வெற்றிகளின் போது நான் முகம் புதைத்துக் கொண்ட மடி...
வெற்றிகளின் போது
நான் முகம் புதைத்துக் கொண்ட
மடி எங்கே?
சிறுசோகமும் என்னை தீண்டாமல்
என் தலைசாய்த்துக் கொண்ட
தோள்கள் எங்கே?
சிறு காய்ச்சல்
நான் கொண்டாலும்
ஏங்கி உடல் இளைத்த
அந்த நேசம் எங்கே?
நோய் காணும் போது
உன் தாயாய் என்னை காணும்
மகள்களுக்கு மட்டுமே கிடைக்கும்
அந்த பாசம் எங்கே?
ஒவ்வொரு விடியலும்
உம் காலை வணக்க குறுந்தகவல்
வந்து சேராதோ என்னும்
தேடலோடு தொடங்கி...
ஒவ்வொரு இரவும்
இணைந்து உண்ட இரவு உணவுகளும்,
நமது இரவுநேர
உரையாடல்களும்,
திரும்ப வருமோ என்ற
ஏக்கத்தோடும் நகருகிறது...
அரை நிமிடம் கூட
என்னை மறவாமல்
மனதில் சுமந்த தந்தையே!
வாழ்நாள் முழுவதும்
எவ்வாறு உம் நினைவுகளை
மனதில் சுமந்து கடந்தேனோ???
என் விரல்களின் நடுக்கம்
இவ்விசைப்பலகையும்,
என் கண்ணீரின் கணம்
இந்த தொடுத்திரையுமே அறியும்!
உயிர் தந்த உறவே
என்னை விட்டு
எங்கே சென்றாயோ!!!