எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

"இங்கேதான் இருக்கின்றார் ஆதலாலே இப்போதே வந்திடுவார்" என்று கூறி...

  "இங்கேதான் இருக்கின்றார் ஆதலாலே 
இப்போதே வந்திடுவார்" என்று கூறி 

வெங்காதல் பட்டழியும் என் உயிர்க்கு 
விநாடிதொறும் உரைத்துரைத்துக் காத்து வந்தேன். 

இங்கில்லை; அடுத்த ஊர்தனிலு மில்லை; 
இரு மூன்று மாத வழித் தூரமுள்ள 

செங்கதிரும் கதிமாறிக் கிடக்கும் டில்லி 
சென்றுவிட்டார்; என்உயிர்தான் நிலைப்பதுண்டோ? 

செழுங்கிளையில் பழம்பூப்போல், புதரில் குந்தும் 
சிட்டுப்போல், தென்னையிலே ஊசலாடி 

எழுந்தோடும் கிள்ளைபோல் எனதுடம்பில் 
இனியஉயிர் ஒருகணத்தில் பிரிதல் உண்மை! 

வழிந்தோடி வடக்கினிலே பாயும் இன்ப 
வடிவழகின் அடிதொடர்வ தென்ற எண்ணக் 

கொழுந்தோடி எனதுயிரை நிலைக்கச் செய்க 
கோமானே பிரிந்தீரா?" எனத் துடித்தாள். 

தாய் வயிற்றினின்று வந்த மானின் கன்று 
தள்ளாடும்; விழும் எழும் பின்னிற்கும்; சாயும். 

தூய்வனசப் பூங்கோதை அவ்வாறானாள். 
தோளசந்து தாளசந்து மாடி விட்டுப் 

பாய்விரிந்து கிடக்குந்தன் அறைக்கு வந்து 
படுத்திருந்தாள். அவளெதிரில் கூடந்தன்னில் 

நாய்கிடந்து குலைப்பதுபோல் கழுதைக் கூட்டம் 
நாவறளக் கத்துதல்போல் பேசலுற்றார். 

வடநாடு செல்கின்றான் அந்தப் பையன் 
உருப்படான்! வயதென்ன! நடத்தை மோசம்! 

நடப்பானா? தூரத்தைச் சமாளிப்பானா? 
நான் நினைக்கவில்லை என்று மகிழ்ச்சி கொண்டு 

திடமுடனே வஞ்சி வடிவுரைத்து நின்றாள். 
சிரிப்போடும் சினத்தோடும், "இதனைக் கேளாய் 

வடக்கென்றால் சாக்காடென்றேதான் அர்த்தம்! 
மாளட்டும்!" என்றுரைத்தான் மறைநாய்கன்தான். 

வெள்ளீயம் காய்ச்சிப் பூங்கோதை காதில் 
வெடுக்கெனவே ஊற்றியதால் அந்த மங்கை 

கள்ளீயும் பாளைபோல் கண்ணீர் விட்டுக் 
கடல்நீரில் சுறாப்போலப் படுக்கை தன்னில் 

துள்ளிஉடல் துவள்வதன்றித் தந்தை தாயார் 
துடுக்குமொழி அடக்குதற்கு வாய்தா னுண்டா? 

தள்ளஒண்ணா முடிவொன்று கண்டாள் அங்குத் 
தனியகன்ற காதலன்பால் செல்வ தென்றே. 

16. எந்நாளோ!
பாராது சென்ற பகல் இரவு நாழிகையின் 
ஈராயிரத்தி லொன்றும் இல்லை எனும்படிக்குத் 

தூங்கா திருக்கின்றேன் தொண்ணூறு நாள்கடந்தேன். 
தூங்குதல் எந்நாள்? துணைவரைக் காண்பதெந்நாள்? 

கண்டவுடன்வாரி அணைத்துக் "கண்ணாட்டி" யென்று 
புண்பட்ட நெஞ்சைப் புதுக்குவார் அப்பெருமான் 

அன்பு நிலையம் அடையும் நாள் எந்நாளோ? 
என்புருகிப் போகின்றேன் ஈடேற்றம் எந்நாளோ? 

கண்ணிற் கருவிழியும் கட்டவிழும் செவ்வுதடும் 
விண்ணொளிபோல் வீசும் சிரிப்பு விருந்துண்டு 

தோளின் மணிக்கிளையைச் சுற்றும் கொடியாகி 
ஆளன் திருவருளுக் காளாதல் எந்நாளோ? 





என்ன செயக்கடவேன் என்னருமைக் காதலரை 
இன்னேநான் அள்ளி எடுத்துச் சுவைப்பதற்கே? 

ஊரின் வணிகர் உடன்போகக் காத்திருந்தேன் 
யாரும் புறப்படவே இல்லை இதுஎன்ன?" 

என்று பலவாறழுதாள். பின் அவ்விரவில் 
சென்றுதன் தோட்டத்திற் சேர்ந்தாள். அப்புன்னைதனைக் 

கோதைகண்டாள் தன்னுட் குலையதிர்ந்தாள்; தாங்காத 
வாதைகண்டாள். ஓடி மரத்தைத் தழுவித்தன் 

கூந்தல் அவிழக் குளிர்விழியில் நீர்பெருக 
ஆந்தைபோல் தந்தை அலறி மிலாரெடுத்துப் 

பொன்னுடம்பு நோகப் புடைக்க அவரைப் பிணித்த 
புன்னை இதுதான்! புடைத்ததுவும் இவ்விருள்தான்! 

தொட்ட போதெல்லாம் சுவையேறும் நல்லுடம்பை, 
விட்டபோ தின்ப வெறியெடுக்கும் காதல்மெய்யைக் 

கட்டிவைத்த காரணத்தால், புன்னை நீ காரிகைநான் 
ஒட்டுறவு கொண்டுவிட்டோ ம். தந்தை ஒரு பகைவன்! 

தாயும் அதற்கு மேல்! சஞ்சலந்தான் நம்கதியோ? 
நோயோ உணவு? நாம் நூற்றாண்டு வாழ்வோமோ? 

சாதல் நமைமறக்கத் தானென்ன காரணமோ! 
ஏதோ அறியேன் இனி.   

பதிவு : Padmamaganvetri
நாள் : 13-Aug-17, 11:39 am

மேலே