எழுத்தாளர்கள் வாழும் காலத்திலேயே கொண்டாடப்பட வேண்டும் . இன்று...
எழுத்தாளர்கள் வாழும் காலத்திலேயே கொண்டாடப்பட வேண்டும்
.
இன்று எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்களின் பிறந்த நாள்.
.
ஒரு இனத்தின் பண்பாட்டுச் செழுமையைக் காப்பாற்றியும் வளர்த்தும் செழிப்படையச் செய்பவர்கள் எழுத்தாளர்கள்....
.
மூலம்: கீற்று
எழுத்தாளர்களைக் கொண்டாடுவது என்பது பண்பாட்டைப் போற்றுவதாகும். தமிழுக்குப் பெரும்பங்களிப்பு செய்த பிரஞ்சனுக்கு மரியாதைகள் செய்வது, அவரது படைப்புகளைப் பல்லாயிரம் பேரிடம் கொண்டு சேர்ப்பது, அவரது வாழ்வை ஆவணப்படுத்துவது தமிழ் சமூகம் தானே முன்வந்து செய்ய வேண்டிய கடமையாகும்.
திரு.பிரபஞ்சன் அவர்கள், தமிழ் மொழியில், மானுடம் மேலோங்கிய பேரன்பு கமழும் சுமார் 200 சிறுகதைகளைக் கடந்து இப்போதும் எழுதிக்கொண்டிருப்பவர். வரலாறு சார்ந்த படைப்பு எப்படி இருக்க வேண்டும் என்கிற புதிய கதவைத் திறந்து வைத்தவை அவருடைய மானுடம் வெல்லும், வானம் வசப்படும் ஆகிய நாவல்கள். ஆண் பெண் உறவை, அதன் மேன்மையையும் சிக்கலையும் இருபதுக்கும் மேலான நாவல்களில் எழுதியவர். அரசியல், கலை, பண்பாட்டுத் துறை சார்ந்த 300-க்கும் மேலான கட்டுரைகள் மற்றும் இரண்டு நாடகங்களும் அவர் படைப்பின் அகலத்தையும் ஆழத்தையும் உணர்த்தும்.
1947, ஏப்ரல் 27-ஆம் நாள் பிறந்த பிரபஞ்சன் 1961- ஆம் ஆண்டு எழுதத் தொடங்கினார். 2017-ம் ஆண்டு அவரின் எழுத்துப்பணி 55-ம் ஆண்டைக் கடந்து தொடர்கிறது. பிரபஞ்சனின் படைப்புகள் ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம், ஜெர்மன். பிரஞ்சு மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன.
எழுத்தாளர்கள், கலைஞர்கள் வாழும் காலத்திலேயே கொண்டாடப்பட வேண்டும். ஒரு இனத்தின் பண்பாட்டுச் செழுமையைக் காப்பாற்றியும் வளர்த்தும் செழிப்படையச் செய்பவர்கள் அவர்களே ஆவார்கள். அந்தவகையில் பிரபஞ்சன் எழுத்துப் பணியைப் பாராட்ட அவரின் நண்பர்கள், வாசகர்கள் இணைந்து ‘எழுத்துலகில் பிரபஞ்சன்-55’ என்ற ஒரு நாள் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.
தமிழின் மகத்தான எழுத்தாளரை நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து கொண்டாடுவோம்.
- டிஸ்கவரி புக் பேலஸ்
26 ஏப்ரல் 2017