எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அந்திவானில் நாணிக் கோணும் சூரியன்,, தென்னங் கீற்றிடையில் நீந்தும்...

அந்திவானில் நாணிக் கோணும் சூரியன்,,
தென்னங் கீற்றிடையில் நீந்தும்
பிறைநிலா,,
கிணற்றுத் தவளையோடு தவழ்ந்திடும் நட்சத்திரங்கள்,,
மின்தடை இரவில் மினுங்கும் மின்மினிகள்,,
கோபுரக் கலசத்தில் கூடிக்குலாவும் மாடப்புறாக்கள்,,
தூரத்தில் கூவிச் செல்லும் ரயில்,,
வாடைக் காற்றில் பேருந்தின் ஐன்னலோரம்,,
அடை மழையில் குடையாகும் முந்தானை,,
கடுங்குளிரில் கையிருக்கும் கோப்பைத் தேநீர்,,
மஞ்சள் வெயிலோடு பாடும் குயில்,,
காது மடல்களில் கசிந்தோடும் குழலோசை,,
திக்கித் தித்திக்கும் மழலை மொழி,,
தீந்தமிழில் தேனூறும் செந்தமிழ்க் கவிதைகள்,,
கால் நனைக்கும் கடற்கரை அலைகள்,,
கட்டி இடித்த மணல் வீடு,,
பிச்சு தந்திடும் பஞ்சு மிட்டாய்,,
பால் பிடிக்கும் பச்சநாத்து வாசம்,,
பதமாய் விரியும் பாரிஜாத பூக்கள்,,
பாக்கிடிக்கும் பாட்டியின் பொக்கவாய் புன்னகை,,
என,,
அனுமார் வாலாய் நீளும்
என்
அபிமானங்களின் பட்டியலில்
அடம்பிடித்தே இடம்பிடித்து விடுகின்றன,,
தவறுகளுக்காய் நீ போடும் தோப்புக்கரணங்களும்,,
சரிகளுக்காய் நான் இடும் நெற்றிமுத்தங்களும்,,
நாள் தவறாமல்,,
நமக்கு நரை கூடப் போகும்
இந்நாட்களிலும் கூட,,

நாள் : 22-Feb-15, 4:33 pm

மேலே