எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

18.10.2015-சென்னை கவிக்கோ அரங்கு-நூல் வெளியீட்டு விழாவில் பேசியதிலிருந்து ..!...

18.10.2015-சென்னை கவிக்கோ அரங்கு-நூல் வெளியீட்டு விழாவில் பேசியதிலிருந்து ..!
-------------------------------------------------

நம் காலத்தின் மகாகவி அய்யா தமிழன்பன் அவர்கள் எழுதிய திசை கடக்கும் சிறகுகள் கவிதைத் தொகுப்பின் வெளியீட்டு விழாவோடு, பல்வேறு நாடுகளில் வசித்துவந்தாலும்,தமிழை தமது வேராகக் கொண்டு,எழுத்து.காம் இணையதளத்தின் மூலமாக, படைப்புகளை அளித்துவருகின்ற நூற்றுக்கும் மேற்பட்ட கவிஞர்களுடைய கவிதைகள், தோழர் அகன் அவர்களை தொகுப்பாசிரியராகக் கொண்டு தொலைந்து போன வானவில் எனும் தலைப்பிலும்,தோழர்கள் கவிஜி மற்றும் தாகு ஆகியோர் தொகுத்துள்ள மழையும்,மழலையும் தொகுப்பு, தோழர் கோணீஸ்வரி பட்குணரஞ்சன் எழுதிய கனவோடு புதைந்தவர்கள் என்ற தொகுப்புமாக மூன்று நூல்கள் இங்கே வெளியிடப்படுவது,உங்களில் ஒருவனாக எனக்கு மிக மிக மகிழ்ச்சியளிப்பதாக இருக்கிறது.

தமிழ்த்தாத்தா உ.வே.சா.விற்குப் பிறகு,அவருடைய பணியை சிரமேற் கொண்டு சீவக சிந்தாமணி உள்ளிட்ட பல்வேறு பழந்தமிழ் நூல்களை பதிப்பித்தவரும்,தகுந்த இலக்கியச் சான்றுகளுடன் தமிழில் சொற்களஞ்சியம் உருவாக்கியவரும்,தமிழ் இலக்கியங்களின் காலங்கள் குறித்து ஆய்வு நூல்கள் வெளியிட்டவருமான தமிழறிஞர் வையாபுரிப் பிள்ளையைப் போலவே,விளங்கிவரும் நமது தோழர் அமிர்தகணேசன் எனும் அகன் அவர்களுக்கு எழுத்து.காம் இணையதளப் படைப்பாளிகளின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

காரணம்,கடந்த இரண்டு ஆண்டுகளில்,தோழர் அகன் அவர்களின் முன்முயற்சியால்,யுத்தத்தின் சுவடாய் நான் மட்டும் போதும்,மற்றும் அலகுகளால் செதுக்கிய கூடு ஆகிய இரண்டு நூல்களும் பன்னாட்டுப் படைப்பாளிகளின் கவிதைத் தொகுப்பாக மலர்ந்தது.மேலும் முழுக்க முழுக்க பெண்கவிஞர்களே எழுதிய கவிதைகளாக எனக்கென்று ஒரு முகமில்லை என்ற கவிதைத் தொகுப்பும்,செங்காத்து வீசும் காடு என்ற சிறுகதைத் தொகுப்பும்,ஆதலினால் காதலித்தேன் எனும் ஒரு நாவலும்;,அய்யா தமிழன்பன் அவர்களின் கடந்த பிறந்த நாளை முன்னிட்டு வெளியிடப்பட்ட தமிழென்பது தமிழன்பன்,மற்றும் பேரத்தமிழ் இலக்கியமான தொட்டில் சூரியன் உட்பட பலநூல்கள் வெளியிடப்பட்டன.

அதேபோல் இந்த ஆண்டும் தொலைந்துபோன வானவில்,மழையும் மழலையும்,கனவோடு புதைந்தவர்கள் என மூன்று நூல்கள் வெளியிடப்படுகிறது.இதில் உள்ள எழுத்துக்கள் வழக்கம்போல குமரி முதல் இமயம் வரை மட்டுமின்றி பல்வேறு அயல்நாடுகளிலும் உள்ள படைப்பாளிகளின் கவிதைகளாகவே மலர்ந்திருக்கிறது.இதன் மூலம் கவிதை இலக்கியத்தில் நூறு,நூறு பூக்களாக,தேடித் தேடிக் கண்டடைந்த கவிஞர்கள்,படைப்பாளிகள் அடையாளப் படுத்தப்பட்டிருக்கின்றனர்.

நம் மொழியின் மாண்புகளையும்,மக்களின் யதார்த்த வாழ்வையும் வெளிப்படுத்தும் விதமாக எழுதிக்குவிக்கும் இந்தப் படைப்பாளிகள்,விருதளிக்கப்பட்டு கௌரவிக்கப் பட்டுள்ளனர். இதனால் இம்மானுடத்தின் வழக்கறிஞர்களாக தங்கள் பாதையை மென்மேலும் செம்மைப்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பு அனைவருக்கும் கூடிவந்துள்ளது. தமிழ்சார்ந்த சமூகமாக வாழ்ந்து கொண்டிருக்கும் நீங்கள்,இந்த சமூகத்திற்கான தமிழை எழுதி,எழுதி அய்யா தமிழன்பன் அவர்களைப் போல சர்வதேச உச்சம் தொடவேண்டும்.

உங்கள் கைவண்ணத்தில் மலர்ந்த “தொலைந்து போன வானவில்” எனும் தொகுப்பு, தொண்டால் உலகளந்த தோழர்.நல்லக்கண்ணுவிற்கும்,மார்க்சீய இலக்கிய ஆய்வாளர் தோழர்.கோவை ஞானி அவர்களுக்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளதன் மூலம்,நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளீர்கள்.

இத்தொகுப்பில்,தென்றலாய்த் தீண்டுகிற,நெருப்பாய் தகிக்கிற,நதியாய் ஓடுகிற கவிதைகளும்,அரசியல் அனர்த்தங்களை பகடி செய்பவையாகவும்,சாதி மதச் சமூகக் கேடுகளுக்கு சாட்டையடி கொடுப்பதாகவும்,சுற்றுச்சூழல் குறித்த அக்கறை கொண்டதாகவும்;..என ஒவ்வொரு கவிதையும் தனிச்சிறப்பு மிக்கதாயிருக்கிறது.

அதேபோல் மழையும்,மழலையும் கவிதைத் தொகுப்பில்,மழையின் இயல்பையும்,விளைவையும் வெவ்வேறு தளத்தில் நின்று பேசுவது மழையில் இத்தனை நிறங்களா..? என்று ஆச்சரியப்பட வைக்கிறது.அதேபோல் மழலைகள் குறித்தான கவிதைகளில்
-மதியஉணவு இடைவேளையில்-தான் கொண்டுவந்த தக்காளி சாதமும்-பாத்திமா கொண்டுவந்த பால்பாயாசமும்,மேரி கொண்டுவந்த மோர்க் குழம்பையும்-கள்ளங்கபடமற்று பகிர்ந்துண்ணும் பள்ளிக் குழந்தைகளையும், விரல் வழியே சிந்துகின்ற சோற்றுப் பருக்கைகளை எறும்புகளுக்காக இட்டதாய்ச் சொல்லிச் சிரிக்கும் மழலைகளையும் போல,இன்னும் ஆயிரமாயிரம் விதமாய் மனிதர்க்கு பாடம் சொல்லுகின்ற மழலைகள் தொகுப்பெங்கும் நம்மோடு சினேகமாய்ப் புன்னகைக்கிறார்கள்.

கோணீஸ்வரி பட்குணரஞ்சனின் கனவோடு புதைந்தவர்கள் தொகுப்பிலுள்ள கவிதைகள்,திருட்டுப்போன உரிமைத்தீவுகளை,தீராத ஆவேசப்புயலைக் கொண்டு உருட்டி,மீட்கும் வேட்கையோடும்,உள்ளிருக்கும் ஆன்மாவை துயில் எழுப்புகிற தூறல் தரும் அதிர்வுகளின் நாதமாகவும் வெளிப்பட்டிருப்பது மிகச்சிறப்பு. இத்தொகுப்புகளில் இடம் பெற்ற கவிஞர்களுக்கும்,தொகுத்து வழங்கிய ஆசிரியர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

தோழர்களே.. தமிழ் இலக்கிய வரலாறு மட்டுமல்ல,இந்திய இலக்கிய வரலாற்றின் மிக முக்கியமான ஒரு காலகட்டத்தில், சொல்லப்போனால் படைப்பாளர்களுக்கு மிக நெருக்கடியான காலகட்டத்தில் இந்த விழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சாமானிய மக்களின் எண்ணங்களை,குமுறல்களை, துன்பங்களை, நெருக்கடிகளை.. அவர்களின் பிரதிநிதிகளாக நின்று,தம் படைப்புகளின் வழியாகப் பேசுகின்ற எழுத்தாளர்கள், படைப்பாளர்கள் வேறு எந்தவிதமான அவசர நிலைக்காலத்தையும் விட,தற்போதுதான் விரட்டப்படுவதும், மிரட்டப்படுவதுமாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

படைப்புகளைப் பொறுத்துக் கொள்ள முடியாத,படைப்புகளில் சாதிமத வர்ணங்களைக் கடந்து, வெளிப்படும் மானுட நேசத்தை சகித்துக் கொள்ள முடியாத மனுவின் வாரிசுகளான,கார்ப்பரேட் சாம்ராஜ்ஜியத்தின் பிரதிநிதிகள்,எழுத்தாளர்களின் வாதங்களுக்கு பதில் சொல்ல முடியாத அவலநிலையில்,படைப்பாளர்களுக்கு எதிராக துப்பாக்கியைத் தூக்கி வருகின்றனர்.

பகுத்தறிவின் கிரகமாக இந்தப் புவியே மாறிக் கொண்டிருக்கிற வேளையில்தான் பகுத்தறிவையும்,பொதுவுடமையையும் தமது எழுத்துக்களில் பறைசாற்றிக் கொண்டிருந்த நரேந்திர தபோல்கரும்,கோவிந்த் பன்சாரேவும்,கல்புர்கியும் திட்டமிட்டுக் கொலை செய்யப்படுகின்றனர்.

இந்திய இலக்கிய உலகமே திரண்டு நின்று,இந்தப் போக்கிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தாங்கள் பெற்ற சாகித்ய அகாதமி விருதுகள் உட்பட பல்வேறு பத்ம விருதுகளையும் திருப்பி அளிக்கும் அடையாளப் போராட்டங்களை நடத்திவருவதோடு,தங்கள் கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.

எழுத்தாளர்கள் கொல்லப்படுகின்ற,கருத்துரிமை மீது தாக்குதல் தொடுக்கப்படுகின்ற அவலநிலை குறித்து,வெளியுலகம் அறிந்து கொள்வதற்கான ஒரு கவனஈர்ப்பாகவும்,இலக்கிய சமூகத்தின் தார்மீகக் கோபத்தை வெளிப்படுத்துவதற்காகவும் இந்த விருதுகள் திருப்பி அளிக்கப்படுகின்றனவே அல்லாது,யாரையும் எதிர்த்து அரசியல் செய்யவேண்டும் என்பதற்காக அல்ல.

ஒரு தேசத்தின் கௌரவமாகப் பார்க்கப்பட வேண்டிய இலக்கியங்களைப் படைப்பவர்கள்,தங்கள் விருதுகளை திருப்பியளிப்பதையும்,கண்டணம் செய்வதையும் இந்த தேசத்தின் அவமானமாக உணரத் தலைப்படாதவர்கள், நீ எழுதுவதை நிறுத்திக் கொள்..என்று, கூச்சலிடுகின்றனர்.

ஒடுக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாய் எழுதாதே,சிறுபான்மைக்கு ஆதரவாய் எழுதாதே, பெண்ணியத்திற்க்கு ஆதரவாய் எழுதாதே..சாதியை எதிர்த்து எழுதாதே,மதத்தை எதிர்த்து எழுதாதே.., எழுதாதே..எழுதாதே..எழுதாதே..! உண்ணும் உணவு முதல்,உடுக்கும் உடை வரை வரையறைகளை விதிப்பதற்கும், ஒற்றைக் கலாச்சார விலங்கில் நம்மைப் பிணைப்பதற்கும் நாம் யாருக்கும் அதிகாரத்தைக் கொடுக்கவில்லை..என்பதை கருத்துரிமைகள் மீது கட்டாரியைப் பாய்ச்சுகிறவர்களுக்கு நாம் உணர்த்த வேண்டும்.

பகுத்தறிவின் துணைகொண்டு,ஏற்றத் தாழ்வற்ற மனிதகுல விடுதலைக்கான பொதுவுடமையை அடையும்வரை,இந்தியாவின் பன்முகத்தன்மையை காப்பாற்றவேண்டிய பொறுப்பும் அக்கறையும்,படைப்பாளர்களாகிய நமக்குண்டு.

புத்தகங்களின் பெருமையோ,படைப்பாளர்களின் அருமையோ பாசிசத்திற்குத் தெரியாது என்ற நிலையில்,இந்தியநாட்டின் அடிப்படை மாண்புகளான ஜனநாயகம்,மதச்சார்பின்மை,கருத்துச் சுதந்திரம் ஆகியவற்றைப் பாதுகாத்திடும் வகையிலும்,எழுதாதே என்று குரல் எழுப்புபவர்களுக்கு எதிராகவும்,எழுதி,எழுதிக் குவிக்கும் படைப்பாளர்களாக இங்கு நாம் ஒன்றுகூடியிருப்பதை நினைத்து நான் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன்.

எனவே தோழர்களே.., உங்களுக்கான சுதந்திரப் பாதைகளின் வழியே,நீங்கள் அடையவேண்டிய இலக்கை நோக்கி செல்லும் விரைவான பயணம் எந்நாளும் வெற்றி பெற எனது வாழத்துக்களைத் தெரிவித்துக் கொள்வதோடு,இப்படியொரு அருமையான இலக்கிய சந்திப்பு நடைபெறக் காரணமான மகாகவி அய்யா தமிழன்பன் அவர்களுக்கும்,தோழர் அகன் அவர்களுக்கும், எழுத்து.காம் இணையதளத்தைச் சேர்ந்த தோழர்.ராஜேஷ்குமார் அவர்களுக்கும் எனது நன்றி.!

----------------பொள்ளாச்சி அபி-----------

18.10.2015-சென்னை கவிக்கோ அரங்கு-நூல் வெளியீட்டு விழா.

நாள் : 22-Oct-15, 8:37 am

மேலே