமல் போனது. ஜின்னா வந்த பிறகு தலைப்பினை கேட்டு பூர்த்தி செய்தேன். ஜின்னாவும் நானும் பேசிக் கொண்டிருந்த சமயத்தில் ஜின்னாவின் அருகில் ஒரு கவிஞர் வந்து அமர்ந்தார். வருகை பதிவேட்டிற்கான புத்தகத்தில் அவர் தமது பெயரை எழுதும் போது கவனித்துவிட்ட ஜின்னா, கருமலை தமிழாழன் அய்யா அவர்கள் என்று என்னிடம் மெதுவாக கூறிய போதுதான் கவனித்தேன் அய்யா அவர்கள். பிறகு ஒருவருக்கு ஒருவர் அறிமுக பரிமாற்றங்கள். இதனை அடுத்து மதிய உணவு இடை வேளை. அந்த அரங்கிலேயே உணவு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. ஜின்னாவுடனும் இன்னும் எனது நட்பு வட்டங்களுடன் சேர்ந்து உணவருந்தினேன்.
குறிப்பிடப்பட்ட அந்த நேரமான 2.00 மணிக்கு கவி அரங்கு தொடங்கி விட்டது. நான் எழுதியிருந்த தலைப்பு "தவம்". விசாரித்ததில் இதே தலைப்பில் இன்னும் நிறைய பேர் எழுதியிருந்ததால் காலையில் பிற கவிஞர்கள் திருக்குறள் வாசித்துக் கொண்டிருக்கும்போதே "உழுவாரும் எழுவாரும்" என்கிற தலைப்பினில் ஒரு கவிதை எழுதி முடித்தேன். ஜின்னாவிடம் விசாரித்தபோது "உழுவாரும் எழுவாரும்" என்கிற தலைப்பில் எழுதி இருப்பதாக கூறவும் எனக்கு எதனை வாசிப்பது என்கிற யோசனை. என் நட்பு வட்டங்கள் " தவம் " என்கிற தலைப்பினில் எழுதிய கவிதையை வாசிக்கும்படி கேட்டுக் கொண்டார்கள்.
அந்த அரங்கினில் சென்னையில் இருந்து வந்த கவிஞர்களுக்கு சோதனை என்னவென்றால், காலையில் இருந்து கவிதை வாசிக்க காத்திருந்தும் பெங்களூரில் இருந்து பிந்தி வந்த கவிஞர்களுக்கே வாசிக்க முன்னுரிமை அளிக்கப் பட்டது என்பது வருந்தத்தக்க விடயம். ஜின்னாவின் கம்பீரமானக் குரலில் அற்புதமான கவிதையை கேட்டு ரசித்தேன். நிறைய பேர்கள் ஜின்னாவை வாழ்த்தி பாராட்டினார்கள். கவிதை வாசித்தவர்களுக்கு நல்ல மரியாதை செய்யப் பட்டது. சால்வை அணிவித்து, கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி சிறப்பித்தார்கள். நான், கருமலை தமிழாழன் அய்யா அவர்கள் மற்றும் ஜின்னா ஆகிய மூவரும் சேர்ந்து புகைப் படம் எடுத்துக் கொண்டோம். மிக்க மகிழ்ச்சியான தருணங்கள்.
இதன் பிற்பாடு "வாழ்க்கைக்கு அவசியம் அறமா?? இல்லை பொருளா??" என்கிற சுவாரசியமான பட்டிமன்றம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி முடிவுற்றவுடன் ஜின்னா விடைபெற்று சென்றுவிட்டார். இரண்டு நாட்கள் நிகழ்ச்சி என்றாலும் நானும் அன்றைய இரவே பெங்களூரில் உள்ள எனது உறவினரோடு அலைபேசியில் பேசி என்னை அழைத்து செல்லும்படி கூறவும் இரவு 9.00 மணி அளவில் என்னை அவர்களது இல்லத்திற்கு அழைத்து சென்றுவிட்டார்கள்.
மறுநாள் மாலை வரை உறவினர் இல்லத்தில் ஓய்வில் இருந்தேன். என்னை ISCON (கண்ணன் கோவில்) கோவிலுக்கு அழைத்து செல்லும்படி கேட்டுக் கொள்ளவும் என்னை அழைத்து சென்றார்கள். அப்படி சென்று வந்ததில் எனக்கு பேரானந்தம். மறுநாள் ரயில் மூலமாகவே சென்னை வந்தடைந்தேன். இந்த பயணத்தை என் வாழ் நாளில் மறக்க இயலாது. உங்களுடன் பகிர்வதில் மிக்க மகிழ்ச்சி.