அரிசி ஏற்றுமதியில் இந்தியா சாதனை புதுடில்லி: நடப்பு நிதியாண்டில்,...
அரிசி ஏற்றுமதியில் இந்தியா சாதனை
புதுடில்லி: நடப்பு நிதியாண்டில், அரிசி ஏற்றுமதியில் இந்தியா புதிய சாதனை படைக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. ஈரான், சவுதி அரேபியா ஆகிய நாடுகள், இந்திய பாசுமதி அரிசியை அதிக அளவில் இறக்குமதி செய்து வருவதால், நாட்டின் ஒட்டுமொத்த அரிசி ஏற்றுமதி, 7.8 சதவீதம் உயர்ந்து, 1.10 கோடி டன்னாக அதிகரிக்கும். இதில், பாசுமதி அரிசியின் பங்களிப்பு, 14 சதவீதம் உயர்ந்து, 40 லட்சம் டன்னாகவும், சாதாரண அரிசி ஏற்றுமதி, 4 சதவீதம் உயர்ந்து, 70 லட்சம் டன்னாகவும் அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இதர நாடுகளை விட, இந்திய அரிசியின் தரம் நன்கு உள்ளதால், சர்வதேச சந்தையில், அதற்கான தேவை அதிகரித்து வருகிறது.
தாய்லாந்து அரசு, அதனிடம் அபரிமிதமாக உள்ள தரம் குறைந்த அரிசியை, மிகக் குறைந்த விலைக்கு ஏற்றுமதி செய்கிறது. இது, இந்தியாவிற்கு கடும் போட்டியை ஏற்படுத்தியுள்ளது. இருந்த போதிலும், இந்திய அரிசி வகைகளின் தரம் காரணமாக, அவற்றை உலக நாடுகள் அதிக அளவில் இறக்குமதி செய்து வருகின்றன. நடப்பு நிதியாண்டு, ஏப்., டிச., வரையிலான காலத்தில், இந்தியாவில் இருந்து, 12.80 லட்சம் டன் பாசுமதி அரிசியை, ஈரான் இறக்குமதி செய்துள்ளது. இது, சென்ற நிதியாண்டின் இதே காலத்தில், 10.70 லட்சம் டன்னாக இருந்தது.