தலைப்பிரசவம் - கவிதை எனக்காகவே வந்தவளிங்கே... சொந்தத்தின் வாயடைக்க...
தலைப்பிரசவம் - கவிதை
எனக்காகவே வந்தவளிங்கே...
சொந்தத்தின் வாயடைக்க மெதுவாய் ,
என் காதில் சொன்னால் அந்த மந்திரத்தை...
நானோ சந்தோசத்தின் உச்சம் கண்டேன் .....
ஏனோ! தெரியவில்லை !
அன்றிலிருந்து புதிதாய் கண்டேன் என்னவளை !
ஐயோ! எத்தனை எத்தனை அழகு...
முதல் மூன்று மாதம் மசக்கை கண்டாய் !
எத்தனையோ துயரம் கொண்டாய்!
ஏழாம் மாதம் வளைகாப்பில் ,
சந்தனம் பூசிய கன்னத்தில் வழியும் புன்னகை,
கைகளில் குதூகளிக்கும் வளையல்களின் ஓசை ,
உன் வீக்கம் நிறைந்த கால்களும் !
ஐயோ! எத்தனை எத்தனை அழகடி...
இரவினிலே உன்னோடு நான் பழகும் நடைகளிளும்!!
குழந்தையைப் பற்றி நடக்கும் செல்ல சண்டைகளிளும்!!
வயிற்றில் குழந்தையின் அசைவை,
நான் தொட்டு உணர்ந்த தருணங்களிளும்!!
நிறை மாதத்திலும் எனக்காக செய்யத் துடிக்கும்
உபசரிப்புகளிளும்!!
ஐயோ! எத்தனை எத்தனை அழகடி நீ...
பிரசவ வலியில் என்னை இருக பற்றிய கைகள்,
கண்கள் நனைந்தபடி மருத்துவமனையில்
நான் காத்திருந்த தருணங்கள்...
யுகங்களாய் மாறிய நொடிகளில்...
முகமெங்கும் வியர்வைால் நீ நனைந்திருக்க!
உடல் வலுவிழந்து வீற்றிருக்க!
குழந்தையின் ஸ்பரிசத்தை தொட்டு நான்
அடையும் ஆனந்த்தை அரை மயக்கத்தில் கண்டு,
வலியில் புன்னகை பூக்கும் உன் உதடுகள்!!
உனை நோக்கிய என் சிவந்த கண்கள்,
நம் குழந்தையின் அழுகையில் மறையுதடி!
ஐயோ! எத்தனை எத்தனை அழகடி...
எனக்காக நீ வாழ்ந்து விட்டாய் பேரன்பே !
இனி என் மூச்சுள்ளவரை உனக்காக
நான் வாழ வேண்டுமடி !
நாம் வாழ வேண்டுமடி !
எழுத்தும் & பதிவும்
ந. மாதவராஜன்