எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கிராமியத்தின் தலை நகர பயணம் திரைப்பட பாடலாசிரியர் திரு...

கிராமியத்தின் தலை நகர பயணம்

திரைப்பட பாடலாசிரியர் திரு பிரியன் மற்றும் திரு அண்ணாமலை ஆகியோருடன்  சென்னை புத்தக கண்காட்சியில்  எனது படைப்பும் வெளியான "கவியாட்படை" நூல் வெளியீட்டு விழாவில். 

  
கிராமிய மூலையிலிருந்து முதன் முதலாக தலை நகரம் நோக்கிய பயணம் என் வாழ்வில் இன்னுமொரு உயரம். சென்னை புத்தக கண்காட்சியில் கீதம் பதிப்பகம் சார்பில் வெளியான ”கவியாட்படை” எனும் நூலில்  “எல்லாமே கவிதை” எனும் என் படைப்பும் இடம்பெற்றிருந்தது. பதிப்பக ஒருங்கிணைப்பாளர்   என்னை குடும்பத்தோடு விழாவில் கலந்துகொள்ளுங்கள் என்று மின்னஞ்சலில் அழைப்பு விடுத்திருக்க, பல பொருளாதார இடையூறுகளுக்கிடையில் கிராமம் விட்டு தலை நகரை நோக்கி முதன்முதலாக தொடர்வண்டி பயணம்.அற்புதமான அனுபவம். 


04.06.2016 அன்று தீவுத்திடலில் 3.00 மணிக்கு துவங்க வேண்டிய விழா சற்று தாமதானாலும் ஒவ்வொருவரின் கவிதைகளை அறிமுகப்படுத்திப் பேசியபோது என் படைப்பின் இருவரிகளை சிறந்ததாக எடுத்துக்கொண்டு அதைப்பற்றிச் சொன்னபோது வானில் பறந்தேன். 

”எல்லாமே கவிதை” எனும் தலைப்பில் இருந்த அந்த வரிகள் இதோ 

தனித்திருக்கும் வயலோர வேப்பமர அழகு கவிதை 
அதில் துணைபிரிந்த வேதனையில் கத்துங்குயிலோசையும் கவிதை 

சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட திரைப்பட பாடலாசிரியர்கள் திரு பிரியன் மற்றும் திரு அண்ணாமலை ஆகியோரின் கைகளால் என் படைப்புடன் கூடிய அந்த நூலை வாங்கும்போது வானில் பறப்பதுபோன்ற உணர்வை அடைந்தேன். 

அவர்களோடு புகைப்படம் எடுத்துக்கொண்ட பின் நடந்த சிறு சந்திப்பில் என் படைப்பை காட்டியபோது ”கிராமியக் கவிஞர் என்றால் நீங்கள்தான் நன்றாக எழுதியிருக்கிறீர்கள்” என்று சொன்னபோது வானைத்தாண்டிய உற்சாகம். அந்த நூலில் இருவருமே கையெழுத்திட்டு தந்தனர். மேலும் பாடலாசிரியர் திரு அண்ணாமலை அவர்கள் தன் செல்பேசி எண்ணையும் தந்து தொடர்பு கொள்ளச் சொன்னபோது நான் கவிஞனாகி விட்டேனா .. அதற்கு தகுதியானவன் தானா என நினைக்க நினைக்க மனதுக்குள் எத்தனையோ எண்ணங்கள்..!. 

ஒருவேளை எனக்கும், திரைப்படத்துறைக்கும் ஏதோ ஒரு தொடர்பு ஏற்படுமோ என்று கூட எண்ணத்தோன்றியது. உண்மையில் ஏதோ ஒரு ஒன்றை சாதித்தது போன்ற மகிழ்ச்சி எனக்குள் பொங்கியது. சாதாரணமாக எழுதும் கவிதைக்கும், திரைப்படப்பாடல்களுக்கும் மாறுபட்ட வித்யாசம் இருப்பதை இரு பாடலாசிரியர்களும் சொன்னார்கள். அதுவும் திரைப்பட பாடல்கள் எழுத அவர்கள் எடுத்துக்கொண்ட பயிற்சிகள் பற்றியும், இவர்களின் இலாப நோக்கமற்ற எழுத்துப்பட்டறையில் கலந்துகொள்ளச் சொன்னபோதும் நான் சென்னையில் பிறக்கவில்லையே என்று மனதுக்குள் சிறுவேதனை அடைந்தேன். 

திரைப்படத்துறை என்பது சாதாரணம் என்பதில்லை முயற்சி இருந்தாலும் கொஞ்சம் அதிர்ஷ்டமும் வேண்டும் என்று சொன்னார்கள். எழுதும் கவிதைகள், திரைப் படப்பாடலுக்கு வார்த்தைகளை கையாள ஒத்துழைக்கும். ஆனால் அதற்கும் இதற்கும் பல வேறுபாடுகள் என்றும் சொன்னார். எப்படி எழுத வேண்டும் என்று சொன்னபோது எனக்கும் ஆர்வம் பிறந்தது. அந்த விழா முடிந்தபின்னரும் நகர மனமில்லாமல் மெரினா கடற்கரை வழியாக மீண்டும் திரும்பியபோது ஒரு நாள் நீங்களும் பாடலாசிரியர் ஆவீர்கள் என்று அந்த கடற்கரை கடலைகள் ஒலிப்பது போன்று இருந்தது. ஆனால் அது எவ்வளவு கடினம் என்பதும் எனக்கு தெரியும். இருந்தாலும் முயற்சியை துவங்கப்போகிறேன். 

வீடு திரும்பும்போது தொடர்வண்டியிலேயே பாடலாசிரியர்கள் சொன்னபடி திரைப்படப்பாடல் பாணியில் பல்லவியை எழுதிவிட்டேன். அந்த பாடலின் பல்லவி இதோ 

ஆண்ட்ராய்ட் பெண்ணே... அழகிய தீவே 
ஆப்பிள் செல்போன் ரிங்டோன் நீயே 
ஆங்ரி பேர்டின் கோபம் ஏனோ 
அணைத்தால் வருமோ கிறக்கம் தானோ..? 

முழு பாடலையும் முடித்துவிட்டு அதை அவருக்கு அனுப்ப எண்ணியுள்ளேன். மேலும் அமெரிக்க மின்சஞ்சிகையில் ஒரு ஒப்பந்தம் மூலம் குழந்தைகள் பாடலை எழுத எனக்கு சந்தர்ப்பமும் வாய்த்திருக்கிறது. என் தமிழ் பாடல்கள் பிரெஞ்ச், செர்மானியம், ஆங்கிலம், இலத்தீன் என எல்லா மொழி பேசும் குழந்தைகளிடமும் தவழ்வதை நினைத்தால் சந்தோசமாக இருக்கிறது.மேலும் எல்லா மொழி குழந்தைகளிடமும் தமிழ் தவழவேண்டும் என்பது என் ஆசை.


நாள் : 9-Jun-16, 10:38 am

மேலே