எது எப்படி விமர்சனம் ...???? >விமர்சனம் நேர்மையாய் இருக்க...
எது எப்படி விமர்சனம் ...????
>விமர்சனம் நேர்மையாய் இருக்க வேண்டும், ஆனால் காயப்படுத்தக்கூடாது
>பாராட்டுகிறேன் என்ற பெயரில் பொய்யான புகழ்ச்சி கசப்பான விமர்சனத்தைவிட அபாயமானது
>யாரும் பிறக்கும்பொழுதே வள்ளுவனாய், கம்பனாய், பாரதியாய்ப் பிறப்பதில்லை (இம்மூவர் உட்பட!) முயற்சி-பயிற்சி ஆகிய சுழற்சியே நல்ல கவியை வடிவமைக்கிறது
>குழந்தை எடுத்தவுடன் ஓடாது, ஆனால் அது தவழும்பொழுதே ’ஆகா! ஓகோ!’ என்றுவிட்டால் அது அத்தோடு நின்றுவிடும், எழுந்து நடக்க முயலாது, அன்றியும் அது தவழ்கையிலேயே ‘நீ இவ்வளவுதான், உனக்கு ஓடலாம் வராது’ என்பதும் அதே அளவு தீங்கே!
>செடிக்கு நீர் ஊற்ற வேண்டும், அமிலத்தை அல்ல. ஊற்றும் நீரையும் அளவாய் ஊற்ற வேண்டும். காயப்படுத்தும் சொற்களும், ஒரு தலையான விமர்சனமும் அமிலம்! பொய்யான புகழ்ச்சி மேலுக்குத் தண்ணீர் ஊற்றிவிட்டு, அடியில் வேரைக் கிள்ளி கிண்ணத்தில் ‘போன்சாய்’ வளர்க்கும் தந்திரம் - இரண்டாலும் செடி வளர்ச்சியடையாது!
>இதற்கெல்லாம் மேலாய், வெள்ளத்தில் நின்று வளரும் செடியும் உண்டு, வெட்ட வெளியில் மொட்டப்பாறையில் ஒட்டி வளரும் செடியும் உண்டு - படைப்பாளியும் அப்படி இருக்க வேண்டும்...
>தன் திறமையின் வீச்சு அவனுக்குத் தெரிந்திருக்க வேண்டும், தன் படைப்பின் நிறைகுறைகளை ஓரளவேனும் உணர்ந்திருக்க வேண்டும்... அப்பொழுது காழ்ப்புணர்ச்சி எது, உண்மைவிமர்சனம் எது, போலிப் புகழ்ச்சி எது என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாகிவிடும் - கொள்வன கொண்டு கழிப்பன கழித்து, வீசிய கற்களை பாதையாய் சமைத்து, தூற்றிய குப்பையைத் துடைத்துவிட்டு, தூக்கிவிடும் கரங்கள் பற்றி உயர செல்லலாம்...
>நம் முதல் நண்பனும், கடைசி எதிரியுமாக - நல்ல விமர்சகனும் கண்டிப்பான ஆசிரியனுமாக நமக்கு நாமே இருக்க வேண்டும் - முக்கால்வாசி சிக்கலை இந்தப் படிநிலையே தடுத்துவிடும்!
நன்றி: Vijayanarasimhan