எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மதுவிலக்கு: மகாத்மா காந்தியின் அறவழியில் பயணிப்போம். மதுவிலக்கு போராட்டமும்...

மதுவிலக்கு: மகாத்மா காந்தியின் அறவழியில் பயணிப்போம்.

மதுவிலக்கு போராட்டமும் மாணவர்களின் எதிர்காலமும்,
மதுவுக்கு எதிரான போராட்டங்கள் தமிழகம் முழுவதும் முழு வீச்சுடன் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது, பல அரசியல் கட்சிகளும் மாணவர் அமைப்புகளும் தமிழ்நாட்டில் மதுக்கடைகளை மூட வேண்டும் என வலியுறுத்தி போராடுவது வரவேற்கத்தக்கது. ஆனால் இதில் கலந்துகொள்ளும் மாணவர்களின் எதிர்காலத்தை மனதில் வைத்துக்கொண்டு அரசியல் தலைவர்கள் அவர்களை வழி நடத்துகின்றர்களா என்பது தான் விடை தெரியா கேள்வியாக உள்ளது, தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கு ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை, மதுவிலக்குக்காக தமது வாழ்நாள் முழுவதும் போராடிய நம் தேசத்தந்தை காந்தியடிகளின் போராட்டம் அகிம்சையான, அமைதியான முறையில் தான் இருந்தது என்பதை நாம் மறந்துவிட்டோம் என்றே தோன்றுகிறது,. வெள்ளையனே வெளியேறு இயக்கம் உள்ளிட்ட அகிம்சை போராட்டங்கள் மூலம் அறவழியில் நமது நாட்டுக்கு சுதந்திரம் பெற்று தந்தார். இவரது அகிம்சை தான் இன்றைய உலகுக்கு அவசிய தேவை, அகிம்சை வழியில்... நம்முடைய உரிமைகளை, கோரிக்கைகளை வன்முறை வழியில் அடையாமல் அறவழியில் எடுத்துசெல்வதே அனைவருக்கும் பயன்வகிக்கும் என்பது நாம் மறந்ததேன்,.
மதுவினால் ஏற்படும் சமூகப்,பொருளாதார பாதிப்புகளை உணர்ந்த காந்தியடிகள் சுதந்திரப்போராட்டத்தின் முக்கிய அங்கமாக, கள்ளுக்கடை மறியலை முன்னிறுத்தினார். நிர்மாணத்திட்டத்திலும் இது முக்கிய இடம் பெற்றது. 1931ல் அன்றைய சென்னை மாகாணத்தில் நடந்த 9000 சாராயக்கடைகளுக்கான ஏலத்தில் 6000த்திற்கும் மேற்பட்ட கடைகளை ஏலம் எடுக்க ஆட்கள் வரவில்லை என்பதிலிருந்து காந்தியடிகளின் பிரச்சாரம் எந்த அளவிற்கு மக்களிடம் மனமாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது என்பதை உணரலாம். மதுவால் அதிகமாக பாதிக்கப்படுவோர் பெண்கள் என்பதால், அவர்களின் தலைமையிலேயே மதுவிலக்கு பிரச்சாரம் நடத்தப்படவேண்டும் என்ற யுக்தி நல்ல பலனைப் பெற்றுத் தந்தது. கள்ளுக்கடை மறியல் போராட்டம் எப்போது நிறுத்தப்படும் என்று நிருபர்கள் கேட்டதற்கு அண்ணல் காந்தியடிகள் "...அது ஈரோட்டிலிருக்கும் கண்ணம்மையையும், நாகம்மையையும் கேட்கவேண்டும்" என்றார். நாகம்மை பெரியாரின் துணைவி. கண்ணம்மை பெரியாரின் சகோதரி.

மதுவிலக்குப் பிரச்சாரத்திற்காக தனது சொந்த தோட்டத்தில், அரசு அனுமதியின் பேரில் கள் இறக்கிக் கொண்டிருந்த ஆயிரக்கணக்கான தென்னை மரங்களை வெட்டி வீழ்த்தினார் பெரியார். துணைவியார், சகோதரி, பெரியார் என்று ஒட்டு மொத்த குடும்பமே மதுவிலக்கிற்காகப் பாடுபட்டது.
இன்றைய நிலையில் பல மாணவர்கள் மதுக்கடைகளை மூட வேண்டும். மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம், போராட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஒரு சில நாள் முன்பு சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மதுக்கடைக்கு எதிராக நடத்திய போராட்டம் வன்முறையில் முடிந்தது. மாணவ, மாணவிகள் போலீசாரால் சரமாரியாக தாக்கப்பட்டு ரத்த காயம் அடைந்தனர். மாணவிகளை பூட்ஸ் கால்களால் போலீஸ் அதிகாரிகளே மிதித்தனர். மயக்கமடைந்த பெண்ணையும், அவர் சுயநினைவில்லாத நிலையில் தரதரவென இழுத்து சென்ற காட்சி பார்ப்பவர்களின் மனதை உலுக்கியது. போலீசார் நடத்திய இந்த வன்முறை வெறியாட்டத்திற்கு பின்னர் 10 மாணவர்கள், 5 மாணவிகள் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இதே போல் பல இடங்களிலும் மாணவர்கள் போலீசாரால் சரமாரியாக தாக்கப்பட்டுள்ளனர் ,

போராட்ட களத்தில் இறங்கி போராடும் அப்பாவி மாணவர்கள் பலர் ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தான். இவர்கள் படித்து முடித்தபின் வேலைக்கு சென்று தான் தன் குடும்பங்களை காப்பற்றவேண்டும் என்ற கட்டத்தில் தான் பலர் உள்ளனர், இப்படி படிக்கும் காலத்தில் அவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டால் அவர்களின் கல்வி, வேலைவாய்ப்பு மட்டுமின்றி ஒட்டுமொத்த எதிர்காலமும் கேள்விக்குறியாகிவிடும்.
நம் அரசியல் தலைவர்கள் இவ்வகையான போராட்டங்களை ஊக்குவிப்பதை தவிர்த்து, இப்பிரச்சனையை அரசுடன் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும் என்பதே பலரின் எண்ணமாக உள்ளது, அகிம்சை வழியில் போராடி நமது நாட்டிற்கு சுதந்திரம் பெற்று தந்த காந்தியின் வழியில் பயணிப்போம்..

அப்சர் சையத்

நாள் : 13-Aug-15, 5:58 pm

மேலே