தாயை வணங்கு; தந்தையைத்தொழு; தாயிற் சிறந்ததொரு கோவிலும் இல்லை;...
தாயை வணங்கு; தந்தையைத்தொழு; தாயிற் சிறந்ததொரு கோவிலும் இல்லை; கோவிலில் சென்று அடையும் புண்ணியத்தைவிடத் தாயை வணங்கிக் கிடைப்பது பெரும் புண்ணியம்’
----------------------
தாயைப் போல் பிள்ளை, நூலைப் போல் சேலை என்பார்கள். தந்தை போல் என்று எந்தப் பழமொழியும் இருப்பதாகத் தெரியவில்லை. பிள்ளை எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அது போல தாய் இருந்தாலே போதும். தானே பிள்ளை, தங்கக் கம்பி ஆகிவிடுவான். பின்னர் அதுவே தங்கக் குடமாக மாறிவிடும்.
-------------------------------------
பொறுமை, அமைதியும் நிறைந்தவள் தாய் என்பது இந்துக்கள் மரபு.
பொறுமை, அமைதி, ரத்தபாசம், தன் வயிறைப்பட்டினி போட்டு மகனுக்கு ஊட்டுதல் - இவையே தாய்மை!
இந்துக்களிடேயே ஒரு கதை உண்டு.
ஒருதாய்; அவளுக்கு ரு மகன்; அந்த மகனோ தாசிலோலன்; ஒரு தாசியிடம் மனதைப் பறிகொடுத்தான்.‘மனம் போனபடியே பொருள் போகும்’ என்றபடி பொருளையும் பறிகொடுத்தான்.
அவனிடம் பொருளில்லை என்பதை அறிந்த கணிகை அவனைத்துரத்தியடித்தாள்.
அவனோ மோக லாகிரி முற்றி “உனக்கு எது வேண்டுமோ கொண்டு வருகிறேன்ம என்று காலில் வீழ்ந்தான்.
அவள் கேலியாகச் சிரித்துக்கொண்டே, “உன் தாயின் இருதயம் எனக்கு வேண்டும்” என்றாள்.
காம மயக்கத்தில் சிக்கிய அவன், தாயிடம் ஓடினான்.
“அம்மா! அவளுக்குக் கொடுப்பதற்கு என்னிடம் ஏதுமில்லை. உன் இருதயம் வேண்டும் என்கிறாள். அவளை என்னால் மறக்க முடியாதம்மா” என்றழுதான்.
தாய் கேட்டாள்.
“அதன்மூலம் அவள் திருப்தியடைந்து உன்னுடனேயே இருப்பாளா மகனே?”
“இருப்பாள்!” என்றான் மகன்.
தன்னைக் கொண்டு இருதயம் வெட்டி எடுத்துக் கொள்ளும்படி தாய் கூறினாள்.
அவன்தாயைக் கொன்றான். இருதயத்தை எடுத்தான். வலது கையில் ஏந்தியவாறு கணிகை வீடுநோக்கி ஓடினான். வழியில் ஒரு கல் தடுக்கிக் கீழே விழுந்தான். கையிலிருந்த தாயின் இருதயம் நான்கு அடி தள்ளி விழுந்தது.
அடிபட்டு விழுந்த அவனைப்பார்த்து அதே இருதயம் சொன்னது:
“ஐயோ! வலிக்கிறதா மகனே! நான் உயிரோடில்லையே உனக்கு மருத்தவம் செய்ய!”
மகன் “அம்மா!” என்றலிறினான். அவன் ஆவிபிரிந்தது.
ஆம், அதன் பெயர்தான் தாய்மை!