பார்த்த ஞாபகம் இல்லையோ மனதை ஈர்க்கும் இசை, கவிஞரின்...
பார்த்த ஞாபகம் இல்லையோ
மனதை ஈர்க்கும் இசை, கவிஞரின் சொல் விளையாட்டு, காட்சியமைப்பின் கவர்ச்சி, நடிகர்களின் ஒய்யாரம்... அழகு அழகு அழகு. ....
ஆயிரம் முறைகளுக்கு மேல் பார்த்திருப்பேன் . நீங்கள் இதை படிக்கும் இந்த நிமிடத்திற்குள் பார்த்த எண்ணிக்கை இன்னும் அதிகரித்திருக்கும்.
அப்படி பிடிக்கும்.
கிளப் ஒன்றில் சிவாஜி செழுமையான தோற்றத்துடன் கோட் சூட்டில் அமர்ந்து இருப்பார். முதலில் அவரது பக்கவாட்டு தோற்றத்துடன் நெருக்கமாக தெரிவார். வாயில் நீண்ட சிகரெட் (அந்த காலத்தில் வசதி படைத்தவர்கள் உபயோகிக்கும் சுருட்டு ?! ) லைட்டரை எடுத்து பற்ற வைக்கிறார் இசை ஒலிக்க ஆரம்பிக்கிறது. மெல்லிய வெளிச்சத்தில் அவர் வாயிலிருந்து ஊதப்பட்ட புகை ஏவுகணை சென்ற வான்வழி போல் புகை பாதை போடுகிறது பரவுகிறது. மிடுக்குடன் அமர்ந்து பார்க்கிறார் .அப்புகையும் மிடுக்குடனே பரவும் தோற்றத்தை அளிக்கிறது சிவாஜி கணேசனின் மிடுக்கு.
இசை டடட்டட்டட. ..டடட்டட்டட ஆறே பேர் கொண்ட குழு அனைவரும் பெண்கள் (ஃபுளோர் டச் அனார்கலி சுடிதார் போன்று ) பாதம் தொடும் நீண்ட கவுன் அணிந்து அசைகின்றனர் இசைக்கேற்ப நளினமாக மென்மையாக (ஒரு பீட்டுககு பத்து ஸ்டெப்பும் அதனை முடிக்க வேண்டும் என்ற பதட்டமும் இல்லாமல் எலும்பு முறிவுக்கான முயற்சி இல்லாமல் ) அறுவரும் நிறைக்கின்றனர் .
மேடையில் செளகார் ஜானகி நமது அம்மா அக்கா தங்கை தோழி அணிவதைப் போன்றே பிளவுஸ் அணிந்திருப்பார் புடவை உடுத்தியிருப்பார். என்ன ஒன்று வித்தியாசமாகச் சுற்றி நவீனமாக உடல் முழுவதும் மறைக்கும் கருமை நிற உடையில் கையில் மைக்குடன் மேடைக்கு வருகிறார். முன் தலையில் சிறிய கிரீடம் அவர் சிரிப்புடன் பளீரிடுகிறது.
ஒய்யாரமாக சிரிப்புடன் நின்ற நிலையில் மெலிதாக உடல் முழுவதும் முன் பின் அசைக்கிறார் பாடிக்கொண்டே. ..சிறு சிறு அசைவுகள் ஒய்யாரம் புன்னகை தெளிந்த நீரோட்டமான இசை நம்மை உள் இழுத்துச் செல்லத் தொடங்கி விடுகிறது.
தலைவரோ (சிவாஜி ) ஆழ்ந்து இழுத்து புகையை இரசித்து விடுகிறார். அது பழையபடி ஏவுகணை வழித்தடமாக மாறுகிறது. பல்வேறு இசைக்கருவிகள் இசைக்கலைஞர்கள் மேடையில் இருந்து இன்பமாக்க. ..
நீலநதிக்கரையோரம் பற்றி நாயகி பாடுகிறார் அசைவுகளோடு குழு அழகாய் திட்டமிட்ட நடன அசைவுகளை கொடுக்கிறது ரம்மியமான மேடை.
பாடிக்கொண்டே உடலைச் சற்று பின் சாய்த்து முன் விரைந்து செல்கிறார் நாயகி . சென்று மேடையின் மறுபுறம் இருந்து வருகிறார்.
பழகி வந்த சில காலம் மறக்கையில்... தலைவர் மதுக்கோப்பையை நாகரிகமாக உதட்டிற்கு கொடுக்கிறார். உதடும் பாத்திரமேற்கிறது வெளிச்சிந்துகிறது இரசனையை . பார்வை மாறுகிறது ஈர்க்கப்பட்டு வாய் திறந்து இரசிக்கிறார் சிரிக்கிறார் சுட்டுவிரல் வாயில் வைத்து கடிக்கிறார் கவர்கிறார் பெரிய மோதிரம் ஒளி வீசுகிறது அதைவிட அவர். .....
மறந்ததோ நெஞ்சம் என்று நாயகி மேடையின் ஒரு புறம் சென்று மறுபுறம் வருவதற்குள் தலைவர் தடுமாறுகிறார் தேடுகிறது பார்வை வாயில் சிகரெட்டுடன். ..இசைக்கருவிகள் பொழுதை இனிமையாக்க குழு அழகூட்டுகிறது அருமையாக.
நாயகி இரவையும் நிலவையும் கேட்கச் சொல்கையில் குழுப்பெண்கள் அறுவரும் இருவர் இருவராக மூன்று பிரிவாக பிரிந்து இசைக்கேற்ப ஆடுகின்றனர். ஹய்ய்யோ தலைவர் வெட்கச்சிரிப்பொன்றை வீசிக்கொல்கிறார் அட்டகாசம் ! சிகரெட் புகையுடன் பரவுகிறது சிரிப்பும். ...
குழுவினர் இணைந்து அசைந்து மகிழ்விக்கின்றனர் நேர் கோடாக மலராக என்று. ...
நிலவு சந்திப்பு குறித்து பாடுகையில் கொஞ்சலும் சிரிப்புமான முகபாவத்தை அளித்து நடனம் பார்த்த நிறைவை அளிக்கிறார் செளகார்ஆடாமலே. ..
தலைவர் நாயகியை பார்வையாலும் மதுவை வாயாலும் பருகிக் கொண்டிருக்கிறார் . இசை கொஞ்சம் உச்சஸ்தாயியில் ஒலிக்க குழுவினர் வட்டமாக நின்று கைகோர்த்து விரைந்து சுற்ற செளகார் இரு கைகளையும் இரு புறமும் நீட்டி சற்றே குனிந்து சபை மரியாதை அளித்து முடிக்கிறார்.
அதற்குள் பாட்டு முடிஞ்சிடுச்சா என்ற ஏக்கத்தை ஒவ்வாரு முறையும் அளிக்க வல்ல பாட்டு இது.
அகராதி