எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

​தீபாவளி தின அனுபவம் -------------------------​--------- ​இன்று தீபாவளி என்பதால்...


​தீபாவளி தின அனுபவம் 

-------------------------​---------

​இன்று தீபாவளி என்பதால் சற்று யோசித்தேன் முதலில் .இன்று வெளியில் போகத்தான் வேண்டுமா என்று . காரணம் எனக்கு பட்டாசு என்றாலே பயம் சத்தம் அலர்ஜி . இரண்டுமே முழுவதுமாக வீதிகளில் ஆக்கிரமித்து கொண்டிருந்த நாளிது .மேலும் இரவு நேரம் என்றால் எங்கு எப்படி வெடி வைப்பார்கள் எவ்வளவு சத்தம் இருக்கும் நம்மீது வந்து விழுமா என்ற பயம் வேறு .இவ்வளவு யோசனைக்கும் இடையில் எல்லையை பாதுகாக்கும் இராணுவ வீரனை போல சற்று மிடுக்குடன் தைரியமாக வெளியே புறப்பட்டேன்  வழக்கம் போல . 

பக்கத்து வீட்டில் ஒரு நடுத்தர வயதுள்ள நண்பர் கையில் மத்தாப்புகளை கொளுத்தி வைத்து அவரின் குழந்தைக்கு காட்டிக் கொண்டிருந்தார் . ஒரு பக்கம் புஸ்வானம் எரிந்து கொண்டு வண்ணக் கதிர்களை உமிழ்ந்துக் கொண்டிருந்தது .  அதைக் காணும்போது தனது வயிற்றுப் பிழைப்பிற்காக , தொழிலாக தங்கள் கரங்களால் செய்த சிவகாசியில் பட்டாசு தொழிற்சாலையில் உழைக்கும் ஏழை தினக்கூலிகளின் சிரிப்பாக தெரிந்தது . மனம் அவர்களை நினைத்து கொண்டே கடக்கும் போதே பலத்த வெடி சத்தம் கேட்கவே சற்று அதிர்ந்து நோக்கினேன் . எதிர் வரிசையில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றில் அங்கிருந்தவர்கள் சேர்ந்து ஆளாளுக்கு பட்டாசு வெடிப்பதைக் கண்டேன் . பரவாயில்லை இன்று ஒரு நாளாவது ஒன்றிணைந்து சேர்ந்து உள்ளார்களே என்று நினைத்துக் கொண்டேன் . அந்த அளவுக்கு பகையாளிகள்  ​மற்ற நாட்களில் . ஒருவழியாக மெயின் ரோட்டிற்கு வந்தேன் . 

ஒரு நூறடி நடந்தேன் . அப்போது ஒரு காட்சி கண்ணில் பட்டது . சுமார் 25 வயதுள்ள இளைஞர்  ஒருவர் குப்புற விழுந்து கிடந்தார் . அவர் அணிந்திருந்த உடையை பார்த்தால் புத்தாடை என்று நன்றாக தெரிந்தது . அருகில் சென்று பார்த்தேன் ...டாஸ்மாக் வாடை தூக்கியது . மனம் கனத்தது . தீபாவளி கொண்டாட்டத்தின் உச்சமோ என்று நினைத்தேன் . மற்றவர்கள் போல நானும் கடந்தேன் . வேறு வழி தெரியவில்லை .

ஒரு நான்கைந்து கட்டடங்கள் தள்ளிச் சென்றதும் மற்றொரு காட்சி . மிகவும் முதியவர் லுங்கி அணிந்திருந்தார் சட்டை பாதி கழன்றிந்த நிலையில் மல்லாந்து படுத்திருந்தார்​. கால்கள் சாலையில் தலை நடைபாதையில் இருந்தது . ஒரு காலில் ஏதோ அடிபட்டு கட்டுப் போடப்பட்டு இருந்தது . அவரையே உற்று பார்த்தேன் . அப்போது சற்று தள்ளி நின்றிருந்த ஒரு ஆட்டோ ஓட்டுனரிடம் கேட்டேன் . என்னப்பா ஆச்சு ...அடிப்பட்டு விழுந்து இருக்கிறாரே என்றேன் . அவன் சாதாரணமாக சிரித்துக் கொண்டே , சார் அவர் நல்லா குடித்துவிட்டு விழுந்து இருக்கிறார் சார் என்றான் . எனக்கு தூக்கி வாரிப் போட்டது . மிகவும் அருகில் சென்று மெதுவாக கூப்பிட்டு பார்த்தேன் . எந்தவித சலனும் இல்லை . ஒன்றும் புரியவில்லை மனதும் கேட்கவில்லை . அந்த ஆட்டோ ஓட்டுனரை அழைத்து வாருங்கள் சார் அவரை ஓரமாக படுக்க வைக்கலாம் என்றேன் . அவர் உடனே சார் நமக்கு ஏன் அந்த வேலை . நாலு நாளைக்கு முன்னால் நான் ஒரு ஆளை எழுப்பி உட்கார வைத்தால் அவர் உடனே எனது பர்சில் 2000 ரூபாய் பணம் வைத்திருந்தேன் எடுத்தாயா போனையும் காணொமே என்றார் சார் . அவனை சண்டை போட்டு அனுப்பி வைத்தேன் சார்.  அதனால் தான் சொல்றேன் சார் ,ஏன் நமக்கு அந்த வம்பு என்றார் . இப்படியும் பிரச்சினை வருமா என்று எனக்குள் கூறிக்கொண்டே நகர்ந்தேன் . 
அப்போதுதான் கவனித்தேன் ஒரே கூட்டமாய் பலர் இருந்ததை. புரிந்துகொண்டேன் . அந்த wine shop அருகில்தான்  உள்ளதை கவனித்தேன் . அதெப்படி அரசாங்கமே பண்டிகையன்று மொத்தமாக விடுமுறை அளித்துவிட்டு ஊரே கொண்டாடி கொண்டிருக்கும் வேளையில் இந்த மதுக் கடைக்கு மட்டும் விடுமுறை அளிக்காமல் நடத்திக் கொண்டிருப்பது வேதனையாக வேடிக்கையாக விநோதமாகவும் ஆத்திரமாகவும் வந்தது . சுமார் முப்பது பேர் மேல் நின்று கொண்டிருந்தார்கள் வாங்குவதற்கு அங்கே . உள்ளே Bar ல் எவ்வளவு பேர் இருந்தார்கள் என்று தெரியவில்லை .
அவரவர் குடும்பங்களில் வெளியில் சென்றவர்கள் இன்னும் வரவில்லையே என்று மடியில் நெருப்பை கட்டிக் கொண்டு காத்திருப்பார்கள் . பிள்ளைகள் ஆவலுடன் காத்திருக்கும் அப்பா ஏதாவது வாங்கி வருவார் என்ற நம்பிக்கையில் ....அத்தனையும் ...????

நான் மிகுந்த வருத்தமுடன் வீடு திரும்பினேன் . அரசை குறை கூறுவதா ...அல்லது வெளியில் சென்றுகுடித்துவிட்டு சாலையில் விழுந்திருக்கும் மனிதர்களை குறை சொல்வதா ..என்று புரியவில்லை . இன்று தீபாவளி பண்டிகை என்பதால் சிலர்  நமக்கு ஆடைக்கும் ஒருவேளை உணவிற்கும் வழியில்லை என்று கவலையிலும் ஏக்கத்திலும் எத்தனை குடும்பங்கள் தவித்துக் கொண்டிருக்கிறது ...ஆனால் இவர்களோ இந்த நிலையில் கடையில் காத்துக் கொண்டிருப்பது ஏதோ இனம் புரியாத வலியுடன் மனநிலை மாறியது எனக்கு . 

இது சற்றேறக்குறைய ஒரு மணி நேர முன்பு நடந்த நான் கண்ட காட்சிகள் . பெற்ற அனுபவத்தின் பதிவு . என்றுதான் இந்நிலை மாறுமோ ...

சாதாரணமாக நாளும் இன்று மக்கள் ரேஷன் கடைக்கு சென்று பொருட்களை கேட்டால் கையிருப்பு , stock தீர்ந்துவிட்டது அல்லது வரவேயில்லை என்று அலைக்கழித்து அவர்களை எவ்வளவு வேதனைக்கு ஆளாக்கிடும் அரசாங்கங்கள் , மதுக்கடைகளில் மட்டும் எப்போதும் இல்லை என்று கூறாமல் விடுமுறை அளிக்காமல் இப்படி விற்றால் ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களின் நிலைதான் என்ன ...என்றுதான் விடியும் ...முடிவுதான் எப்போது என்ற கேள்விக்குறியோடு தூங்கிட செல்கிறேன் நானும் . 

  பழனி குமார் 
   18.10.2017              



நாள் : 19-Oct-17, 6:36 am

மேலே