சாதனைப்பெண் ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, ,,,,,,,,,,,, அன்றொரு நாள் மதியின் அழகை...
சாதனைப்பெண்
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
அன்றொரு நாள்
மதியின் அழகை
மறைக்கப் பகலவன்
காத்திருக்கும் கணம்
விடிவெள்ளி ஒன்று
பெண் வடிவில் உதித்தது
பசுமை நிறக் காடுகள்
பூத்துக்குலுங்கும் சோலைகள்
பஞ்ச வர்ணக்கிளியான அவள்
வளர்ந்த அந்த இடம்
கரையான் அரித்துக்கொண்டு
இருக்கும் தென்னங்கீற்றால்
செய்த ஓலைக்குடிசைதான்
அவள் இல்லம்
ஒருவாய் உணவிற்கு
ஓயாது உழைக்கும்
பெற்றோர்களின் வேதனை
பார்த்து வளர்ந்தவள்
கல்வியில்லாதோர்
கண்ணற்றோர் என்ற
வள்ளுவரின் வாக்குவையே
வாழ்க்கைக்கு துணையாக
எடுத்துக் கொண்டவள்
படிப்பதற்காக இறக்கும்
அளவுக்குத் துணிந்தவள்
பஞ்சாலைப் பணிக்கு
சென்று விடக்கூடாது
பெற்றோரைப் போல்
தீயாக வெந்து விடக்கூடாது
என்ற வைராக்கியம் கொண்டு
படிக்க ஆரம்பித்தவள்
கனவுகளும் ஆசைகளும்
அதிகம் தான் அவளுக்கு
கடுகளவும் சிந்தனை
சிதறவிடாமல் படித்தவள்
அவள் வாழ்விலும்
ஒரு மாற்றம்
காதல் என்ற பெயரில்
இலட்சியக் கனவுகள்
சிதைந்தது
அன்பு என்ற ஒற்றை
வார்த்தைக்கு அடிமையாகி
ஆயுள் முழுவதும் வாழ
வேண்டிய வாழ்வை
தொலைத்து விட்டாள்
கண்ணீரில் வாழ்கிறாள்
கவலையில் கணக்கிறாள்
தனிமையில் தன்னையும்
சில நொடிப்பொழுது
வெறுக்கிறாள்
வலிகள் கரைக்க
வரிகள் வடிக்கிறாள்
வாழ்வில் ஒரு அழியாத
இலட்சியப் பாதையை
தொடர்கிறாள்
வெற்றிகள் பெறவே
வேதனைகள் எல்லாம்
ஒதுக்கி வைக்கிறாள்
வேம்பாக இருக்கும்
வாழ்வை தேனாக
சுவைக்கிறாள்
உறவின் அவமானங்களை
சேகரிக்கிறாள்
உள்ளத்தில் ஒவ்வொரு
புத்தகமாய் அதையே
அடுக்குகிறாள்
அயராது உழைக்கிறாள்
தூக்கத்தை மறந்து
சாதிக்கவே துடிக்கிறாள்
இலட்சிய கனவுகள்
எல்லாம் நிஜாமாகிறது
விருதுகள் அவளைச்
சுற்றி வலம் வருகிறது
சாதிக்கப் பிறந்த
சாதனைப் பெண்ணின்
சோதனைகள் எல்லாம்
சாதனையாய் இன்று....