பாராட்டு சோறு போடுமா? அழ முடியாத அழ வேண்டிய...
பாராட்டு சோறு போடுமா?
அழ முடியாத
அழ வேண்டிய தருணத்தில்
வீங்கி நிரம்புகிறது
சொற்களை கருத்தரித்த மௌனம்
சில்லரைகளால் நிரம்பிய
உண்டியல் முன் நின்று
பசிக்கு பிச்சையெடுக்கும்
குழந்தையின் கைகளாக மாறியிருந்த நாவை
சுமந்த உடலின் எடை அப்போது
குறைந்திருந்தது
கூண்டில் வாழ பழகிய
ஒற்றை சிங்கம் காட்டில்
புணர தெரியாமல் விழித்ததை போன்ற
அந்த அவமானம்
இதை வடிகட்டி துணியில் முடிந்து
எடுத்து செல்கிற என் காதுபடவேதான்
சொல்கிறார்கள் டீ நன்றாக இருப்பதாக.
"நான் இல்லையே!"
என்று சொல்லியழ ஆளில்லாத
இத்தருணத்தில்தான் என் மனம் பிணமாகவும்
இவ்வுடல் பாடையாகவும் மாறியிருந்தது
குரு