பொதுநலத்தார் பொங்கல் பொதுநலம் பேணுவோரெலாம் பொங்குக இவ்வண்ணம்: புன்செயல்...
பொதுநலத்தார் பொங்கல்
பொதுநலம் பேணுவோரெலாம் பொங்குக இவ்வண்ணம்:
புன்செயல் புரியும் புல்லரைப் புரட்டிடவே பொங்குக
வன்செயல் விளைக்கும் வம்பரை வறுத்திடவே பொங்குக
திருடித் தின்னும் தீயரைத் தீய்த்திடவே பொங்குக
வருடி வாழும் வீணரைத்தான் வாட்டிடவே பொங்குக
பொய்யே புனையும் புளுகரைப் போக்கிடவே பொங்குக
மக்களை ஏய்க்கும் மாயங்கள் மாய்த்திடவே பொங்குக
அரசியல் பிழைக்கும் எத்தரைஎற்றிடிடவே பொங்குக
கல்வி கரக்கும் சிறார்தொழில் சிதைத்திடவே பொங்குக
அம்பலத்தில் உலாவும் ஆபாசம் அழித்திடவே பொங்குக வல்லுறவு துணியும் வல்லூறு வதைத்திடவே பொங்குக
வெற்று விவாத விஷமங்கள் வீழ்த்திடவே பொங்குக
தமிழ் தாழ்த்தி அயல்மொழி தாங்கல் தகர்த்திடவே பொங்குக
பொதுநலத்தார் பொங்கிடின் அவ்வண்ணம்,பொங்கலும் பொங்கிடும் இவ்வண்ணமே :
நேயம் நீண்டிட, நீதிநிலைத்திடப் பொங்கிடுமே பொங்கல்
பெண்மை சிறந்திட, பெருநெறி ஒழுகிடப் பொங்கிடுமே பொங்கல்
பயிர்கள் செழித்திட, பல்லுயிர் காத்திடப் பொங்கிடுமே பொங்கல்
தொழில்கள் செறிந்திட, உழைப்பு உயர்ந்திடப் பொங்கிடுமே பொங்கல்
இளையோர் ஆக்கம் நல்வழிப்படப் பொங்கட்டும் பொங்கல்
முதியோர் ஏக்கம் முற்றும் தீர்ந்திடப் பொங்கட்டும் பொங்கல்
பன்முகமாய்த் தமிழ் பொலிந்திடவே பொங்கட்டும் பொங்கல்
புதுமைகள் புலர மேன்மைகள் மேவிட பொங்கட்டும் பொங்கல்