லண்டன்: குணப்படுத்த முடியாத இதய நோயுடன் பிறந்து 23...
லண்டன்: குணப்படுத்த முடியாத இதய நோயுடன் பிறந்து 23 நாட்கள் வாழ்ந்த குழந்தை இறப்பிற்கு பின் பலருக்கு மறுவாழ்வு அளித்துள்ளது.
பிரிட்டனை சேர்ந்த எமி மற்றும் லியம் டக்ளபிக்கு ஒரு பெண் குழந்தை மினி பிறந்தது. குழந்தையின் இதயத்தில் குணப்படுத்த முடியாத நோய் இருப்பதாகவும் எந்நேரமும் குழந்தை இறந்துவிடக் கூடும் என்றும் ஒரு பேரிடி போன்ற செய்தியை அவர்களிடம் டாக்டர்கள் கூறினர். உயிர் காக்கும் கருவிகளின் உதவியுடன் தங்கள் குழந்தை 23 நாட்களாக உயிருக்கு போராடுவதைக் கண்ட பெற்றோர் குழந்தையின் உடல் உறுப்புகளை தானமளிக்க முன்வந்தனர்.
இதையடுத்து குழந்தைக்கு அளிக்கப்பட்ட உயிர் காக்கும் கருவிகள் அகற்றப்பட்டது. குழந்தை மினி இறந்ததும் அவளுடைய உடல் உறுப்புகள் அகற்றப்பட்டு தேவையானவர்களுக்கு பொருத்தப்பட்டது. தான் 28 ஆண்டுகளில் செய்யாததை தன் மகள் 23 நாட்களில் செய்து உலகை விட்டு மறைந்து விட்டாள் என மினியின் தந்தை நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். இதன் மூலம் பிரிட்டனில் குறைந்த வயதில் உறுப்பு தானம் செய்த பெருமை மினிக்கு கிடைத்துள்ளது.